”திருப்பரங்குன்றம் தீபத் தூண் அல்ல., அளவீட்டுக் கல்” - வரலாற்று ஆய்வாளர் சாந்தலிங்கம்!
இயற்கை எழில் சூழ்ந்த திருப்பரங்குன்றம் இப்போது சர்ச்சைகளின் மையப்புள்ளியாகி இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை, கடல் மட்டத்தில் இருந்து 1050 அடி உயரம் கொண்டது. மலை அடிவாரத்தில், ஊரில் மையத்தில் அமைந்தள்ள சுப்பிரமணிய சாமி திருக்கோயில், அறுபடை வீடுகளில் முதல்படைவீடாக போற்றப்படுகிறது. 275 தேவாரத் தலங்களில் ஒன்றாக பெருமை பெற்ற இந்த தலம், திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் 3 குகைகள் உள்ளன. 2 குடைவரை கோயில்கள். ஒன்று இயற்கையாக அமைந்த குகை. தற்போது முருகப்பெருமான் கோயிலாக வழிபாட்டில் இருப்பது பொது ஆண்டு 8 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்தது. பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. இயற்கையாக அமைந்த குகையில் சமண படுகைகள் உள்ளன. அவற்றில் தமிழி எழுத்துகள் உள்ளன. அதில் உள்ள கல்வெட்டு ஒன்றில்,
எருகாட்டூர் இழகுடும்பிகன் பொலாலையன்
செய்தான் ஆய்சயன் நெடுசாதன்
அதாவது, எருக்காட்டூரைச் சேர்ந்த பொலாலையன் என்பவரும், ஆய்சயன் நெடுசாதன் என்பவரும் சமணர் படுகைகளை வெட்டிக் கொடுத்ததாக இந்த வரிகள் கூறுகின்றன.
திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம் திருப்பரங்குன்றம். பெரியபுராண காலத்தில் இக்கோயில் சிவன் கோயிலாகவே குறிப்பிடப்படுகிறது. முற்காலப் பாண்டியர்கள் காலத்தில், குடைவரைக் கோயிலாக உருவாக்கப்பட்ட இக்கோயில், அடுத்து வந்த மன்னர்கள் காலத்தில் படிப்படியாக உருமாற்றம் அடைந்து பொலிவு பெற்று சிறப்புற்றது. பிற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தில் மேலும் பொலிவுற்ற இக்கோயில், நாயக்கர் காலத்தில் அழகிய மண்டபங்களையுடைய கோபுரத்துடன் கட்டப்பட்டது. தென்புறத்தில் உள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகில், சமணர்களின் படுகை அமைந்துள்ளது.
சடையவர்மன் என்னும் பட்டம் பெற்ற நெடுஞ்சடையன் பராந்தகன் காலமான கி.பி. 765 – 815 காலத்திய செப்பேடுகள் லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் சென்னை அருங்காட்சியகத்திலும் காணப்படுகின்றன. திருப்பரங்குன்றம் கல்வெட்டுகள் நெடுஞ்சடையன் பராந்தகனின் ஆட்சிக்கு சான்றாக இருக்கின்றன.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் முருகப்பெருமான் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இக்கோயிலுக்கு பெரிய அளவில் திருப்பணிகள் நடந்துள்ளன. கோயிலின் ராஜகோபுரத்தை வீரப்ப நாயக்கர் 1505 ஆண்டில் கட்டிக்கொடுத்துள்ளார். கோயில் திருமதிலையும் இவர் கட்டிக் கொடுத்துள்ளார். திருமலை நாயக்கர் கி.பி. 1659 ல் முருகனை எப்போதும் வழிபட்டுக் கொண்டிருப்பது போன்று தம் உருவச்சிலையையும், தன் மனைவியர் இருவரின் உருவச்சிலைகளையும் இக்கோயிலில் வடிவமைத்துள்ளார்.
வரலாற்றுஆய்வாளர் சாந்தலிங்கம்.,
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பரங்குன்றம், தற்போது தீபத்தூண் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக, திருப்பரங்குன்றம் தர்கா அருகே இருக்கும் தூண் தீபத் தூணா? அல்லது நிலஅளவைக் கல்லா? என்ற விவாதமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சாந்தலிங்கம் பேசும்போது, ”இந்த விவகாரத்தில் திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் தீபத்தூண் 300 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டு அதில் ஒரு கல்வெட்டும் இருக்கிறது. அதில், தீபத்தூணில் புண்ணியவான்கள் யாரும் தீபம் ஏற்றலாம் எனவும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. மேலும், அந்தத் தூணில் அனுமன் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவாக இருந்த தூணில் ஒரு ஆளுக்கு மேல் நிற்கமுடியாது என்பதால், 30 , 40 பேருக்கு மேல் நிற்கும் அளவுக்கு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு பல ஆண்டுகளாக தீபம் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டும் அந்த தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இப்போது, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் விஷயம், தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான். அந்த தூணில்தான் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வந்தது என்கிறார் சாந்தலிங்கம். ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏதோவொரு காரணத்திற்காக இந்தத் தூணில் தீபம் ஏற்றப்பட்டு வந்ததது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நிறுத்தப்பட்ட ஒன்றை மீண்டும் அனுமதிக்க வேண்டி கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆனால், அந்தத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஆதாரங்களோ அல்லது ஆங்கிலேயர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான ஆதரங்களோ எதுவும் இல்லை. ஆனால், 300 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்திற்கான ஆதாரங்களும் கல்வெட்டுகளும் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார் சாந்தலிங்கம்.
தர்கா அருகில் இருக்கும் தூணைப் போல பல தூண்கள் பல மலைகளில் இருக்கின்றன. இவை அளவீட்டு கற்கள் என அளவீட்டாளர்கள் கூறுகின்றனர். தியோடலைட் என்ற ஒரு கருவியை பயன்படுத்துவதற்காக, அமைக்கப்பட்ட கற்கள் ஆகும். சென்னை பரங்கிமலையிலேயே கூட இந்த மாதிரியான கல் இருக்கிறது. அதில், வட்டம்,சதுரம் போன்ற வடிவங்கள் இடம்பெற்றுக்கின்றன. எனவே, திருப்பரங்குன்றம் தர்கா அருகே இருக்கும் கல் அளவைக்கல். உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமாக தீபம் ஏற்றும் தூணே உண்மையான தீபத்தூணாகும்.
மேலும், சமணர் படுகைகள் கொண்ட மலைகளில் இதுபோன்ற கல்தூண்கள் இருப்பதாக கீழ குயில்குடி, அரிட்டாபட்டி போன்ற சமணர் மலைப்படுகைகளை சில ஆய்வாளர்கள் உதாரணமாக காட்டுகிறார்கள். தர்கா அருகே இருக்கும் இந்த தூண் நாயக்கர் காலத் தூணைக் காட்டிலும் பழமையானதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக 3 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சமணர் கல்வெட்டை சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் சமணர்கள் அமைந்த தூண் என்றும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சமணர்களைப் பொறுத்தவரை உயிர்கள் கொல்லாமையை தங்கள் வாழ்நெறியாக கடைபிடிப்பவர்கள் என்பதால், இது விளக்குத் தூணாக இருக்கவும் வாய்ப்பில்லை என்பது வரலாற்று ஆய்வாளர் சாந்தலிங்கத்தின் கருத்தாக இருக்கிறது.

