திருப்பரங்குன்றம் | தீபத்தூணா? சர்வே தூணா? அனல்பறந்த விவாதம்.. விசாரணை ஒத்திவைப்பு! முழு விவரம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகார வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
செய்தியாளர் - இ.சகாய பிரதீபா
இந்தாண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசுப்பாண்டி, பரமசிவம் ஆகியோரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி டிசம்பர் 1ஆம் தேதி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மட்டும் மொத்தம் 26 மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோவிலின் செயல் அலுவலருக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுகளை எதிர்த்தும், நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தமிழக தலைமைச் செயலர் சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவர் காணொலி வாயிலாக ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து 6 (LPA- Letter Patent Appeal) மனுக்களும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி 20 மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், சிக்கந்தர் பாதுஷா தர்கா, கனகவேல் பாண்டியன், அரங்கநாதன் மற்றும் தமிழக அரசு உள்ளிட்டோர் தரப்பில் இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.
மாவட்ட ஆட்சியர் தரப்பு வாதம்
மாவட்ட ஆட்சியர் தரப்பிலான மேல்முறையீட்டு வழக்கிற்காக, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். " ராமரவிக்குமார் அவரது தனிப்பட்ட கோரிக்கையை உரிமையாகக் கோர இயலாது. 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. எந்த பிரச்சனையும் இல்லை. 1912 ஆம் ஆண்டில், மீண்டும் பிரச்சனை எழுந்தது. இரு முறை இது தொடர்பான மதப்பிரச்சனைகள் எழுந்துள்ளன. மீண்டும் இப்பிரச்சனை தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கனகராஜ் வழங்கிய உத்தரவில், "கார்த்திகை நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக, கடைசி நேரத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீபமேற்றும் இடத்தை மாற்ற வேண்டுமென்றாலும், அது குறித்து கோவில் தேவஸ்தானமே முடிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் அந்த உத்தரவை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், தற்போது தொடரப்பட்ட வழக்கில் தனிநீதிபதி தீபத்தூணிலும் தீபமேற்ற உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டில் விளக்கேற்றுவது தொடர்பான 2 வழக்குகளில் பாரம்பரிய இடத்திலேயே தீபத்தை ஏற்ற உத்தரவிட்டனர். 1994 ஆம் ஆண்டு உரிமை கோரிய வழக்கில் கூட மலை உச்சியில் என்றுதான் கோரப்பட்டுள்ளது. தீபத்தூண் என்றல்ல. அதோடு தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். தனிநபர் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த வழக்கின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் தாக்கல் செய்யும் விபரங்களை அப்படியே கொண்டு எடுத்துக் கொள்ள இயலாது. மத நல்லிணக்கம், பொது அமைதியைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு, முறையாக அனுமதி பெற்று தேவஸ்தானமே இடத்தை மாற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடம் தர்கா, நெல்லித்தோப்பு பகுதியிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டுமென முந்தைய உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திகைக்கு 3 நாட்களுக்கு முன்பாக தனிநீதிபதி உத்தரவிட்டு, உடனடியாக நடைமுறைப்படுத்த கூறினால் எப்படி? 