மதிமுகவிலிருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்.. வைகோ அதிரடி.. விளக்கமளிக்க 15 நாள் கெடு!
மதிமுகவில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்த நிலையில், இதுதொடர்பாக கட்சியிலும் பூசல் வெடித்தது. இதனால் இருதரப்பிலும் கருத்து தாக்குதல்கள் நடைபெற்றன. ஒருகட்டத்தில், மல்லை சத்யா அறப்போராட்டத்தில்கூட இறங்கினார். இந்த நிலையில், மதிமுகவிலிருந்து மல்லை சத்யா அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.
மதிமுகவில் உட்கட்சிப் பூசல் விவகாரம் சமீபகாலமாகவே விஸ்வரூபம் எடுத்து வந்தது. மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்திருந்தார். முதன்மைச் செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கிடையே, ”தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் முற்றிய நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் அறிவுறுத்தலுக்குப் பிறகு இருவருக்குமான பிரச்னை முடிவுக்கு வந்தது.
என்றாலும் ஏப்ரல் மாத இந்த நிகழ்வுக்குப் பிறகு, மீண்டும் கடந்த ஜூலை மாதம் அக்கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்தது. மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுடன் மல்லை சத்யா தொடர்பில் இருப்பதாக கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா இழைத்த துரோகம்போல், தமக்கு எதிராக மல்லை சத்யா சதி செய்து வந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாகச் சாடி இருந்தார்.
மதிமுகவிலிருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்
இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, ”வாரிசு அரசியலுக்காக வைகோ தனக்கு துரோகிப் பட்டம் கொடுத்துள்ளார்” என மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மீண்டும் அறிக்கைவிட்ட அவர், “ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தால் குடித்துச் செத்துப் போய் இருப்பேனே அன்புத் தலைவர் திரு வைகோ அவர்களே.. அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மல்லை சத்யா, நீதி கேட்டு உண்ணா நிலை அறப்போராட்டத்தை சென்னையில் நடத்தினார். இந்த நிலையில், மல்லை சத்யாவை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்வதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி விரோத நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டுள்ளார். கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருக்கிறது. எனவே, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். அதன்படி, மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அவர் என்னிடம் விளக்கம் அளிக்கலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.