துரோகிகள் என ஆர்.பி.உதயகுமார் யாரை சொல்கிறார்? இபிஎஸ்க்கு எதிரான பிம்பமா செங்கோட்டையன்? - ஓர் அலசல்
கடந்த சில தினங்களாக அதிமுக விவகாரங்கள்தான் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக உள்ளது.. ஓரிரு தினங்களுக்கு முன் அவினாசி அத்திகடவு திட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாததும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் விவாதத்தினைக் கிளப்பியது. நேற்று, அதிமுக உட்கட்சி விவகாரத்தினை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நேற்று மாலை செங்கோட்டையன், “கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென நினைத்தவன். என்னை சோதித்துப் பார்க்காதீர்கள்” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்துக் காப்பாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக இபிஎஸ் இருக்கிறார். இன்றைக்கு எதிரிகள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. மக்கள் சக்தி பெற்றிருக்கிற மகத்தான இயக்கமான அதிமுகவிற்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இது செங்கோட்டையன் மீதான நேரடியான விமர்சனமா அல்லது இபிஎஸ்க்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் மீதான விமர்சனமா என விவாதங்கள் எழுந்து வருகின்றன.
செங்கோட்டையனை எதிர்க்கிறாரா உதயகுமார்?
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “செங்கோட்டையனுக்கு ஏற்கனவே பலவிதமான வருத்தங்கள் இருக்கிறது. அவரிடம் ஆலோசனைகள் எதுவும் கேட்கப்படுவதில்லை, கட்சியிலிருந்தும் ஓரங்கப்படுகிறார். கட்சியில்கூட எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கான முக்கியத்துவங்கள் குறைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமிதான் முன்னிலைப்படுத்தப்படுகிறார். பேசுபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தாண்டி இபிஎஸ் புகழப்படுவது குறித்து, செங்கோட்டையனும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் வருத்தத்தினை தெரிவித்திருக்கிறார்.
கட்சி ஒன்றுபட வேண்டுமென்ற தனது ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை என்பதில் செங்கோட்டையனுக்கு வருத்தம். ஆனால், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து செங்கோட்டையன் உட்கட்சி அரசியல் செய்வாரா எனத் தெரியவில்லை. இதன் காரணமாகத்தான், ‘கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை’ என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் ஆர்பி உதயகுமாரின் எதிர்வினை நேரடியாக செங்கோட்டையனை நோக்கி வைக்கப்பட்டதா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாக, அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டவர்கள் கொடுத்த எதிர்வினைகளுக்குத்தான் உதயகுமார் பதிலளித்திருப்பார். செங்கோட்டையனை நேரடியாக எதிர்க்குமளவு உதயகுமார் செயல்படுவாரா என்பது எனக்குத் தோன்றவில்லை” என்றார்.
கட்சியின் நலனுக்கு நல்லதல்ல
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கூறுகையில், “நடைமுறைச் சிக்கலை வைத்துப் பார்க்கும்போது செங்கோட்டையனை வைத்தே உதயகுமார் பேசி இருப்பதாகத் தெரிகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. செங்கோட்டையன் ஒரு கட்சியின் மூத்தத் தலைவர்; அதிமுகவின் நீண்டகால உறுப்பினர். செங்கோட்டையன் சொல்வதை கட்சிக்குள் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவதைவிடுத்து, எதிர் அறிக்கைகளை விடுவதன்மூலம் கட்டுப்படுத்த நினைத்தால் வேறுவிதமாக வெடிக்கும். ஆர்பி உதயகுமார் பேசியிருக்கும் சொற்கள் தேவையற்றவை. அதிமுகவின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் விட்டுக்கொடுப்பார்களா?
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி புதிய தலைமுறையிடம் இதுதொடர்பாக பேசுகையில், “அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டபின், யார் சட்டமன்ற துணைத் தலைவர் எனும் கேள்வி எழுந்தது. அப்போது, சமூக அரசியல் காரணங்களுக்காக ஓபிஎஸ் சமூகத்தினைச் சேர்ந்த ஆர்பி உதயகுமாரை பன்னீர்செல்வம் நியமித்தார். தன்னை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக நியமித்த எடப்பாடி பழனிசாமிக்கு உதயகுமார் தனது விசுவாசத்தினைக் காட்டுகிறார். எத்தனைபேர் தன்பின்னால் நிற்கலாம் என்பதை இபிஎஸ் சோதித்துப் பார்க்கலாம். எனவே, ‘நாங்கள் இபிஎஸ் பின்னால் நிற்கிறோம்’ என்று பலரும் இனி சொல்லக்கூடும்.
இபிஎஸ்க்கு எதிரான அரசியல் பிம்பமாகத்தான் செங்கோட்டையன் பார்க்கப்படுகிறார். செங்கோட்டையன் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்றவர்தான். அதேவேளையில், இபிஎஸ் தலைமையில் அதிமுக பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. அவரும் தலைவராக உருவெடுத்துவிட்டார் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
அதிமுகவில் நடக்கும் தொடர் நிகழ்வுகள் பழனிசாமிக்கு எதிரான மனநிலையைத்தான் கட்சிக்குள் தோற்றுவிக்கிறது. அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக ஒருங்கிணைப்பு வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். தலைவர்கள் தங்களது இடத்தினை விட்டுக்கொடுப்பார்களா என்பதுதான் பிரச்னை” எனத் தெரிவித்தார்.