2014 ஆம் ஆண்டு, தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி, " மனுதாரரின் கோரிக்கை மனுதாரர் அதிகாரிகளை ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிடும் வகையில் உள்ளது. சட்ட அடிப்படையில் அவர் கோருவது உரிமையல்ல. இந்த வழக்கில் மனுதாரருக்கு சட்ட உரிமை இல்லை. கோவில் நிர்வாகமே அதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. ஆகவே வழக்கமான இடத்தில் தீபமேற்றலாம் என உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற விவகாரங்களில் சட்ட ஒழுங்கை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டுமென்றும் உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 102 ஆண்டுகளுக்கு முன்பாக உரிமையியல் உத்தரவு, பிரைவி கவுன்சில், நீதிபதி கனகராஜின் உத்தரவு அனைத்தும் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபமேற்றப்பட்டதை உறுதி படுத்துகின்றன. எந்த பக்தரும் தீபமேற்றும் இடத்தை மாற்றவோ, இங்கு ஏற்று அங்கு ஏற்று என உரிமையாகக் கோரவோ இயலாது. இதனை உத்தரவுகள் உறுதி செய்துள்ளன. பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் தலையாய பணி. எந்த மதமாயினும், பொது அமைதியைக் குலைக்காத வகையில் வழிபாடு அமைய வேண்டும். மனுதாரர் தற்போது தொடர்ந்த வழக்கிலும் தர்கா தரப்பு சேர்க்கப்படாததால், நீதிமன்றம் அவர்களை எதிர்மனுதாரராக சேர்த்தது. தீபத்தூண் என தனிநீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையில் கல் தூண். ஆனால் தீபத்தூணா? என்பதை உறுதி செய்ய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது?- மனுதாரர் அதற்கான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் அதை( தீபத்தூண தீபமேற்றுவதை) உரிமையாக வேறு கோரியுள்ளார். அதற்கு வழிபடும் உரிமை எப்படி பொருந்தும்? தீபமேற்றும் இடத்தை மாற்றுமாறு கோர மனுதாரருக்கு உரிமை இல்லை. பழமையான பழக்கவழக்கங்களை மாற்றுமாறு கோர இயலாது. தனிநீதிபதி(ஜி.ஆர்.எஸ்) உத்தரவில், கோவிலின் சொத்து உரிமையை பாதுகாக்க என குறிப்பிட்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. சட்ட அடிப்படையிலும் ஏற்கத்தக்கதல்ல. இது அது தொடர்பான வழக்கும் அல்ல. ராமரவிக்குமாரின் வழக்கு முழுக்க முழுக்க ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவது தொடர்பானது. இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒரு விசயத்தை அமல்படுத்துமாறு கோரிய வழக்கு.
உத்தரவில் ராமஜென்ம பூமி வழக்கை நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். அது இவ்வழக்கில் பின்பற்றப்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தையே நாட உத்தரவிட்டிருக்க வேண்டும். தனிநீதிபதி முன்பாக அது தீபத்தூண் தான் என்பதை உறுதி செய்ய ஒரு பேப்பர் கூட தாக்கல் செய்யப்படவில்லை. எந்த ஆவணமும் அதற்கு இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் தூணுக்கும் தர்காவிற்குமான இடைவெளி எவ்வளவு? என கேள்வி எழுப்பினார்.
