தமிழர் வரலாற்றின் பொக்கிஷம் திருப்பரங்குன்றம்.. ஒரே மலையில் இத்தனை மதங்களின் பின்னணியா?
திருப்பரங்குன்றம் தொடர்பான விவாதங்கள் நாடுமுழுவதும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், மலை மேல் இருப்பது தீபத்தூணா அல்லது நில அளவைக் கல்லா என்பது குறித்து தமிழக அரசின் தொல்லியல் துறையினரும் ஆய்வும் மேற்கொண்டனர்.
பலரும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெவ்வேறு விதமான கருத்துகளை கூறிவரும் நிலையில் தமிழ் மெய்யியல் ஆய்வாளர் ஹாருன் பாஷா புதியதலைமுறை டிஜிட்டலுக்கு திருப்பரங்குன்றம் தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். பல வரலாற்று தரவுகளோடு அவர் நம்மிடம் பகிர்ந்த தகவல்கள் இதோ..
தமிழர் வாழ்வியலும் முருகனும்!
தமிழர்களின் வாழ்வியல் முறை குன்றுகளிலிருந்துதான் ஆரம்பமானது. அதன் பிறகே அரசு உருவாக்கம் வந்தது. அதனாலேயே நம் தமிழ் மக்கள் மலைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் என்பது கீழே உள்ள பகுதியில் மட்டும்தான் வருகிறது. அதுவும் ஆரம்பத்தில் சிவன் கோயிலாக கட்டப்பட்டது என்பது சாத்தன் கணபதி கல்வெட்டு மூலமாக அனைவரும் அறிந்ததே.
சங்க இலக்கியங்களிலும் குன்றில் முருகனுக்கு கோயில் இருக்கிறது என்று சொல்லப்படவில்லை. 'முருகன் குன்றில் உறைகிறான்' அதாவது முருகன் குன்றில் வாழ்கிறான் என்றுதான் கூறுகிறது. ஏனென்றால், குறிஞ்சி திணையின் தலைவன் முருகன் என்பதால் எல்லா மலைகளிலும் முருகன் உறைகிறான் என்பதே எண்ணப்பாடு. ஆரம்பத்தில் பேய்க்கடவுளைத்தான் அனைத்து மக்களும் வணங்கினர். அதாவது பேய்க்கடவுள் என்பது தெய்வத்தைப் பார்த்தால் அது நம்மை கொன்றுவிடும் என்ற பயத்தால் ஆவி வழிபாடு, மலை வழிபாடு, மர வழிபாடு என்று நிறைய வழிபாடுகள் இருந்தன. அதன் அடுத்த நிலையான தெய்வ நிலைக்கு அதனை கொண்டு செல்லும்போது எதை பார்த்து பயந்தார்களோ அதன் உயர்வு நவிற்சியான கடவுள் நிலையை அடைய குன்று அனைத்திற்கும் முருகனின் அடையாளத்தைக் கொடுத்தார்கள்.
முதலில் வாழ்ந்தவர்கள் யார்?
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் வலதுபுறத்தில் 150 மீட்டர் தொலைவில் மலை மேல் காணப்படும் படுக்கைகளில் காணப்படும் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் இங்குள்ள படுக்கைகள் ஜெயினர்கள் எனச்சொல்லப்படும் சமணர்களுக்கு இல்லாமல் அமண்பாலிகள் எனப்படும் தமிழ் அமணர்கள் வானியல் நிகழ்வுகள் குறித்தான ஆராய்ச்சி மேற்கொண்ட இடமாக செயல்பட்டது என தெளிவுப்படுத்துகிறது.
படுக்கைகள் என்பது அவர்கள் உறங்குவதற்கு உருவாக்கப்பட்டது அல்ல. தமிழர் வாழ்வில் கல் என்பது அமங்கலச்சொல். உதாரணமாக 'நெல் உகுத்து பரவும் கடவுளும் இலமே' என்ற புறநானூற்று பாடலில் வீரர்களின் நடுகற்களைத் தவிர, நெல்லைத் தூவி வழிபடுவதற்கு வேறு கடவுள் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. நடுகல், குத்துகல், நெடுங்கல் என்றிருந்த வழிபாடு அடுத்த படியாக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மலைகள் மீது படுக்கையாக அமைக்கப்பட்டன. மதுரை எங்கும் உள்ள மலைகளில் காணப்படும் இதுபோன்ற படுக்கைகள் அங்கு வாழ்ந்தவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு என உருவாக்கப்பட்டவை. எனவே உண்மையில் மலையை உரிமைகொண்டாட வேண்டியவர்கள் தமிழ் அமணர்களே.
இமயமலைக்கு நிகரான திருப்பரங்குன்றம்!
