ரஷ்யாவில் அடைக்கலமான சிரியா முன்னாள் அதிபர் அசாத்.. தப்பிச் செல்வதற்கு முன் செய்த தரமான சம்பவம்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர்.
மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ரஷ்யா அரசாங்கம் அடைக்கலம் தந்துள்ளது. இந்த நிலையில், தப்பிச் சென்ற அசாத் முதல்முறையாக சிரியா குறித்து மவுனம் கலைத்தார்.
இதுகுறித்து அவர் “என்னைப் பொறுத்தவரை கிளர்ச்சியாளர்களை எதிர்த்துச் சண்டையிடத்தான் விரும்பினேன். நான் சிரியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பவில்லை. அதேபோல், என் பதவியை ராஜினாமா செய்து, இன்னொரு நாட்டிடம் தஞ்சமடைய கோர வேண்டும் என்று நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பஷார் அசாத் சுமார் 250 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.2,082 கோடி) ரஷ்யாவுக்கு கடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்பே தோல்வியைச் சந்திக்கலாம் என கணித்த அசாத், 2018, 2019ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு 2ஆயிரம் கோடியை அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.
மாஸ்கோவின் நுகோவோ விமான நிலையம் சென்றடைந்த கரன்சிகள், அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் அசாத்தின் உறவினர்கள் ரஷ்யாவில் சொத்துகள் வாங்கிக் குவித்ததும் தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே, அசாத் ரஷ்யா தப்பிச்சென்றுள்ளார்.