அரசுத்தரப்பில், மிகச்சரியாக தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக 15 மீட்டருக்கு அப்பால்தான் உள்ளது. கோவிலின் சொத்து உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே தொடக்கத்திலிருந்தே கோவில் தரப்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தனி நீதிபதி தனது உத்தரவில் குறைந்தபட்சம் இப்போது இருப்பதையாவது பாதுகாக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார். அது ஏற்கத்தக்கதல்ல. பாரம்பரிய இடத்தில் எனக்குறிப்பிட்டு, தீபத்தூணில் தீபமேற்ற என உத்தரவிட்டுள்ளார். அது தீபத்தூண்தான் என்பதையோ, அன்கு பழங்காலமாக தீபமேற்றப்பட்டது என்பதையோ உறுதி செய்ய எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படாத நிலையில், எப்படி அவ்வாறு உத்தரவிட இயலும்? வழிபாட்டுத்தலங்களுக்கான சிறப்புச் சட்டப்படி 1947ஆம் ஆண்டு ஒரு வழிபாட்டுத் தலம் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலே பராமரிக்கப்பட வேண்டும்- அதனடிப்படையிலும் இந்த உத்தரவு ஏற்கத்தக்கதல்ல. உரிமையியல் வழக்கின் போது அப்போதைய நீதிபதி திருப்பரங்குன்றம் சென்று ஆய்வு செய்த விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது விவரிப்பிலும் தீபத்தூண் என்ற ஒன்று குறிப்பிடப்படவில்லை. தனிநீதிபதியின் உத்தரவு 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 3 ஆம் தேதி கார்த்திகை. கடைசி நேரத்தில் உத்தரவிட்டு, உடனடியாக அமல்படுத்தக் கோரினால் எப்படி? அது தீபத்தூணா? எந்த ஆண்டு வைக்கப்பட்டது? என்பது தொடர்பான ஆவணங்கள் எதும் இல்லாமல், கேட்ட கோரிக்கை. ஆகவே, தீபத்தூண் என குறிப்பிடும் இடத்தில் தீபமேற்ற வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "தீபம் அனைவருக்கும் தெளிவாக தெரிய வேண்டுமென்பதற்காக அந்த கோரிக்கை வைக்கப்பட்டால் ஏன் அதை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர்,
அதற்கு அரசுத்தரப்பில், "வழக்கில் அது போன்ற கோரிக்கையோ, வாதமோ எதுவும் வைக்கப்படவில்லை. அப்படியிருந்தாலும் அது தொடர்பான முடிவையும் தேவஸ்தானமே எடுக்க வேண்டும். இந்த வழக்கு முழுமையாக சட்ட அடிப்படையில் மட்டுமே செல்ல வேண்டும் என விரும்புகிறோம்" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "நிரந்தர தீர்வு காணப்படுவதும் அவசியம். நீதிபதி கனகராஜின் உத்தரவின் அடிப்படையில் தீபமேற்றும் இடத்தை மாற்ற பரிசீலிக்குமாறு அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்திருக்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கோவில் செயல் அலுவலர் தரப்பு
"திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலருக்காக அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி வாதிட்டார். ராமரவிக்குமார் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதை சட்ட உரிமையாக கோர இயலாது. நீதிபதி கனகராஜின் உத்தரவில், "தேவஸ்தானமே தீபத்தை ஏற்றவும், தீபமேற்றும் இடத்தை விதிகளுக்கு உட்பட்டு மாற்றவோ இயலும்" என குறிப்பிட்டுள்ளார். 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், வழக்கமான இடத்தில் அன்று 1994ல் தீபமேற்ற உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் 2 நாள் இருக்கையில், தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் தனது கோரிக்கை மனுவில் மலை உச்சியில் தீபமேற்ற கோரினார். 2 உச்சிகளில் 1 உச்சியில் தர்காவும், மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன. மனுதாரர் தீபத்தூணில் ஏற்ற வேண்டுமென கோவில் நிர்வாகத்திற்கு அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "மனுதாரரின் கோரிக்கை மனுவை இணை ஆணையருக்கு அனுப்பாமல், செயல் அலுவலரே முடிவெடுத்துள்ளார். ஏன் இணை ஆணையருக்கு மனுவை அனுப்பவில்லை?- என கேள்வி எழுப்பினர்.
