மதிமுகவில் வெடித்த மல்லை சத்யா - துரை வைகோ மோதல் போக்கு.. சமாதானம் செய்து வைத்த வைகோ! நடந்தது என்ன?
மதிமுகவில் உட்கட்சிப் பூசல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (ஏப்.20) தொடங்கியது. ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், முதன்மைச் செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும், அவருடைய விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து, துரை வைகோவின் ராஜினாமவை கட்சித் தலைமை ஏற்காத நிலையில், முதன்மைச் செயலாளர் என்றே அவர் பெயர் உள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் 9 முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ”தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யத் தயார். துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று முதன்முதலில் கூறியது நான்தான். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள். மதிமுகவில் கடைசிவரை வைககோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை துரை வைகோ வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, “நான்தான் வைகோவின் சேனாதிபதி” என மல்லை சத்யா சொன்னதற்கு, “மல்லையா சத்யா மட்டுமல்ல, எல்லோரும் வைகோவின் சேனாதிபதிகள்தான்’ என துரை வைகோ எதிர்வினை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாதானம் ஆன பிரச்னை!
மல்லை சத்யா -துரை வைகோ இடையே சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. பழைய சம்பவத்தை மறந்து கட்சி பணிகளில் தொடர இருவருக்கும் வைகோ அறிவுறுத்தினார். கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முடிவை ஏற்று ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக துரை வைகோ தெரிவித்தார்,