ஹைட்ரோகார்பன் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி.. வலுத்த எதிர்ப்பால் தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு!
மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்புகொள்கை அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம் விடப்பட்டது. அதில், ONGC நிறுவனத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய, 1403.41 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல் கட்டமாக சுமார் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கடந்த 2023ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது.
அந்த மனுவை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிச்சியம், பேய்குளம், காமன்கோட்டை, சீனங்குடி அழகர்தேவன் கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பு பணிகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், இந்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “வழக்கமாக ஒன்றிய அரசின் புதிய பரிவாஸ் (PARIVESH) தளத்தில் இந்த அனுமதி ஆவணத்தைப் பதிவேற்றம் செய்யாமல் யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (http://environmentclearance.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் காவிரி வடிநிலம் பாதுகாப்பு சட்டம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்ற பகுதிகளுக்குச் சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தை மீறி, ஓஎன்ஜிசி இப்படி புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கான செயல்முறை தவறானதாகும். பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் திமுக அரசு நியமித்த நிபுணர் குழு 2022 ஆம் ஆண்டு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் மாசு விளைவிக்கும் என அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையை உடனே வெளியிட்டு, அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எரிபொருள் ஆராய்ச்சி உ ரிமம் Petroleum Exploration License (PEL) அனுமதி வழங்கக்கூடாது. பேராசிரியர் சுல்தான் இஸ் மாயில் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே செயல்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளின் செயல்பாடுகளையும் முடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
பூ உலகு நண்பர்கள் சுந்தர்ராஜன் இது தொடர்பாகப் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின், தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதிகளிலும் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை நாங்கள் வழங்கமாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அவர் கூறியதன் அடிப்படையில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற சிக்கல்கள் வராது என்று விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பெரும் நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், தமிழக அரசு 20 கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியது நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். இது கடும் கண்டனத்திற்குறியது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். ஓ என் ஜி சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தி உள்ளோம். மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமத்திக்காது” எனத் தெரிவித்திருக்கிறார்.