'விஜய் எதிர்த்து நிற்பவர்களும் சினிமாக்காரர்கள் தான்..' - ராதாரவி பேச்சு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக வளர்ச்சி, கருத்துக்கணிப்பில் அவருக்கு பெரும்பான்மை வாய்ப்பு என பேசப்படும் சூழலில், வடபழனி விருது விழாவில் ராதாரவி பேசியது கவனம் ஈர்த்துள்ளது. விஜய் எதிர்த்து நிற்பவர்களும் சினிமா பின்னணியிலிருந்தவர்களே என்றும், சினிமாவில் சேரும் கூட்டம் அர்த்தமுள்ள கூட்டமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு வெளியாகவிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக 3 கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக களம்கண்டிருக்கும் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு முதலில் யாரும் வரவேற்பு தரமாட்டார்கள், கூட்டம் கூடுவது ஓட்டாக மாறாது என்று சொல்லப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவெகவை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்ற இடத்திற்கு நகர்த்தியுள்ளது.
விஜய் பெரும்பான்மை பெறலாம் என்ற கருத்துகள் இருந்துவரும் நிலையில், ஒருபக்கம் தவெக தலைவர் விஜய் முருகன் கோவில், சாய் பாபா கோவில் என தேர்தல் முடிவுக்கு முன் கோவில் கோவிலாக சென்று வேண்டுதலை வைத்துவருகிறார். இந்நிலையில் விஜய் மற்றும் தவெக சார்ந்து வெளியாகும் செய்திகள் தலைப்புச்செய்தியாகி வருகின்றன.
விஜய் எதிர்த்து நிற்பவர்களும் சினிமாக்காரர்கள் தான்..
சென்னை வடபழனியில் தனியார் அமைப்பின் விருது விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராதா ரவி, அம்பிகா, ஜெகன், இயக்குநர் விக்ரமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பங்கேற்று பேசிய ராதாரவி, “வேல்முருகன் மனதில் பட்டதை பேசுபவர், அதனால் அவர் நிறைய பட்டிருக்கிறார். நானும் நடிகை அம்பிகாவும் அந்த காலத்தில் நடித்த பேய்வீடு, நாகம் போன்ற படங்கள் நன்றாக ஓடியது. என்னுடன் அந்த காலத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே நடிகை அம்பிகா தான்.
சினிமாவில் இருந்த ஒரு சகோதரர் இன்று பெரிய இயக்கங்களுக்கு போட்டியாக இருக்கிறார், எல்லோருமே சினிமாக்காரர்கள் தான். அவர் எதிர்த்து நிற்பவர்களும் சினிமாக்காரர்கள் தான். ஆனால் சினிமாவை பொறுத்தவரையில், எந்த நேரத்தில் எது வெடிக்கும் என சொல்லமுடியாது. நான் பேசிட்டு கீழ இறங்குறதுக்குள்ள திடீர்னு நான் தலைவன் ஆகிடலாம், அப்போது ஏங்க நீங்க தலைவனாகிட்டீங்கனு யாரும் கேட்கமுடியாது. சினிமாவில் இருந்தால் நமக்கு கூட்டம் சேரும்னு மட்டும் நினைக்கக்கூடாது, அர்த்தத்தோடு கூட்டம் சேரவேண்டும் என நினைக்கவேண்டும் என்று பேசினார்.