பரிபாடலில் இதை இன்னும் தெளிவாக 'பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்'' இதில் இமய மலைக்கு நிகராக திருப்பரங்குன்றம் பாடப்படுவதன் காரணம், இமயமலை துறவிகள் செல்லும் இடம். அதாவது, அறிவு சார்ந்த மக்கள் கைலாய மலையை நோக்கி இருப்பதாகவும் சிவன் அங்கு இருப்பதாகவும் கூறப்பட்டதால் அதன்பின் வந்த சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் கைலாய மலைக்கு நடந்து சென்று இறைவனை அடைய முயற்சித்து அது முடியாமல் திரும்பி வந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது அறிவார்ந்தவர்கள் இமயமலையில் மட்டுமில்லை இங்குள்ள திருப்பரங்குன்ற மலையிலும் உள்ளார்கள் என்பதையே பரிபாடல் கூறுகிறது. 2600 வருடத்திற்கு முன்பே அறிவார்ந்தவர்கள் இங்கு வாழ்ந்ததை இந்த பாடல்களும், இங்குள்ள கற்படுக்கைகளில் 'ஈழகுடும்பிகள்' என்ற இலங்கையிலிருந்து கடல்கடந்து வந்ததை கல்வெட்டுகளில் குறிப்பிட்டுவது. இந்த மலையின் தொன்மையை காட்டுவதாக உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் குடைவரை கோயில்கள்..!
திருப்பரங்குன்ற மலையின் பின்புறம் தென்பரங்குன்றத்தில் உள்ள குடைவரையை சடையவர்மன் சுந்தரபாண்டியன் மீட்டுருவாக்கம் செய்தாக அங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது
இந்த குடைவரையின் நுழைவு வாயிலில் நடராசர் சிலையும் இடதுபுறம் இருட்டு அறையில் உமையொருபாகன் என்ற அர்த்தநாரீஸ்வரராக நிற்க கூடிய சிவன் தலைக்கு பின்புறம் ஜெயின் வழக்கத்தில் பார்க்கக்கூடிய ஆதிநாதருக்கு தலையின் பின்புறம் உள்ள கல்பவிருச்சம் வளைவுகள் உள்ளன. சிலையை மாற்றியமைக்க முடிந்தவர்களால் அந்த வளைவுகளை மாற்றியமைக்க முடியவில்லை. ஆதிநாதரின் உருவமைப்பு விடையொடு இருப்பதை இந்த விடையை சிவன்சிலைக்கு கொடுத்து விட்டனர். அர்த்தநாரீஸ்வர் சிலை தனியாக தான் இருக்க வேண்டும்; ஆனால் இங்குள்ள சிலை காளையோடு இருக்கும். வந்திமலை திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் சிலை காளை இல்லாமல் தண்டத்தோடு இருக்கும் ஏன் தென்பரங்குன்றத்தில் காளையோடு இருப்பதன் காரணம் அதன்பின் உள்ள வளைவுகள் பார்த்தால் இந்த குடைவரை மாற்றப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பாண்டியர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்
தற்போது பிரச்னையாக பார்க்கப்படுகிற சிக்கந்தர் மலை குறித்து முகலாய ஆட்சிக்காலத்தில் முகலாய மன்னர் சிக்கந்தரை நாயக்க மன்னன் உடையப்ப நாயக்கர் விரட்டி வந்த போது, சிக்கந்தர் இந்த மலை மேல் தஞ்சம் அடைந்து இறந்ததாக வரலாற்றில் கூறப்படுவதோடு தற்போதும் மதுரையில் சிக்கந்தர் சாவடி என்ற பெயரில் ஒரு பகுதி அழைக்கப்படுவதும் இதனை உறுதிப்படுத்துகிறது. திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலின் கட்டமைப்பு பாண்டியர்களின் கட்டிட கட்டமைப்போடு ஒத்துப்போவதன் காரணம் என்னவென்றால்,
மரைக்காயர்கள் எனும் அரபு தேசத்து படகோட்டிகள் மூலமாக பாண்டியர்கள் தங்களின் படைக்கு குதிரைகள் சேர்த்தனர். இந்த குதிரைகளை பயிற்றுவிக்க முடியாததால் குதிரைக்கு பயிற்சி அளிக்க இராவுத்தர் எனப்படும் மக்கள் குழுவை அழைத்து வந்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட இந்த இராவுத்தர் மக்கள் குழு குதிரைகளுக்கு பயிற்சி அளித்ததோடு மட்டுமின்றி பாண்டியர்களின் படையில் சேர்ந்து போர்புரிந்துள்ளனர். அவர்களுக்காக பாண்டிய மன்னர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டவை தான் இந்த பள்ளிவாசல்கள் என ந. பாண்டு ரங்கன் எழுதிய 'அறியப்படாத மதுரை' என்ற ஆய்வுக்கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு மதுரையில் முதல்முதலில் கட்டப்பட்ட காஜிமார் பள்ளிவாசல் பாண்டிய மன்னரான கூன்பாண்டியன் எனப்படும் நின்றசேர் நெடுமாறன் அவரால் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் மட்டுமல்லாது கோரிப்பாளையம், தெற்குவாசல் மற்றும் சிக்கந்தர் பள்ளிவாசல் அனைத்து பள்ளிவாசல்களிலும் பாண்டியர்களின் கட்டிடக்கலையின் நுணுக்கங்களை காண முடியும்.
