"நீங்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் செய்வோம்" - என்ன பேசினார் செங்கோட்டையன்?
செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுகிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்த நாள் முதலே தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்பது குறித்து கடந்த சில தினங்களாக மிகப்பெரிய விவாதமே நடந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அவர் என்ன பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல குளறுபடிகள் நடந்தபோதெல்லாம் அமைதி காத்த செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாக தனது மனக் குமுறலை வெளிப்படுத்த துவங்கியுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலையில் எடப்பாடியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் 6 பேர், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அணிகளை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதில் செங்கோட்டையனும் ஒருவர். அதற்கு பிறகான காலகட்டத்தில், அப்படி ஒரு ஆலோசனையே நடக்கவில்லை என்று எடப்பாடி மறுக்க, ஆலோசனை நடந்தது உண்மைதான் என்று பொதுவெளியில் போட்டுடைத்தார் செங்கோட்டையன்.
கடந்த பிப்ரவரியில், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததன் மூலம், இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு பட்டவர்த்தனமாக தெரிந்தது. கூட்டத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததாலேயே புறக்கணித்ததாக கூறிய செங்கோட்டையன், இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள் என்று வெடித்துப் பேசினார்.
தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தவர், மார்ச் மாதத்தில் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. மார்ச் மாதத்திலேயே, பேரவை கூடும் முன் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியது, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது.. சட்டசபையில் தனியாக அமர்ந்தது என்று செங்கோட்டையன் செயல்பாடுகள் அதிமுகவில் புயலை கிளப்பியது.
கடந்த ஜூலையில், கோவையிலிருந்து இபிஎஸ் சுற்றுப் பயணத்தை தொடங்கியபோதும், ஈரோட்டில் பரப்புரை செய்தபோதும் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன், மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. இதையடுத்து இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதையொட்டி செங்கோட்டையன் இல்லம் மற்றும் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் கூடினர். அலுவலகம் முன் அவர் பேசுவதை ஒளிபரப்ப எல்.இ.டி திரைகளும் வைக்கப்பட்டிருந்தன. செங்கோட்டையன் வழக்கமான வாகனத்திற்கு பதிலாக பரப்புரை வாகனத்தில் தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பினார். வீட்டில் இருந்து அலுவலகம் வரும் வரை திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று காலை 9.40 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”தமிழ்நாடு முழுவதும் போக வேண்டிய பேட்டி இது” என்று தொடக்கத்திலேயே குறிப்பிட்டார் செங்கோட்டையன். தொடர்ந்து மேசையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படடங்களுக்கு மரியாதை செலுத்தி பேட்டியை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், "1972இல் இந்த இயக்கத்தை தொடங்கியபோதே எங்கள் கிராமத்தில் கிளைக் கழகத்தை உருவாக்கினோம். எம்ஜிஆர் செல்வாக்குமிக்க தலைவராக, பேரறிஞர் அண்ணாவால் போற்றப்படும் தலைவராக வாழ்ந்தார். 1975இல் பொதுக்குழு கோவையில் நடந்தது. அப்போது அரங்கநாயகம் தலைவர், திருப்பூர் மணிமாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த வேண்டுமென்று எனக்கு ஆணை வழங்கப்பட்டது. அதை நாங்கள் முழுமையாகச் செயல்படுதியதைத் தொடர்ந்து, எங்களை நேரில் அழைத்து எம்ஜிஆர் பாராட்டினார். அதன்பிறகு, 1977இல் சத்தியமங்கலத்தில் என்னைப் போட்டியிட எம்.ஜி.ஆர். சொன்னார். அதற்கு நான், ’சத்தியமங்கலம் எனக்கு புதிதான தொகுதி’ என்று சொன்னபோது, ’என் பெயரை உச்சரி.. வெற்றிபெற்றுவிடுவாய்’ எனச் சொன்னார்.
இந்த இயக்கத்தில் இருந்து வெளியில் சென்றவர்களின் வீடுகளுக்கே சென்று, தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களின் நலன் கருதி தன்னுடன் பயணிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர். அழைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு ஆளுமைமிக்க தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். மக்களுக்காகப் பணியாற்ற உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக பொதுச்செயலாளராக நியமித்தோம். பின் மீண்டும் முதலமைச்சர் யார் என்று கேள்வி வந்தபோது தற்போதைய எதிர்க்கட்சி தலைவரை முன்மொழிந்தார்.
இயக்கத்தில் தடுமாற்றங்கள் வந்தபோது ஜெயலலிதா என்னைப் பாராட்டியதும் எல்லோருக்கும் தெரியும். நெடும்பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது பல்வேறு பொறுப்புகள் கிடைக்கும். பல்வேறு சோதனைகள் வரும். ஆனால், இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டு அத்தனை பணிகளையும் நான் ஆற்றியிருக்கிறேன். இரண்டு வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைத்தபோதும் இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தில்தான் என் பணிகளை மேற்கொண்டேன்.
2019 தேர்தல், 2021, 2024 தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல்வேறு தேர்தல்களைச் சந்தித்தபோது களத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. 2024இல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றிபெற்றிருக்க முடியும் என இன்று சொல்கிறோம். ஆனால், இதையெல்லாம் நாங்கள் அவரிடத்தில் (இபிஎஸ்) நினைவூட்டினோம். தேர்தல் முடிந்தபிறகு பொதுச்செயலாளரை சந்தித்தோம். ’கழகத்தை ஒன்றிணைக்க வேண்டும், வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்’ என நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், அன்பழகன் என நான் உள்பட 6 பேரும் பொதுச்செயலாளரை சந்தித்து முன்வைத்தோம். ஆனால், அந்தக் கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.
மறப்போம்.. மன்னிப்போம். வெளியே சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டும்தான் இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தாண்டி செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லை. அவர்கள் கற்றுத்தந்த பாடம் இது. வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். இதை யார் சொல்வது எனும் நிலையில்தான் நான் சொல்கிறேன். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் தேவை என்றால் வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.
விரைந்து அதை முடிக்க வேண்டும். தேர்தல் களத்தில் எல்லோரும் தங்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். எனவே விரைந்து நல்ல முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி விரைந்து மேற்கொள்ளவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதை செயல்படுத்த பணிகளை மேற்கொள்வோம். பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதில் ஒரு முடிவு வந்தால்தான், அந்த வெற்றிப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்" எனத் தெரிவித்தார்.
இறுதியாக, பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்கள் கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார். அப்படி நடந்தால்தான் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன் என்றும் அழுத்தமாக தெரிவித்தார். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை இதன்பிறகு சந்திப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ’’பொறுத்திருந்திருந்து பாருங்கள்’’ என்று சொல்லிய அவர், ’’இதற்கு முன் பார்த்தீர்களா’’ என்ற கேள்விக்கு, ’’அது சஸ்பென்ஸ்’’ என்று சொல்லி முடித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக கோரிக்கை விடுத்து செங்கோட்டையன் பேசியுள்ள இந்த கருத்துகள் அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கியமாக, இந்தப் பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமியின் பெயரை, செங்கோட்டையன் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்றே குறிப்பிட்டார்.