”2021-க்குப் பின் நடந்த 25 தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு?” - அமித்ஷா Vs பிரியங்கா!அனல்பறந்த வாதம்!
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்த இரண்டு நாட்களாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பற்றியும், பாகிஸ்தானை விமர்சித்தும் பேசியிருந்தார். அதேநேரத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்தோ, தீவிரவாதிகள் ஊடுருவியது குறித்தோ, அவர்கள் பிடிப்பட்டனரா என்பது குறித்தோ எந்த விளக்கமும் தரவில்லை.
இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான கௌரவ் கோகோய், ”பாகிஸ்தான் மண்டியிடத் தயாராக இருந்தால், நீங்கள் ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் யாரிடம் சரணடைந்தீர்கள் என்பதை மோடியிடமிருந்து நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஏனெனில், மோதலை நிறுத்துமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் கட்டாயப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 26 முறை கூறியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பது? இதற்கு யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்றால் அது மத்திய உள்துறை அமைச்சர்தான்” எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடைபெறும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி, எம்.பி. சசி தரூருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மக்களவையில் இதுதொடர்பாக உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம். மோடி அரசு மன்மோகன் அரசைப்போல் அமைதியாக இருக்காது. பிரதமர் மோடி உத்தரவை அடுத்து அனைத்து பயங்கர முகாம்களையும் அழித்துவிட்டோம். இப்போது நடப்பது மோடி ஆட்சி. மன்மோகன் ஆட்சி அல்ல. நேருவின் போர் நிறுத்தால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்றிருந்தால் பிரச்னை வந்திருக்கிறாது. பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை ஏள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம்” எனத் தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்த உரைக்கு வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது உரையில், "பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. 2021-க்குப் பின் 25 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதற்கெல்லாம் யார் பொறுப்பு? காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததற்குப் பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். அதேபோல பஹல்காம் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத்துறை தலைவர் பதவி விலகுவார்களா? இந்த அரசு எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. அவர்களுக்குப் பொறுப்பு இல்லை. உண்மை என்னவென்றால், அவர்களின் இதயத்தில் மக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம் மட்டும்தான். நேருவும் இந்திரா காந்தியும் என்ன செய்தார்கள் என்பது பற்றி இன்று மத்திய உள்துறை அமைச்சர் பேசினார். அவர் என் தாயின் கண்ணீர் பற்றிகூடப் பேசினார். ஆனால் போர் நிறுத்தம் ஏன் அறிவிக்கப்பட்டது என்பதற்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி குறித்துப் பேசும் மத்திய அரசு, பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்துப் பேச மறுப்பது ஏன்? காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் தீவிரவாத அமைப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன” என அவர் கேள்வி எழுப்பினார்.