”யாரிடம் வேண்டுமானாலும் ரிப்போர்ட் செய்..” மைதான ஊழியருடன் கம்பீர் மோதல்! வெளியான காரணம்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் இருந்த நிலையில், 3வது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இந்த சூழலில் மான்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில், இங்கிலாந்து அணியே வெற்றுபெறும் என்ற கணிப்பே எல்லோருக்கும் இருந்தது.
ஆனால் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் 3 பேரின் அற்புதமான சதத்தின் உதவியால் போட்டியை டிரா செய்த இந்திய அணி, தொடரை சமன்செய்யும் வாய்ப்பை 5வது போட்டியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டி அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது.
பிட்ச் கியூரேட்டருடன் சண்டையிட்ட கம்பீர்..
ஓவலில் நடக்கவிருக்கும் 5வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே மீதமிருக்கும் நிலையில், இன்று இந்திய அணி மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டது. அப்போது மைதானத்தில் இருந்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் அனைவரும் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று ஆய்வுசெய்தனர்.
அப்போது திடீரென கிரவுண்ட்மேனின் தலைமை அதிகாரி வந்து இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்தபேச்சு வளர்ந்து பின்னர் கம்பீர் அவரிடம் வேகமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியானது. அதில் பிட்ச் கியூரேட்டர் “நான் இதுகுறித்து ரிப்போர்ட் செய்ய முடியும்” என தெரிவிக்க, “நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று கூறுங்கள், என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களிடம் சொல்ல முடியாது. இங்கு நீங்களும் கிரவுண்ட் மேன்களில் ஒருவர் தான், அதற்கு மேல் எதுவும் கிடையாது” என கம்பீர் காட்டமாக தெரிவித்தார்.
மோதலுக்கு என்ன காரணம்?
மைதான ஊழியருடன் கம்பீர் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, என்ன காரணம்? ஏன் கோவமாக பேசுகிறார்? என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
ஒருவழியாக என்ன பிரச்னை என்பது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ஆடுகளத்தை ஆய்வுசெய்துகொண்டிருக்கும் போது, திடீரென வந்த மைதான ஊழியர் பிட்ச்சிலிருந்து 2.5 மீட்டர் இடைவெளியில் கயிற்றுக்கு வெளியே நின்று விக்கெட்டை பாருங்கள் என்று கூறினார். அப்படி இதுவரை யாரும் சொல்லி நான் பார்த்ததில்லை.
ஆடுகளத்தை பார்ப்பது சாதாரண விசயம் தான், ஆனால் அவர் வெளியேற சொன்னார். அதனால் தான் கம்பீர் பேசினார். பின்னர் நாங்கள் ஷூ எதுவும் அணியவில்லை, எந்த சேதமும் ஆகாது என்று கூறினோம். பிட்ச் கியூரேட்டருடன் இலகுவாக இருக்கமுடியாது என்பதை தெரிந்துகொண்டோம். இதுகுறித்து நாங்கள் புகார் எதுவும் அளிக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.
கம்பீருடன் வாக்குவாதம் செய்துவிட்டபிறகு சென்ற பிட்ச் கியூரேட்டருன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் “நடக்கப்போகும் 5-வது போட்டி மிக முக்கியமானது. எனக்கு இதற்குமுன்பு கம்பீரை தெரியாது, அவர் அப்படி கோவப்படுவார் என்பதும் தெரியாது. அவருடன் மகிழ்ச்சியாக இருப்பது என்னுடைய வேலையும் இல்லை” என தெரிவித்தார். அவரிடம் என்ன காரணம் என்று கேட்கப்பட்டபோது, அதை அவரிடமே கேளுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.