கோவில் நிர்வாகம் தரப்பில், "தூணில் தீபமேற்ற வேண்டுமென மனுதாரர் கோரவில்லை. மலை உச்சியில் தீபமேற்ற வேண்டுமென்றே கோரியிருந்தார். அவரது நோக்கம் என்ன? இடத்தை மாற்ற வேண்டுமா? என தெளிவாகக் கோரவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலும் மலை உச்சியிலேயே உள்ளது. மனுதாரரின் விருப்பத்தை சட்ட உரிமையாகக் கோரியுள்ளார். மனுதாரரின் கோரிக்கை மனுவில் குறிப்பிடாதவற்றை நீதிமன்றத்தில் மனுவாகக் கோரியுள்ளார். உண்மையான தீபத்தூணில் ஏற்ற வேண்டுமென கோரியுள்ளார். அவ்வாறெனில் மற்றொரு போலி தீபத்தூண் உள்ளதா? மனுதாரர் மிகவும் மேலோட்டமாக வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். தனிநீதிபதியின் உத்தரவு முழுக்க முழுக்க மனுதாரருக்கு சாதகமான விபரங்களை மட்டும் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிரான வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறெனில் வாதங்களே பயனற்றவையாக போய்விடும். வாதங்களின் அடிப்படையிலேயே உண்மை கண்டறியப்பட வேண்டும். அதற்கு அனுமதிக்கவும், வேண்டும். 2 மலை உச்சிகள் உள்ளன. கார்த்திகை தீபம் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தீபத்தூணில் ஏற்ற வேண்டுமென தனிநீதிபதி கூறியிருக்கிறார். தற்போது ஏற்றப்படும் இடம் அப்பகுதியில் எல்லாருக்கும் தெரியாது என குறிப்பிடப்படவில்லை. அதோடு எங்கெங்கோ இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டுமென்றால் எப்படி? எனக்கூறி பல்வேறு கோவில்களில் ஏற்ற்படும் தீபம் தொடர்பான விபரங்களைக் குறிப்பிட்டார். தொடர்ந்து, மோட்ச தீபம் ஏற்றும் பகுதியில் கார்த்திகை தீபமேற்றப்படவில்லை. அதன் அருகில் வேறொரு இடத்தில் ஏற்றப்படுகிறது. அது ஆகம விதிகளுக்கு எதிரானது. மலையில் 8 அடி உயரமுள்ள 1 அடி அகலம் கொண்ட கிரனைட்டால் ஆன தூண் உள்ளது " என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "அது தீபத்தூண் அல்ல என்று எப்படி கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
கோவில் தரப்பில், "இது பிரிட்டிஷ் காலத்தில் மலைகளை அளப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சர்வே தூண். இது போன்ற சூழலில் அது தீபத்தூண் தான் என்பதை நிரூபிக்க எந்த ஆவணமும் மனுதாரரால் தாக்கல் செய்யப்படவில்லை. தீபத்தூண் மலை உச்சியில் இருப்பதாக தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளது சரியான தகவல் அல்ல. இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்காவும், மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன. மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண் கோவிலுக்கு சொந்தமானது என்பதில் சந்தேகமில்லை. இரு நீதிபதிகள் முடிவு செய்த விவகாரத்தில் தனி நீதிபதி தலையிட்டு தானாக உத்தரவிட இயலாது. கருத்துக்களைக் கூறி தலைமை நீதிபதிக்கே பரிந்துரைத்திருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள்"குதிரைச்சுனை பகுதியில் தீபமேற்றினால் தீபம் தெரியாது என்பதற்காகவே, உச்சிப்பிள்ளையார் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது"என தெரிவித்தனர்.
செயல் அலுவலர் தரப்பில், "குதிரைச்சுனை_ தீபத்தூண் என குறிப்பிடப்படும் பகுதி அருகிலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் தனிநீதிபதி எவ்வாறு அப்படி உத்தரவிட இயலும்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு நீதிபதிகள், "அனைவருக்கும் தெரியும் வகையில் அந்த தூணில் முன்பு ஏற்றப்பட்டிருக்கலாமே?- என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
அதற்கு செயல் அலுவலர் தரப்பில், "அவ்வாறே நினைத்தாலும், 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு தெரியும் வகையில் தீபமேற்ற வேண்டுமென்றால் 8 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட தூணில் எப்படி ஏற்றியிருப்பார்கள்? அதற்கான ஆவணம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அந்தத்தூண் கிரனைட்டால் ஆனது. தீபமேற்றும் போது அந்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். அதற்கான சான்று ஏதும் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "அந்தத் தூணை அப்படி யாரும் ஆய்வு செய்தனரா? என கேள்வி எழுப்பினர்.
