தஞ்சாவூரில் தீண்டாமை..? "பாதையை பயன்படுத்த கூடாது.." பள்ளி மாணவர்களை தடுக்கும் வீடியோ
தஞ்சாவூர் மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான பாதை என கூறி வேலி போட்டு பாதையை மறித்துள்ளார். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைதி பேச்சு வார்த்தையில் நிலம் தனக்கு சொந்தமானது என கூறும் நபர் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமைதி பேச்சு வார்த்தை முடிந்த பிறகும் அந்த வழியே செல்லும் மாணவ மாணவிகளை கட்டைகளை வைத்து தடுத்தும், கட்டைகளை கொண்டு அவர்களை விரட்டியும் உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு மக்களுக்கும் சமூக தீர்வை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், இது சாதி ரீதியிலான ஒடுக்குமுறை என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் இதுகுறித்து பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 'தீண்டாமை கொடுமை – மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்!'
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியத்தின் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக விளிம்புநிலை மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை, சாதி ஆதிக்கவாதிகள் தடைசெய்தவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுத்திருப்பது கல்வி உரிமைக்கும், குழந்தைகள் உரிமைக்கும் அநீதி இழைக்கும் செயலாகும்.
சுதந்திரம் பெற்று 79 வருடம் ஆன நிலையிலும் இந்த வகையான சாதி வேறுபாட்டு அணுகுமுறைகள் சமூக ஒற்றுமைக்கும், ஜனநாயக மாண்பிற்கும் கேடு விளைவிக்கும்.
ஆகையால், இச்செயல்களை உடனடியாக தடுக்கவும், குற்றவாளிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
சாதி வெறி, தீண்டாமை கொடுமை ஆகியவற்றை ஒழித்து, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை” என்று பதிவிட்டுள்ளார்.