”குறிக்கோள் ஒன்றுதான்” - சென்னை வந்தது குறித்து தெளிவுபடுத்திய செங்கோட்டையன்
சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என்று பேசிய அதிமுகவின் செங்கோட்டையன், என்னிடம் யார் பேசினார்கள் என்று கூற இயலாது, அது சஸ்பென்ஸ் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என்று பேசினார். அதேநேரம் என்னிடத்தில் யார் எல்லாம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ் என்றும், அதை வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
யார் என்னிடம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ்..
சென்னையிலிருந்து திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில் நான் யாரையும் சந்திக்கவில்லை. என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்று இருந்தேன். சென்னை சென்றவுடன் என்னுடைய சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பியிருக்கிறேன்.
சென்னையில் அரசியல் ரீதியாகவும், மற்ற விஷயங்கள் ரீதியாகவும் நான் யாரையும் சந்திக்கவில்லை. அதுபோன்ற தவறான செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இது குறித்து தெரிவித்து இருந்தேன்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது. எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதா சட்டமன்றத்தில் உரையாற்றும் பொழுது 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று கூறினார். அந்த கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்த தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர்மூச்சாக எல்லாம் பெற வேண்டும், இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அன்று எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.
என்னை பொறுத்த வரையில் குறிக்கோள் ஒன்றுதான், அந்த குறிக்கோளின் அடிப்படையில் நேற்று யாரையும் சந்திக்க சந்திக்கவில்லை, அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன் என்று பேசினார்.
கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசிய அவர், பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள்.. ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது. ஆகவே எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான்.. யார் பேசினார்கள் யார் பேசவில்லை என்பது இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று பேசினார்.