செங்கோட்டையன் மீது பாஜகவின் கடைக்கண் பார்வை? என்ன நடக்கிறது அதிமுகவில்?
எம்ஜிஆருடன் சட்டப்பேரவையில் வீற்றிருந்தவர், ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர் என, செங்கோட்டையனின் பயோகிராஃபியில் எழுதியே ஆக வேண்டும். எம்ஜிஆர் காலத்தில், 1977 இல் முதல்முறையாக சத்தியமங்கலம் எம்எல்ஏவாக பேரவைக்குள் நுழைந்தவர். 1980 முதல் இப்போது வரை கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவாக உள்ளார். 1996இல் முதல்முறையாக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர் செங்கோட்டையன். 2011இல் வேளாண்அமைச்சர், 2016இல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என, கோவை மண்டலத்தில் அதிமுகவின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவர் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் – பழனிசாமி இருவருமே கொங்கு மண்டலம்தான். விளைவாக, செங்கோட்டையனுடன் பழனிசாமிக்கு ஆரம்பம் முதலாகவே பனிப்போர்தான்! தமிழக முதல்வராக பழனிசாமி அரியணை ஏறிய பிறகு, செங்கோட்டையன் மேலும், சரிவைக்கண்டார். கோவையின் எஸ்.பி.வேலுமணி, நாமக்கல் தங்கமணி ஆகியோரை தனது நெருக்க வட்டத்தில் கொண்டுவந்து, கொங்கு மண்டலத்தில்தன் பிடியை மேலும் இறுக்கினார் பழனிசாமி. கட்சியின் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராக செங்கோட்டையன் இருந்தாலும், புதியபதவிகளை உருவாக்கி, முன்னாள் எம்எல்ஏ ராஜா, முன்னாள் எம்எல்ஏ வி.கே.சின்னசாமியின் மகன் சிவகுமார் ஆகியோரை நியமித்தார். இது மிகுந்த சலசலப்பானதால், பின்னர் நியமனத்தை பழனிசாமி ரத்துசெய்துவிட்டார் என்றாலும், இது செங்கோட்டையன் மனதில் ஆறாக்காயமாக மாறிவிட்டது. கட்சிக்குள் தன்னை முன்னிலைப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் பழனிச்சாமி, என்று சுற்றியுள்ளோரிடம் புலம்பிவந்தார் செங்கோட்டையன்.
இத்தகு சூழலில்தான், பிப்ரவரி மாதம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கான பாராட்டு விழா தருணத்தில், "விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை" என்பதை பிரச்சினையாக்கினார் செங்கோட்டையன். பழனிசாமியிடமும் அவரது ஆதரவாளர்களிடமும் இடைவெளியைப் பின்பற்றினார். சட்டமன்றத்திலும் கூட இடைவெளியை பராமரித்தார். இடையில் சமாதானம் உண்டானாலும், அது வெகுநாள் நீடிக்கவிக்லை. விளைவாக கட்சிப் பிரச்சினையை பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார் செங்கோட்டையன்.
சரி, என்ன திட்டத்தில் இருக்கிறார் செங்கோட்டையன்?
திமுக அல்லது பாஜக போன்று சித்தாந்த அடிப்படையிலான கட்சி இல்லை அதிமுக. திமுக போன்று 10, 15 ஆண்டுகள் வரை ஆட்சி அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்த மரபும் அதிமுகவுக்கு கிடையாது. கவர்ச்சிகரமான ஆளுமை மிக்க தலைவர் என்பதே அதிமுகவின் மையசக்தி. அந்தந்த பிராந்தியங்களில் வலுவான ஆட்களையும், எல்லா சமூகங்களையும் அரவணைத்தபடி ஒருங்கிணைத்து செயல்படுவது அதிமுகவின் வெற்றி உத்தி! இந்த இரண்டு விஷயங்களிலுமே பழனிசாமி சறுக்கிவிட்டதாக செங்கோட்டையன் நினைக்கிறார். இதே போன்ற எண்ணத்தில் அதிமுகவில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுடனும் செங்கோட்டையன் தொடர்பில் இருக்கிறார். இப்படியான அதிர்ச்சியாளர்களின் பிரதிநிதியாகதான் தன்னை செங்கோட்டையன் முன்னிறுத்துகிறார்.
கடந்த மார்ச் மாதம் டெல்லி சென்ற செங்கோட்டையன், அமித் ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். ஏப்ரல் மாதம் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தபோதும், அவரை சந்தித்தார் செங்கோட்டையன். இதே தருணத்தில் பழனிசாமியும், அவசர அவசரமாக டெல்லிக்கு ஃப்ளைட் ஏறி, பாஜக தலைவர்களை சந்தித்தார். அங்கு அதிமுகவின் புதிய கட்டடத்தை பார்க்க வந்ததாக செய்தியாளர்களிடம் கூறி சமாளித்தார். அதன் பின்னர்தான் பாஜகவுடன் கூட்டணியை அறிவித்தார்.
எப்போதுமே பாஜக – அதிமுக இடையிலான ஆலோசனைகளில் முக்கிய இடம் வகிப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் ஒன்றிணைந்த அதிமுகவே அவரது நிலைப்பாடு. கடந்த ஏப்ரலில் அமித் ஷா சென்னை வந்தபோது, அவரிடம் குருமூர்த்தி வலியுறுத்தியதும் இதைத்தான். பலம் வாய்ந்த கூட்டணியுடன் திகழும் திமுகவுக்கு எதிராக, வரும் தேர்தலில் இதே பிளவுகளுடன் அதிமுக நீடித்தால், தேர்தலை வெல்லவே முடியாது என்பதே குருமூர்த்தியின் கணிப்பு. அமித் ஷாவும் இந்த எண்ணத்தில்தான் இருக்கிறார் என்றாலும், கூட்டணிக்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக பழனிசாமி முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, அதிமுக உட்கட்சி விவகாரங்களிலிருந்து விலகி நின்றுகொண்டது பாஜக. ஆனால், எப்போதும் போல் குருமூர்த்தியுடன் தொடர்பில்தான் இருக்கிறார் செங்கோட்டையன்!
திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ள எல்லா கட்சிகளையுமே பாஜக குடையின் கீழ் கொண்டு வருவதுதான் அமித் ஷாவின் தமிழக வியூகம். இதற்கு நேர் மாறாக பாஜக கூட்டணியில் ஏற்கனவே இருந்த பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரது விலகல்; ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல்; பிரேமலதா கிருஷ்ணசாமி ஆகியோரது திசைமாற்ற பேச்சு... இவையெல்லாம் மிகுந்த அதிருப்தியை மோடி - ஷாவிடம் உருவாக்கியுள்ளன. இத்தகு சூழலில் செங்கோட்டையன் முன்னெடுக்கும் கலகத்தின் பின்னணியில் நேரடியாக பாஜகவுக்கு தொடர்பில்லை என்றாலும், டெல்லி தலைமையின் கடைக்கண் பார்வை செங்கோட்டையன் மீது இருக்கிறது; அதன் வெளிப்பாடே குருமூர்த்தியுடனான செங்கோட்டையனின் ஆலோசனைகள் என்கின்றன டெல்லி தகவல்கள்!