அது தொடர்பான புகைப்படங்கள் செயல் அலுவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அது உண்மையாகவே தீபமேற்ற பயன்படுத்தப்பட்டதா? அல்லது சர்வே தூணா? என்பதை முடிவு செய்ய தனிநீதிபதி தவறி விட்டார். அந்தத்தூண் உண்மையில் பார்க்க சர்வே தூண் அமைப்பையே கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
செயல் அலுவலர் பதில்மனுவில் ஏன் இவற்றை குறிப்பிடவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத்தரப்பில், "நீதிமன்றம் கேட்காத வினாக்களுக்கு விடையளிக்க செயல் அலுவலருக்கு அதிகாரம் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "தூண் கோவிலின் பகுதியிலேயே உள்ளது. அது தீபத்தூணாக இருக்க வாய்ப்பிருக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.
செயல் அலுவலர் தரப்பில், "அந்தத்தூணில் கார்த்திகை தீபமேற்றும் வழக்கம் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பு
இந்து சமய அறநிலையத்துணை ஆணையர் தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதங்களை முன்வைத்தார்.
"இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை மனுதாரர் வழக்கில் சேர்க்கவில்லை. நவம்பர் 24ஆம் தேதி வழக்கில் இணைத்தார்கள். நவம்பர் 27ல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடையே நீதிமன்ற விடுமுறை இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி கனராஜின் உத்தரவு முக்கியதுமானது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "தேவஸ்தானமே மலையின் உரிமையாளர்கள். வருங்காலத்தில் அவர்கள் தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினர்.
இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், "முந்தைய தீர்ப்புகள் அனைத்தும் தீபத்தை தேவஸ்தானமே ஏற்ற வேண்டும். தனிநபர் யாரும் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற வேண்டுமென்றாலும் தேவ்ஸ்தானமே முடிவு செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "இடத்தை மாற்றுவது தொடர்பான நீதிபதியின் உத்தரவு மட்டும் கருத்தில் கொள்ளப்படவில்லை. கோவில் நிர்வாகத்திற்கு யாரும் உத்தரவிட இயலாது. ஆனால் தீபமேற்றும் இடத்தை மாற்ற தேவஸ்தானம் பரிசீலிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார். அது தொடர்பான கோரிக்கை வைக்கப்படுகையில் ஏன் மெரிட் அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, நீதிபதி கனகராஜின் உத்தரவில் தீபமேற்றும் இடத்தை மாற்றுமாறு கோரக்கூடாது என்றும் உத்தரவிடவில்லை என தெரிவித்தனர்.
அரசுப்பாண்டியின் மனுவில் சில இடத்தில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பதிலாக எனவும், சில இடத்தில் ஏற்கனவே உள்ள வழக்கத்தை மாற்றாமல், தீபத்தூணிலும் தீபமேற்ற வேண்டுமென்றும், சில இடத்தில் இந்த ஆண்டு முதல் தீபத்தூணில் ஏற்ற வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. அவரது கோரிக்கையிலேயே தெளிவில்லை. நீண்ட காலமாக இருக்கும் வழக்கத்தை மாற்ற இயலாது.
நீண்ட நாள் உள்ள கோவில் வழக்கத்தை மாற்றுவதை உரிமையாகக் கோர இயலாது. மனுதாரர்கள் கோவிலுக்கு அளித்த கோரிக்கை மனுவில் தீபத்தூணில் என்ற வார்த்தையே இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "கார்த்திகை தீபமேற்றுவதில் பிரச்சனை இல்லை. எங்கு ஏற்றுவது? வேறு இடத்திற்கு மாற்றலாமா? என்பது தான் பிரச்சனை" என குறிப்பிட்டனர்.
தேவஸ்தானம் தரப்பு
தேவஸ்தானம் தரப்பில், "இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை மட்டும் அடிப்படையாக வைத்து உத்தரவிட இயலுமா? கோவில் நிர்வாகம் ஏற்கனவே உள்ள வழக்கத்தை மாற்ற வேண்டுமென மனுதாரர் நிர்பந்திக்கிறார்"என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

