BBL தொடரில் முதல் இந்திய வீரர்.. சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின்!
இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல்லில் விளையாடப்போகும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த மாதம் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் இரண்டிலிருந்தும் விலகியிருக்கும் அஸ்வின், வெளிநாட்டு டி20 லீக்களில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் யுஏஇ-ல் நடந்துவரும் சர்வதேச லீக் டி20 ஏலத்தில் பதிவுசெய்த அஸ்வினுக்கு, ILT20 தான் முதல் வெளிநாட்டு தொடராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார் அஸ்வின்.
சிட்னி தண்டர்ஸில் அஸ்வின்..
பிபிஎல் தொடரின் 15வது பதிப்பு டிசம்பர் 14-ல் தொடரவிருக்கிறது. இந்த சூழலில் சிட்னி தண்டர் அணியில் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலில் இரண்டு சிட்னி அணிகளுடன், ரிக்கி பாண்டிங்கின் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் டிம் பெயினின் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளும் அஸ்வினை தங்களுடைய அணியில் விளையாட வைக்க விருப்பமுடன் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்தசூழலில் எந்த அணிக்கு அஸ்வின் செல்லப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், சிட்னி தண்டர் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிட்னி தண்டர் அணியில் இணைந்தது குறித்து பேசியிருக்கும் அஸ்வின், ”அவர்கள் என்னை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதில் தெளிவுடன் இருந்தனர். தலைமையுடனான எனது உரையாடல்கள் சிறப்பாக இருந்தன. தண்டர் நேஷனுக்காக சிறப்பாகச் செயல்பட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.