எல்லாமே பனையூரில்தானா? ”எத்தனை நாட்களுக்கு விஜய்!” தவெக சொல்லும் காரணம் சரியானதா?
சென்னை ரிப்பன் மாளிகையில் 11வது நாளாக போராடும் தூய்மை பணியாளர்களை, தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பேசியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதகால அவகாசமே இருக்கும் சூழலில், போராட்டக் களத்தில் நேரில் குதிக்காமல், போராட்டக்காரர்களை அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார் விஜய். இந்நிலையில், ‘பனையூர் அரசியல் இன்னும் எத்தனை நாட்களுக்கு தலைவரே?’ என்று தவெக தொண்டர்களே குமுறத்தொடங்கியுள்ளனர். என்ன நடக்கிறது? விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 8 மாதகால அவகாசமே இருக்கும் நிலையில், வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்தி முடித்து, செப்டம்பரில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறார். சமீபத்தில் நடந்த செயற்குழுவில் கூட, ‘மக்களிடம் செல்.. மக்களிடம் வாழ்.. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்’ என்ற அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார் விஜய். “மதுரை மாநாட்டிற்குப் பிறகு மக்கள் சந்திப்பு பயணம்தான்.. இனி மக்களுடன்தான் வாழ்க்கை” என்று கூறினார்.
இந்த நேரத்தில், கட்சி தொடங்கிய காலமாக, Work from home அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்படுகிறது. ஆம், கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, ஒரு நடிகராக போராட்டக்களங்களில், சமூக பிரச்னைகளில் நேரடியாக பங்கேற்ற விஜய், இப்போது கட்சி அலுவலகத்திற்குள்ளே ஏன் சுறுக்கிக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஈழப்பிரச்னைக்கு போராட்டம், காவிரி நதிநீர் பிரச்னையில் உண்ணாவிரதம், அனிதா மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல், ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு என்று பல்வேறு நேரங்களில் விஜய் தனது செயல்பாடுகளால் பாராட்டப்பட்டு இருக்கிறார்.
கட்சி தொடங்கிய பிறகு அவர் நேரடியாக பங்கேற்ற போராட்டக்களம் பரந்தூர் போராட்டம்தான். அப்போது கட்சி தொடங்கி 10 மாதங்கள் ஆகியிருந்தது. கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, 2023ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களை நேரில் சென்று நிவாரணம் வழங்கியவர், கட்சி தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தின்போதும் நேரில் சென்று விசாரித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து நிவாரணம் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது, நிவாரணம் வழங்குவதுதான் சாலச்சிறந்த நடவடிக்கை.. ஆனால், அலுவலகத்திற்கு அழைத்து வந்து நிவாரணம் வழங்கியதால், பனையூர் பண்ணையார் என்று விமர்சித்தன எதிர்க்கட்சிகள். அந்த நேரத்தில் விஜய் சம்பவ இடத்திற்கு வந்தால், தேவையற்ற கூட்ட நெரிசல், பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படும் என்று காரணங்கள் சொல்லப்பட்டன. உதவி தேவைப்படுவோருக்கு உதவி சென்று சேர்கிறதே.. அந்த எண்ணமே போதும் என்றெல்லாம் வரவேற்றார் சீமான். இதற்கிடையே, விஜய்யின் கடைசி பட ஷூட்டிங் நெருக்கடிகள் எல்லாம் காரணமாக சொல்லப்பட்டன.
அந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மே மாதத்தோடு முடிந்ததாக தெரிகிறது. இந்த நேரத்தில், தூய்மை பணியாளர்களை விஜய் தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து பேசியிருப்பது விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ஆம், சமீபத்தில் காவல் விசாரணையின்போது மரணித்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு, விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார். அதோடு, கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மேடை ஏற்றி, சென்னையில் பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்தினார். அந்த மேடையில், காவல் மரணத்தால் தனது சொந்தத்தை பறிகொடுத்தவர் பேசியது கவனம் ஈர்த்தது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்றார் விஜய். அரசியல் கட்சிகள் மத்தியில், விஜய்யின் இந்த அணுகுமுறை வரவேற்பை பெற்றது. காவல் மரணம் என்ற பிரச்னையை, சமூக பிரச்னையாக விஜய் கையில் எடுத்ததை மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
ஆனால், கவினின் ஆணவப்படுகொலை விவகாரத்தில் விஜய் தரப்பில் அறிக்கை ஏதும் வரவில்லை. ஆதவ் அர்ஜுனா தரப்பில் இருந்தே, ‘ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சிறப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்’ என்று அறிக்கை வெளியானது.
இதுவே விமர்சனத்திற்குள்ளான நிலையில், சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராடும் மக்களை, விஜய் நேரில் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஆதவ், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோரே சந்தித்து பேசினர். இந்த நிலையில்தான், போராட்டக்குழுவை இன்று பனையூரில் வைத்து சந்தித்து பேசியிருக்கிறார் விஜய். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நீண்டிருக்கிறது. இதில், போராட்டக்குழுவின் பிரச்னைகளை கேட்டறிந்தவர், தவெக உங்களோடு நிற்கும் என்று உறுதியளித்திருக்கிறார். விஜய்யே நேரில் வருவதாக சொன்னதாகவும், அவர் வந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் தாங்களே பனையூர் வந்ததாக கூறுகின்றனர் போராட்டக்குழுவினர்.
எனினும், 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று நம்பிக்கை கூறும் விஜய், மக்கள் பிரச்னைக்காக போராட்டக்களத்திற்கு நேரில் வராதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசியல் கட்சி என்று வந்துவிட்ட பிறகு, மக்களை போராட்டக்களத்தில் சந்திக்க எது தடுக்கிறது? எத்தனை நாட்களுக்கு இந்த மென்மையான போக்கு? கையில் எடுத்து பேச வேண்டிய பிரச்னைகளை எல்லாம் கோட்டைவிட்டால் எப்படி என்று தவெக ஆதரவாளர்களே சமூகவலைதளத்தில் எழுதுவதை பார்க்க முடிகிறது. மக்களிடம் செல்.. மக்களுடன் வாழ் என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் விஜய், மக்களுடன் களத்தில் வந்து நிற்க தயங்குகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதோடு, கட்சி தொடங்கிய நாள் முதலாக, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாததும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. தன் மீது விழும் விமர்சனங்களை விஜய் எப்படி உடைக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.