”தவெக-விற்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பு!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல்துறையினரை பயன்படுத்தி 2.34 லட்சம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 41% வாக்குகள் கிடைத்து, 121 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இந்த புதிய கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 29ஆம் தேதி வெளியாகின.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 118 இடங்களை தேவை என்ற நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளும் (பிரஜா போல்ஸ், பீப்பிள்ஸ் இன்சைட், ரிபப்ளிக் - பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்) திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தன.
அதேநேரத்தில், ஜேவிசி டைம்ஸ் நவ் அதிமுக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சற்று தாமதமாக தனது கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா, விஜயின் தவெக 120 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தது. இது, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, வெவ்வேறு கருத்துக்கணிப்புகளும் மாறிமாறி வெளிவந்துள்ளதால், ஒட்டுமொத்த அரசியல் தொண்டர்களும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தசூழலில் தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி புதிய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 10 முன்னாள் காவல்துறையினர் என ஒதுக்கி 2340 பேர் கொண்ட குழு கருத்துக்கணிப்பில் ஈடுபட்டதாகவும், 2 லட்சத்து 34 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இதை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் காவல்துறையினர் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 41% வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், கிட்டத்தட்ட 121 தொகுதிகளை தவெக கைப்பற்ற வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்துக்கணிப்பு தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

