வைகோ - மல்லை சத்யா இடையே உரசல்.. மதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசலா?
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுடன் மல்லை சத்யா தொடர்பில் இருப்பதாக கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. கட்சி நலனுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டு வருவதாகவும், திமுகவை வாழ்த்தி பேசியதாகவும் மதிமுகவினரே அவர் மீது குற்றஞ்சாட்டிய நிலையில், மீண்டும் உட்கட்சி பூசல் மேலோங்கத் தொடங்கியுள்ளது.
மல்லை சத்யாவின் இந்த நடவடிக்கை சரியல்ல என வைகோ பேசியதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தெரிவித்த நிலையில், வைகோ எப்போதும் மல்லை சத்யாவுக்கு துணையாகவே இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நிர்வாகக் குழு கூட்டத்தில் வைகோ கூறியவற்றை ஒரு தந்தையின் அறிவுரையைப் போல மல்லை சத்யா எடுத்துக்கொள்வார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
முன்பே மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ - துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே உரசல் ஏற்பட்ட நிலையில், அது பொறுப்பு விலகல் வரை சென்று முடிந்தது. இந்நிலையில் தற்போதைய உரசலுக்கு முன்பை போல வைகோவே முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.