தீபத்தூணா அல்லது நிலஅளவை கல்லா?
தற்போது பிரச்னை எங்கு ஆரம்பமாகிறது என்றால் நாயக்கர்களின் காலம் 14ஆம் நூற்றாண்டு ஆனால் திருப்பரங்குன்ற மலை மீதுள்ள தர்கா 12ஆம் நூற்றாண்டு இறுதியில் கட்டப்பட்டது. வரலாறு அவ்வாறு இருக்கையில் 14ஆம் நூற்றண்டில் ஆட்சி செய்த நாயக்கர்களின் காலத்தில் சிக்கந்தர் மலைமீது ஏறி இறந்தபின் தர்கா உருவானது என்பது எப்படி உண்மையாக இருக்கும்? பிரிட்டிஷ்காரர்களும் இதனை 1879 ஆம் ஆண்டு மலையின் அளவுகளை ஓவியமாக பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள அனைத்தும் நிலஅளவை கற்கள் தூண்கள் இதுபோன்ற தூண்கள் அரிட்டாபட்டி மலை , கீழகுயில்குடி சமண மலை போன்ற மலை உச்சிகளிலும் காணலாம். பொதுவாக தீபத்தூண்கள் கோயிலின் அருகாமையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். கீழகுயில்குடி சமணமலைக்கு கீழே உள்ள மலையாண்டி அய்யனார் கோவிலில் உள்ளே தீபத்தூண் அமைக்கப்பட்டிருப்பதை காண முடியும்' பொதுவாக தீபத்தூணில் தீபம் எரிவதற்கு ஏற்றவாறு தூண் மேல் கொடுகை என்ற அமைப்பு இருக்கும். ஆனால் மலைமீதுள்ள கல்களில் 100மிலி எண்ணெய் கூட ஊற்ற முடியாத அளவில் தான் ஓட்டை இருக்கும் . பழைய நிலஅளவை இயந்திரங்கள் (theodolite meter) தற்போது உள்ளது போல் தாங்கியுடன் (stand) இருக்காது. அந்த இயந்திரங்களை தாங்கி பிடித்து அளவெடுக்க ஆங்கிலேயர்கள் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த கற்களை பயன்படுத்தினர் என்பதை எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'எனது இந்தியா' என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோயில்களும் , மலைகளும் அடைந்த மாற்றம்
முதல் படை வீடு எனச்சொல்லப்படுகிற திருப்பரங்குன்றத்தில் வள்ளி தானே அங்கு இருந்திருக்க வேண்டும். இங்கு எப்படி தெய்வானையை மணம் முடிக்கலாம். நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் ஒரு இடத்தில் கூட தெய்வானை என்ற சொல்லே இடம்பெற்றிருக்காது. வேல் ஆட்டம், வெறி ஆட்டம் செய்யாமல் முருகன் பெயர் சொல்லி பிரச்னை செய்வது முருகனுக்கே பிடிக்காது. கோயில்கள் ஒவ்வொரு அரசாட்சியின் பொழுதும் கோயில்களின் நிலை மாற்றப்பட்டுக் கொண்டே தான் வந்துள்ளது. ஒரு காலத்தில் யவன கோயில்களாக, ஜெயின் கோயில்களாகவும் இருந்தவை பௌத்த பள்ளிகளாகவும், பௌத்த பள்ளிகள் பல இடங்களில் வைணவ கோவில்களாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில் சைவ எழுச்சி நிகழும் போது சைவம், வைணவம் இரண்டும் இணைந்து பல கோவில்களை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு சான்றாக கஜலட்சுமி என்ற உருவம் திருநிலையில் கொடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிடலாம் .
"முன்காலத்தில் பள்ளிகளாகவும், வானிலை ஆராய்ச்சி நிலையங்களாகவும் இருந்த வரலாற்று சின்னங்களை கைக்குள் வைத்து காப்பாற்றவேண்டியது மதுரை மக்களின் கடமை. இந்த குகைப்பள்ளிகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள பேராசிரியர் க. நெடுஞ்செழியன் எழுதிய 'குகைப்பள்ளிகளின் சமயம்' என்ற புத்தகம் படிப்பதன் மூலம் மலை உச்சியிலுள்ள பள்ளிகள் யாருக்காக அமைக்கப்பட்டன?, ஒவ்வொரு மலைகளிலும் யார் இருந்தது?, தற்போது மலைகளின் வரலாறு எப்படி மாற்றப்பட்டுள்ளது? என்பதையும் தரவுகள் வழியாக தெளிவுப்படுத்தியுள்ளார்" என்றார்.

