திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக தீர்மானம்; 120எம்பிக்கள் கையெழுத்து
திருப்பரங்குன்றம் மலையில் கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில், கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இந்து அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கல் தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் அருகே மட்டும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை இந்து அமைப்புகள் மீறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பு தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் உயர்நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பில் மனுதாரர் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனிடையே திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்த தமிழக காவல்துறையினர் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, நீதிபதியின் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் பிற மாநில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர். எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் அதை இன்று சபாநாயகரிடம் வழங்கினர்.
இதற்கிடையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கையில், உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; கோயில் வழிபாட்டு முறைகளில் அரசு தலையிட முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்யும் அதிகாரம் பெறுகிறது” என அரசு தரப்பு வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தலைமைச் செயலாளர், ஏ.டி.ஜி.பி உள்ளிட்டோர் டிசம்பர் 17ஆம் தேதி காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும். மதுரை போலீஸ் துணை கமிஷனர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

