Ripples within the DMK alliance
dmk, stalinweb

திமுகவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்.. வெவ்வேறு கருத்துகளால் சலசலப்பு!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் சூழலில், திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளின் வெவ்வேறு கருத்துகள் திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
Published on
Summary

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், சிபிஎம், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியானது 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம்கண்டது. ஆனால் கூட்டணிக்குள் நிறைய கட்சிகள் இருந்ததால் தொகுதிபங்கீட்டில் திமுகவுக்கு இறுதிவரை இழுபறியும், சிக்கலுமே நீடித்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டதால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே சுமுகம் ஏற்பட்டது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
திமுக காங்கிரஸ் கூட்டணிகோப்புபடம்

காங்கிரஸ் 28 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள், விசிக 8 தொகுதிகள், சிபிஐ & சிபிஎம் தலா 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலா 2 தொகுதிகள், எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம், மனிதநேய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என முடிந்தாலும் தொகுதி பங்கீட்டு விசயத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகள் திமுக மீது அதிருப்தியையே வெளிப்படுத்தியிருந்தன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தசூழலில் தேர்தல் முடிந்தபிறகும் காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் பல கூட்டணி கட்சிகள் வெளிப்படுத்திவரும் வெவ்வேறு கருத்துகளானது திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

Ripples within the DMK alliance
தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு.. நடந்தது என்ன.? வெளியானது சிசிடிவி காட்சிகள்.!

”ஆட்சி அதிகாரம் அல்லது எதிர்க்கட்சி” - காங்கிரஸ்

தமிழக அரசியல் களமானது விஜய் தலைமையிலான தவெக வருகையால் எப்போதும் இல்லாதவகையில் பரபரப்பாக மாறியது. தவெகவை காரணமாக காட்டி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுங்கள், இல்லையேல் தவெக உடன் கூட்டணிக்கு சென்றுவிடுவோம் என காங்கிரஸ் பகிரங்கமாக திமுகவிற்கு கோரிக்கை வைத்தது. ஆனால் திமுக ஆட்சியில் பங்குதர மாட்டோம் என கண்டிசனாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தபிறகும், மீண்டும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிடபொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாட்டில் இனி காங்கிரஸ் கட்சியானது ஆட்சி, அதிகாரம் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கும் என்றும், இனி அதிகாரமற்ற நிலையில் நடுநிலையாக அங்கம் வகிக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

Ripples within the DMK alliance
”தவெக-விற்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பு!

அரசியல் மாற்றம் வரவேற்கத்தகது..

சமீபத்தில் பேசியிருக்கும் சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோதும், இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதற்கு திமுக மறுத்துவிட்டது. பாஜக உள்ளே வரக்கூடாது என்று தான் துணை நின்றோம். ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைத்தாலும் அது எப்படிபட்டதாக இருக்கும் என்பது கேள்விக்குறி தான்.

தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றம் வேண்டுமென்று இளைஞர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தம் செய்யாதது, போராடும் தொழிலாளிக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது, தொழிலாளிகள் மீது வழக்கு போட்டு கைது செய்வது போன்ற மக்கள் நலன் பாதிக்கும் செயல்கள் அதிகமாக இருந்தது” என பேசியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Ripples within the DMK alliance
ஆட்சியைப் பிடிக்கும் TVK? பேச்சுவார்த்தையில் அதிமுக? கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?

”தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும்..” - வைகோ

சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, “தமிழ்நாட்டில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜயின் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும். தவெகவுக்கு மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்குசெலுத்தும் வாக்காளர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது” என்று பேசியிருந்தார்.

Ripples within the DMK alliance
'விஜய் எதிர்த்து நிற்பவர்களும் சினிமாக்காரர்கள் தான்..' - ராதாரவி பேச்சு!

விசிகவிற்குள் சலசலப்பு.. கவனம்பெற்ற பிரேமலதாவின் பதில்..

சமீபத்தில் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கும் திருமாவளவன், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை. தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கட்சியினர் மீது புகார் வந்துள்ளது. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைக்காத விசிகவினர் குறித்து தகவல் திரட்டப்படுகிறது” என பேசியுள்ளார்.

ஏற்கனவே, திமுக கூட்டணியில் விசிகவுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களே உள்ள சூழலில், விசிகவினர் மீது திருமாவளவன் அதிருப்தி தெரிவித்திருப்பது அக்கட்சினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல தொங்கு சட்டசபை உருவானால் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைப்பீர்களா என்ற கேள்விக்கு, மே 4ஆம் தேதிக்கு பிறகு கூறுகிறேன் என பிரேமலதா பதிலளித்திருந்தது கவனம்பெற்றது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என 3 கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்பு வெளியான நிலையில், தமிழகத்தில் தொங்கு சட்டபவை உருவாகுமோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தசூழலில் திமுகவின் கூட்டணி கட்சிகளின் வெவ்வேறு கருத்துகள் அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Ripples within the DMK alliance
’திமுக அல்ல அதிமுகவுக்கு தான் வெற்றி.. ஆனால் விஜயின் வளர்ச்சி..’ Zoho நிறுவனர் கணிப்பு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com