’கோலி மீதான பேரன்பு..’ விராட்டின் டெஸ்ட் ஜெர்சியை பிரேம் செய்து வைத்திருக்கும் சிராஜ்!
இந்திய கிரிக்கெட் களத்தில் விராட் கோலிக்கும், முகமது சிராஜுக்கும் இடையேயான பாசம் என்பது ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆர்சிபி அணியில் பல வருடங்களாக ஒன்றாக விளையாடிய முகமது சிராஜின் திறமையை உணர்ந்த விராட் கோலி, அவருடைய தற்போதைய முன்னேற்றத்தில் பெரிதும் பங்காற்றியவர்.
சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜை விராட் கோலி பாராட்டியிருந்த நிலையில், என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி பையா என்று சிராஜ் பதிலளித்திருந்தார். அந்தளவு விராட் கோலி மீது முகமது சிராஜ் மிகுந்த அன்பையும், மரியாதையும் வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் ஹீரோவாக மாறிய முகமது சிராஜ் குறித்து பேசியிருந்த அவருடைய சகோதரர், முகமது சிராஜின் ஃபிட்னஸ், முன்னேற்றம் அனைத்திற்கு பின்னாலும் விராட் கோலி இருக்கிறார் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
கோலி மீதான பேரன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் சிராஜ்..
முகமது சிராஜை இந்திய டெஸ்ட் அணியில் பும்ராவுடன் பந்துவீச வைத்தது விராட் கோலி தான், அப்போது அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் பின்னால் சிராஜ் தன்னுடைய பந்துவீச்சால் விராட் கோலியின் நம்பிக்கையை மீட்டெடுத்தார். கடந்த ஐபிஎல்லில் ஆர்சிபி அணியிலிருந்து சிராஜ் நீக்கப்பட்ட பின்னர், கண்ணீர் மல்கிய கண்களோடு விராட் கோலியை கட்டியணைத்து வந்த சிராஜை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் இடையேயான உறவை பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது முகமது சிராஜின் வீட்டிலிருக்கும் விராட் கோலியின் ஜெர்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது விராட் கோலி மீதான சிராஜின் அன்பை பிரதிபலிக்கிறது. சிராஜின் வீட்டில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றில் விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சி, அவரின் கையொப்பத்துடன் பிரேம் செய்யப்பட்டுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் சிராஜ்-கோலி இருவருக்கும் இடையேயான அன்பை பாராட்டிவருகின்றனர்.