கட்சி என்னுடையது vs சட்டமன்றத்தில் நான்தான் | கொறடாவை மாற்றக்கோரும் பாமக எம்.எல்.ஏக்கள்! அடுத்து?
அதிகரிக்கும் மோதல்
கொறடாவை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து மனு அளித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் கட்சியின் தலைவர் அன்புமணியுடன் இருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் பாமக தலைவர், கொறடா என இரண்டு முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் மருத்துவர் ராமதாஸுடன் இருக்கின்றனர். கொறடா பொறுப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலேயே அவரை மாற்றக்கோரி கோரிக்கை வைத்திருக்கின்றனர். நடப்பது என்ன? விரிவாகப் பார்க்கலாம்..,
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல்போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் யார் பெரியவர்கள்? யாருக்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிப்பதில் இருவருக்குமான மோதல்போக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இரண்டாக உடைந்து நிற்கும் பாமகவை முழுமையாக கைப்பற்றுவதில் இருவரும் தனித்தனியாக தீவிரம் காட்டி வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் மாவட்டம்தோறும் நிர்வாகிகளை சந்தித்து பொதுக்குழு கூட்டங்கள் நடத்தியதைப்போல, ராமதாஸும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீக்கப்பட்ட அருள்
ஆரம்பத்தில் இருந்தே ராமதாஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் அன்புமணி ராமதாஸ் மவுனம் காத்து வந்தார். ஆனால், அண்மையில் பனையூரில் நடந்த சமூக ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டத்தில், “ராமதாஸ் பேட்டியில் கூறுவது அனைத்தும் பொய். வயது முதிர்வின் காரணமாக குழந்தை போல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுயலாபத்திற்காக அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என அடுக்கடுக்காக தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
அன்புமணியின் இந்த பேச்சு ராமதாஸ் ஆதரவாளர்களை ஆத்திரமடைய வைத்தது. அன்புமணிக்கு பாமக எம்.எல்ஏ அருள் பதிலடி கொடுத்து பேசியிருந்தார். அதேபோல, பாமக எம்.எல்.ஏ அருளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தி பதிலடி கொடுத்தார். இருதரப்பும் மாறிமாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் அன்புமணி. ஆனால், ‘அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை, சட்டமன்றத்தில் பாமகவின் கொறாடாவாக அருளே நீடிப்பார்’ என ராமதாஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்த பாமக எம்.எல்.ஏக்கள்
இத்தகைய சூழலில், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவகுமார் ஆகியோர் பாமக சட்டமன்ற கொறடா அருளை மாற்றக்கோரி சட்டப்பேரவை சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்திருக்கின்றனர். அவர்களுடன் பாமக வழக்கறிஞர் பாலுவும் உடன் சென்றார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, தர்மபுரி, மேட்டூர், பென்னாகரம், மயிலம், சேலம் மேற்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாமகவின் சட்டமன்றக்குழுத் தலைவராக பென்னாகரத்தில் வெற்றி பெற்ற ஜி.கே.மணியும், கொறடாவாக சேலம் மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்ற அருளும் நியமிக்கப்பட்டனர். ஐந்து எம்.எல்.ஏக்களில் இவர்கள் இருவரும் தற்போது ராமதாஸ் பக்கம் இருக்கின்றனர். மற்ற மூவரும் அன்புமணி பக்கம் இருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கொறாடாவை மாற்றக்கோரி அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களும் கட்சியின் தலைவர் அன்புமணி வழங்கிய கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கியிருக்கின்றனர். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை கொறடாவின் அனுமதியோடுதான் எம்.எல்.ஏக்கள் செயல்படமுடியும். அதனால்தான், இந்தக்கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். புதிய கொறடாவாக மயிலத்தில் வெற்றிபெற்ற சிவக்குமாரை நியமிக்கவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
என்னை நீக்க முடியாது
பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் மருத்துவர் ராமதாஸுடன் இருந்தாலும், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பக்கமே இருக்கின்றனர். ஆனால், சட்டமன்றத்தைப் பொறுத்தவரை முக்கியப் பொறுப்புகளான குழுத்தலைவர் மற்றும் கொறடா என இரண்டு முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் மருத்துவர் ராமதாஸுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தந்தை மகனுக்கிடையிலான அதிகார யுத்தம் நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே என்பது நிரூபணமாகிறது..,
இந்நிலையில், பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி அனுமதி பெறாமல் கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என பாமக எம்.எல்.ஏ அருள் தெரிவித்திருக்கிறார். மேலும், ஜி.கே.மணியின் கையெழுத்தும் இடம் பெற வேண்டும் என அருள் தெரிவித்திருக்கிறார்.