"முன்பை விட வேலைகளை குறைத்து கொள்ள இதுவே காரணம்" - ஏ ஆர் ரஹ்மான் | A R Rahman
முன்பெல்லாம் இரவு பகல் பாராது வெறிபிடித்த மாதிரி வேலை செய்திருக்கிறேன். வாழ்க்கையை தொலைத்திருக்கிறேன். அப்படி வேலை செய்யும் போது சோர்வு வரும்.
ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர். ஒரு காலகட்டத்தில் அனைத்து மொழிகளிலும் பரபரப்பாக இயங்கிவந்தவர், இப்போது மிகவும் தேர்ந்தெடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சூர்யா நடித்துள்ள `கருப்பு' படத்திற்கு கூட இசையமைப்பதாக ஆரம்பத்தில் ஒப்பந்தமான ரஹ்மான், பின்பு படத்திலிருந்து விலகிக் கொண்டார். தற்போது இவர் இசையமைத்துள்ள `Ufff Yeh Siyapaa' என்ற இந்தி படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், தான் எதற்காக குறைவான படங்களில் பணியாற்றுகிறேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் ரஹ்மான்.
முதலில் Ufff Yeh Siyapaa படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசியவர், "இது போன்ற வசனங்களே இல்லாத படத்தில் பணியாற்றுவது, ஒரு இசையமைப்பாளரின் கனவு. அப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததும் நான் எடுத்துக் கொண்டேன்" என்றார்.
பல தரப்பட்ட வேலைகளுக்கு நடுவே எப்படி உங்கள் நேரத்தை கையாள்கிறீர்கள், உங்களுக்கு என நேரம் ஒதுக்க முடிகிறதா? எனக் கேட்கப்பட, "சில நேரங்களில் நாம் திட்டமிடுவது போல எல்லாம் நடப்பதில்லை. சில நேரங்களில் நடக்கும். அதனை நான் குறை சொல்லப்போவதில்லை. அவை நம்மை மீறிய ஒன்று. தண்ணீரைப் போல, தன் போக்கில் நான் செல்கிறேன். அதை எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்துக்கு மாறுவது போல் நானும் இருக்கிறேன். கடவுள் எனக்கான நேரத்தை தரவே செய்கிறார்"
மேலும் முன்பை விட வேலைகளை குறைத்துக் கொண்டது பற்றி குறிப்பிடும் போது, "நான் முன்பை விட வேலைகளை குறைத்துக் கொண்டேன். எனவே வாழ்வை அனுபவிக்க முடியும், புது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும், வேலையையும் செய்ய முடியும். முன்பெல்லாம் இரவு பகல் பாராது வெறிபிடித்த மாதிரி வேலை செய்திருக்கிறேன். வாழ்க்கையை தொலைத்திருக்கிறேன். அப்படி வேலை செய்யும் போது சோர்வு வரும். அதே சமயம் மிக குறைவாக வேலை செய்வதும் சிக்கல் தான். பணியில் பல விஷயங்கள் மறக்க கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே வேலையை அதிகமாகவும் செய்யக் கூடாது குறைவாகவும் செய்யக் கூடாது. சரியான சமநிலையில் இருக்க வேண்டும்." எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது ஏ ஆர் ரஹ்மான் இசையில் `மூன் வாக்', `கில்லர்' ஆகிய தமிழ் படங்களும், `Gandhi Talks', `Tere Ishk Mein', `Ramayana: Part 1' ஆகிய இந்தி படங்களும், Peddi என்ற தெலுங்கு படமும் உருவாகி வருகின்றன.