#Rewind2024|”பாஜக-க்கு வெற்றி மேல் வெற்றி” 8 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - ஆட்சியைப் பிடித்தது யார்?
இந்த ஆண்டு, நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள இருக்கிறது. எனினும், இந்த ஆண்டில் பல வரலாற்று வெற்றிகளும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. அரசியல் அளவிலும் இயற்கைச் சூழலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த வகையில், நடப்பாண்டில் இந்தியாவில் சில மாநிலங்களில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம்.
நடப்பாண்டில் மொத்தமுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்றார். இந்த நிலையில், இதே மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
அருணாச்சல் பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 46 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 6 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஎ) 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து பாஜகவே மீண்டும் ஆட்சியமைத்தது. அதன் முதல்வராக பெமா காண்டு உள்ளார்.
சிக்கிம்
சிக்கிமில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 2ஆம் தேதி வெளியாகின. அதன்படி, இங்கு மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31இல் ’சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா’ (எஸ்கேஎம்) கட்சி வெற்றிபெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) கட்சியால் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதையடுத்து, மீண்டும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவே ஆட்சியைக் கைப்பற்றியது. இம்மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங் உள்ளார்.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு, கடந்த மே மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பாரதீய ஜனதா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்தித்தன. தனித்தே தேர்தலைச் சந்தித்த ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ். அகில இந்திய காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்தது. இதில் தெலுங்குதேசம் 135 இடங்களிலும், ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் யுவஜனா 11 இடங்களிலும் வெற்றிபெற்று ஜெகன் மோகன் ஆட்சியைத் தட்டிப் பறித்தது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானார்.
ஒடிசா
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதி என 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், பாஜக 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன. பாஜக 78 தொகுதிகளிலும், பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் ஒடிசாவில் 5 முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார். பாஜக அரியணை ஏறியது. அம்மாநில முதல்வராக மோகன் சரண் மாஜி உள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த வருட இறுதியில் ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
ஜம்மு - காஷ்மீர்
இந்தியாவில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு நடந்த முதல் தேர்தல் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து, அங்கு வாக்குப்பதிவு செப்டம்பர் 18-ஆம் தேதி (செப்.25) முதல், அக்டோபர் 1-ஆம் தேதிவரை 3 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி வெளியாகின. முன்னதாக, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் பாஜகவும், பிடிபியும் தனித்துப் போட்டியிட்டன. ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 90 இடங்களில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநில முதல்வராக உமர் அப்துல்லா உள்ளார்.
ஹரியானா
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்.8ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், 48 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் 37, இடங்களில் காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசிய லோக் தளம் இரண்டு இடங்களிலும் சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றன. முன்னதாக, ஹரியானாவில் காங்கிரஸே வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. அம்மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக நயாப் சிங் ஷைனி உள்ளார்.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்டில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் கைப்பற்றின. பாஜக 21 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியைத் தக்கவைத்ததுடன், மீண்டும் ஹேமந்த சோரனே முதல்வரானார். பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த் சோரன், பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த இந்த தேர்தலை எதிர்கொண்டார். கட்சியை வளர்க்கவும், ஆட்சியைத் தக்கவும் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் மாநிலம் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மஹாயுதி கூட்டணி அமைத்தன. இதற்கு மாறாக, காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. குறிப்பாக பாஜக 132 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் கட்சி 41 இடங்களிலும் வெற்றிபெற்றன. இக்கூட்டணி வரலாற்று அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் நீண்ட இழுபறி நீடித்தது. இறுதியில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.