"செந்தில் பாலாஜி இப்படி செய்யக்கூடாது" திமுக - காங் கூட்டணியில் உரசல்? செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?
தமிழ்நாடு தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்ததாக செந்தில்பாலாஜி போட்ட பதிவு கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கரூர் எம்பி ஜோதிமணி கண்டன பதிவை போட்ட நிலையில், இதுகுறித்து பேசியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை..
கரூர் மாவட்டத்தின் திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கடந்த சில நாட்களாக மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைத்து வருகிறார். அந்த வரிசையில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்துகொண்டதாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த செயல் காங்கிரஸ் தரப்பில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு எதிர்வினையாற்றிய ஜோதிமணி, கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, இம்மாதிரியான அவமரியாதையை எளிதில் கடந்து போய்விட முடியாது என்பது வரை பல விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும், கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு, இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு செல்வப்பெருந்தகை கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சமீபகாலமாக, காங்கிரஸ் கட்சிக்குள் கூட்டணி ஆட்சி கோரிக்கை எழத்தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுச்சாமி, சம்பவத்தை கண்டித்ததோடு, செந்தில் பாலாஜியை கட்சியில் சேர்த்துக்கொண்டதற்கு முதல்வர்தான் வருந்த வேண்டும் என்றும் கூறினார். தற்பொழுது இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படிசெய்திருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், நானும் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் என்றும் பின் செந்தில் பாலாஜியின் அந்த ட்வீட் நீக்கப்பட்டது என்றும் கூறினார்.
இப்படி செய்வதால் முதலமைச்சருக்குத்தான் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்றும் எம்.பி ஜோதிமணி மிகவும் பெருந்தன்மை வாய்ந்தவர், பெருந்தன்மையோடுதான் இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். கூட்டணி தர்மம் என்பது வேறு. இருந்தாலும் எம்.பி.க்கான மரியாதையும், மதிப்பையும் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவும் என்று பரபரப்பு கருத்தை முன்வைத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ். தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்காகவும் வாக்கு வங்கியை நிரூபிக்கவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்றும் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார் என்று கூறியதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.