12 ஆயிரம் பேரை நீக்கும் டிசிஎஸ்.. அச்சத்தில் ஐடி ஊழியர்கள்!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12 ஆயிரத்து 261 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 2% ஆகும். மத்திய நிலை மற்றும் உயர் நிலைகளில் பணிபுரிவோரே இந்த பணி நீக்க நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்படுவர் எனத் தெரிகிறது. இந்திய நிறுவனம் ஒன்று ஒரே நேரத்தில் இவ்வளவு பேரை நீக்குவது இதுவே முதல்முறை. வெளிநாடுகளில் இந்த போக்கு அண்மைக்காலமாகவே தீவிரமடைந்துள்ளது.
உலகின் 2ஆவது மதிப்பு மிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்டும் 15 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது. இன்டெல் நிறுவனம் 24 ஆயிரம் பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 25% ஆகும். ஜப்பானின் பானசோனிக் 10 ஆயிரம் பேரை நீக்குவதாக அறிவித்துள்ளது.
மார்க் ஜக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் இந்தாண்டு தொடக்கத்திலேயே 5% பணியாளர் குறைப்பை அறிவித்திருந்தது. இந்த பணி நீக்கம் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏஐ தொழில்நுட்பம் எனக் கூறப்படுகிறது. எதிர்கால சூழலுக்கேற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும் எனவேதான் பணியாளர் குறைப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளார் டிசிஎஸ்சின் நிர்வாக இயக்குநர் கீர்த்திவாசன். டிசிஎஸ்ஸின் இந்நடவடிக்கை பிற ஐடி நிறுவன ஊழியர்களையும் பதற்றத்தில் தள்ளியுள்ளது.
உலகளவில் பணியாளர் நீக்கம் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும் Layoffs.fyi என்ற அமைப்பு 2025இல் மட்டும் 169 நிறுவனங்கள் 80 ஆயிரம் பேரை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு 551 நிறுவனங்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரை நீக்கியிருந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை, சர்வதேச பொருளாதார சூழல்களே இதற்கு காரணம் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வதே இத்ததைய மாற்றங்களை எதிர்கொள்ள ஒரே வழி என்கின்றனர் நிபணர்கள். உலகம் வேகமாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கு மாறிவரும் நிலையில் சந்தைகளின் தேவைக்கேற்ற வகையில் கல்லூரி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என்றும் மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.