பாஜக
பாஜகpt web

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? லிஸ்ட்டில் இருக்கும் நான்கு பேர்.. யாருக்கு வாய்ப்பு?

அடுத்த ஓரிரு வாரத்துக்குள் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். அடுத்த தலைவருக்கான பரிசீலனையில் இருக்கும் தலைவர்களின் பெயர் பட்டியல், தலைவர் தேர்வுக்கு ஆகும் கால தாமதத்துக்கு என்ன காரணம்… இன்றைய பெருஞ்செய்தியில் பார்க்கலாம்...
Published on

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது, ஆனால் அடுத்த தலைவர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. “உலகிலேயே பெரிய கட்சி என்கிறீர்கள்... ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையா?” என்று நாடாளுமன்றத்திலேயே பாஜகவை கேலி செய்துவிட்டார் அகிலேஷ் யாதவ். ஆனாலும், தலைவர் தேர்வு தொங்கலில் இருப்பதற்கு, பாஜக - ஆர்எஸ்எஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள்தான் முக்கியமான காரணம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

டெல்லியின் உச்ச அதிகார பீடங்களில் இன்று முணுமுணுக்கப்படும் தகவல் இதுதான். பாஜக தலைவர் பதவிக்கு மோடி – ஷா ஜோடி கொண்டுவர எண்ணும் விருப்பப் பட்டியலில் முன்வரியில் இருக்கும் பெயர்கள், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான்.

பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான்
பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான்pt web

மோடி அமைச்சரவையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமைச்சராக நீடிப்பவர் பூபேந்திர யாதவ். ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மற்றொருவரான தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர். ஒடிஷாவை சேர்ந்தவர். இருவருமே துடிப்பான செயல்பாட்டுக்குப் பேர் போனவர்கள். 55, 56 வயதில் இருப்பவர்கள். சமீபத்தில் நடந்த ஹரியானா மற்றும் மகாராஷ்டிர தேர்தல்களில் பாஜகவை வெற்றி பெற வைத்து தங்கள் நிர்வாகத் திறனை நிரூபித்தவர்கள்.

பாஜக
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. அசத்திய பானிபூரி வியாபாரியின் மகன்..!

ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்போ, மத்திய அமைச்சர்களான ஷிவ்ராஜ் சௌகான், எம்.எல்.கட்டார் இருவரின் பெயர்களையே பாஜக தலைமையிடம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஷிவ்ராஜ் சௌகான், எம்.எல்.கட்டார் இருவருமே ஆர்எஸ்எஸ்ஸில் கீழ் நிலையிலிருந்து பணியாற்றி மேலே வந்தவர்கள் என்பது போக, சங்கமா; மோடி - ஷாவா என்றால், சங்கத்தின் பின் உறுதிபட நிற்கக் கூடியவர்கள் என்பதே முக்கியமான பின்கதை. குறிப்பாக ஆர்எஸ்எஸ் தன்னுடைய முதல் தேர்வாகக் குறிப்பிடும் ஷிவ்ராஜ் சௌகானுக்கு 66 வயதாகிறது.

சிவராஜ் சிங் சௌகான்
சிவராஜ் சிங் சௌகான்

மோடியும் சௌகானும் ஒருகாலத்தில் இணையாக வளர்ந்தவர்கள். குஜராத்தில் முதல்வராக மோடி பொறுப்பேற்ற அதே காலகட்டத்தில்தான் மத்திய பிரதேசத்தில் சௌகான் முதல்வராகப் பொறுப்பேற்றார். மோடியைப் போன்றே சௌகானும் தன்னுடைய மாநிலத்தில் மிகவும் செல்வாக்கான தலைவர். தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர். மத்திய பிரதேசத்தின் நீண்ட கால முதல்வராக 16 ஆண்டு காலம் இருந்தவர். கடைசியாக நடந்த 2023 சட்டமன்ற தேர்தலில் பாஜக மத்திய பிரதேசத்தில் பெற்ற வெற்றிக்கும்கூட அவரே காரணகர்த்தா. என்றாலும், மோடி – ஷா விருப்பத்தின்பேரில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். 2014 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் தேர்வு நடந்தபோது, “குஜராத்தில் மோடி செய்த சாதனைகளைவிட மத்திய பிரதேசத்தில் சௌகான் செய்த சாதனைகள் மேலானவை” என்று அத்வானியால் பாராட்டப்பட்டவர் சௌகான். ஆனால், சௌகானை ஏற்பதில் மோடி-ஷாவுக்குப் பெரும் தயக்கம் இருக்கிறது.

பாஜக
விசிக பெண் கவுன்சிலர் படுகொலை.. நடுரோட்டில் வைத்தே வெட்டிய கணவன்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இத்தகு சூழலில்தான், எம்.எல்.கட்டார் எனும் மனோகர் லால் கட்டார் பெயரை அடுத்த வாய்ப்பாகக் கொடுத்தது ஆர்எஸ்எஸ். இவர் சங்கத்துக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டவர். பிரம்மச்சாரி... 15 ஆண்டுகள் முழு நேர பிரசாரகராக இருந்தவர். பிறகு மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து ஹரியாணா பாஜகவை வழிநடத்தியவர். ஹரியாணாவின் முதல்வராக இருந்தவர்.

எம்.எல்.கட்டார்
எம்.எல்.கட்டார்

இதனூடாக ஏன் ஒரு பெண் அரசியலரை இம்முறை பாஜக தலைவர் ஆக்கக் கூடாது எனும் வியூகத்திலும், தலித் தலைவர் ஒருவரை ஏன் கொண்டுவரக் கூடாது எனும் வியூகத்திலும்கூட இன்னொரு பட்டியலை பாஜக தலைமை ஆர்எஸ்எஸ் தலைமையுடன் விவாதித்துவருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் பிஹார், மேற்கு வங்க தேர்தல்களில் தொடங்கி 2029 மக்களவைத் தேர்தல் வரை கணக்கிட்டும் இன்னொரு பட்டியலும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

கூடவே தமிழ்நாட்டின் அண்ணாமலை உள்பட தேர்தல் மாநிலங்களின் முக்கிய முகங்களைத் தேசிய நிர்வாகக் குழுவில் கொண்டுவருவதற்கான யோசனையும் பேசப்படுகிறது. ஆனால், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையின் ஒப்புதலுடனேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.

பாஜக
TVK | கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு... தவெக செயற்குழு கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பது என்ன?

கட்சி விதிகளின்படி மாவட்ட, மாநில நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகுதான் தேசிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மொத்தமுள்ள 37 மாநிலத் தலைவர் பொறுப்புகளில் குறைந்தபட்சம் 19 மாநில தலைவரின் ஆதரவு இருந்தால்தான் பாஜகவின் தேசிய தலைவரைத் தேர்வு செய்ய முடியும் என்பதால், தற்போது வேகவேகமாக மாநிலத் தலைவர்கள் நியமனத்தை நடத்திவருகிறது பாஜக. ஜூலை 19 ஆம் தேதிக்குள் புதிய தேசியத் தலைவரை பாஜக அறிவித்துவிடும் என்று சொல்கின்றன பாஜக தலைமையக வட்டாரங்கள்.

பாஜக
10 லட்சம் கடனை அடைத்த AI.. 30 நாட்களில் நடந்த மேஜிக்.. என்னதான் நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com