”தரம் மலிவாகிவிட்டது; ஹாலிவுட்டில் நல்ல படங்கள் எடுப்பது இயலாததாகிவிட்டது” - ஜாக்கி சான் விமர்சனம்
உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நடிகர் என்றார் அது இன்றளவும் ஜாக்கி சான் மட்டும்தான். ஹாங்காங்கை சேர்ந்தவரான ஜாக்கி சான், தன்னுடைய அசத்தலான சண்டைக்காட்சிகளாலும், அதில் தன்னுடைய நகைச்சுவை உடல் அசைவுகளாலும் உலக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
1961-ல் தொடங்கி 60 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பல தரமான படங்களை கொடுத்தவராக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் ஜாக்கி சான், நவீனகால ஹாலிவுட் திரைப்படங்களை விமர்சித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில் ஹாலிவுட்டில் ஒரு தரமான சிறந்த படத்தை எடுப்பதென்பது கடினமான காரியம் என்றும், தற்போது தயாரிப்பாளர்கள் எப்படி லாபம் பார்க்கலாம் என்ற தொழிலதிபர்களாகவும், வணிகர்களாகவும் மட்டுமே இருப்பதாக விமர்சித்துள்ளார்.
நவீன படங்களை விட பழைய படங்கள் நன்றாக இருக்கும்..
லோகார்னோவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ஜாக்கி சான், தன் திரைப்பயணம் குறித்து பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நவீனகாலத்தில் நல்ல படங்கள் எடுப்பது எப்படி மாறிப்போய் உள்ளது என்பதை வெளிப்படையாக கூறினார்.
நவீனகால சினிமா குறித்து பேசிய அவர், “தற்போது, நிறைய பெரிய ஸ்டுடியோக்கள் திரைப்பட தயாரிப்பாளர்களாக இருப்பதில்லை, அவர்கள் வணிகர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் 40 மில்லியன் முதலீடு செய்து, 'அதை எப்படி நான் திரும்பப் பெறுவது?' என்றுதான் நினைக்கிறார்கள். நீங்கள் அந்த நிலையிலிருந்து தற்போது மீற முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் கடினம்" என்று கூறினார்.
மேலும் தற்போதைய படங்களை பழைய படங்களுடன் ஒப்பிட்டு பேசிய அவர், பழைய திரைப்படங்கள் தற்கால படங்களை விட சிறந்தவை என்று தான் நினைப்பதாக கூறினார்.