செங்கோட்டையன் பேட்டி.. வெளியில் பேசப்படாத அரசியல் ரகசியம்.. இணைத்துப் பார்க்க வேண்டியது என்ன?
இது செங்கோட்டையன் வரலாறு
அதிமுகவில் ஒரு புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன். இதுகுறித்த பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்!
திராவிட பெருந்தலைவர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவிலிருந்து பிரிந்து 1972இல் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோதே, கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் அதிமுக கிளையை உருவாக்கி செயலாளராக செயல்பட்டவர். அதிமுக எதிர்கொண்டு வென்ற முதல் பெரும் தேர்தலான 1977 சட்டமன்றத் தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியின் பிரதிநிதியாக அதிமுக சார்பில் பேரவைக்குள் நுழைந்தவர் செங்கோட்டையன். அதன் பிறகு, 1980இல் இருந்து இப்போது வரை கோபிசெட்டிபாளையத்தின் எம்எல்ஏ என்றால், சந்தேகமே வேண்டாம், அது செங்கோட்டையன்தான்! முதல்முறையாக ஜெயலலிதா முதல்வராகி ஆட்சியமைத்த 1996 அமைச்சரவையில், செங்கோட்டையன் அமைச்சரானார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே, அதிமுகவின் கொங்கு மண்டல முக்கிய முகங்களில் ஒருவர் என்றாலும், அமைதியாக செயலாற்றக் கூடியவர் என்று பெயரெடுத்தவர் செங்கோட்டையன்!
பழனிசாமியின் எழுச்சி - செங்கோட்டையனின் சரிவு
செங்கோட்டையன் சார்ந்த அதே கொங்கு மண்டலத்திலிருந்து வந்த மற்றொரு முக்கிய முகம் எடப்பாடி பழனிசாமி என்பதும், அவரவர் பகுதியில் இணையான செல்வாக்கு பெற்றவர்களாக திகழ்ந்தார்கள் என்பதுதான் இந்தக் கதையின் மிகமுக்கியமான அம்சம். இயல்பாகவே பிராந்தியம் சார்ந்த ஒரு போட்டியும், பனிப்போரும் இருவர் மத்தியிலும் உண்டு. ஆனால், பெரிதாக வெளிப்படாத யுத்தம் இது!
ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் செங்கோட்டையன் பெயரும் இருந்தது; அதைத் தாண்டியும்தான் பழனிசாமி பெயர் அரியணை ஏறியது என்றாலும், பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டார் செங்கோட்டையன். ஆனால், பழனிசாமியின் எழுச்சி நேர்எதிரே செங்கோட்டையனின் சரிவு ஆனது.
கோவை எஸ்.பி. வேலுமணி, நாமக்கல் தங்கமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை தனது நெருக்க வட்டத்தில் கொண்டுவந்து, கொங்கு மண்டலத்தில் தனது கரத்தை மேலும் வலுவாக்கினார் பழனிசாமி. கட்சியின் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராக செங்கோட்டையன் இருந்தாலும், புதிய பதவிகளை உருவாக்கி, முன்னாள் எம்எல்ஏ ராஜா, முன்னாள் எம்எல்ஏ வி.கே.சின்னசாமியின் மகன் சிவகுமார் ஆகியோரை நியமித்தார். இது மிகுந்த சலசலப்பானதால், நியமனத்தை பழனிசாமி ரத்து செய்துவிட்டாலும், இது செங்கோட்டையன் மனதில்ஆறாக்காயமாக பதிந்துவிட்டது. தன்னை முன்னிலைப் படுத்துவதில் மட்டுமே பழனிசாமி முனைப்பாக இருப்பதாக, சுற்றியுள்ளோரிடம் புலம்பினார் செங்கோட்டையன்.
சூறாவளியான மௌனம்
கட்சிக்குள்ளே இருந்த செங்கோட்டையனின் அதிருப்தி பொதுவெளியில் அம்பலமானது, கடந்த பிப்ரவரி மாதத்தில்! அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கான பாராட்டு விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் தவிர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டி சீற்றம் காட்டினார் செங்கோட்டையன். பழனிசாமியை மட்டுமின்றி, கட்சியில் அவரது ஆதரவாளர்களையும் தவிர்த்தார். சட்டமன்றத்திலும் இந்த இடைவெளி தொடர்ந்தது. இதனூடாகவே டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தார். தொடர்ந்து, ஒரு தற்காலிக இணக்கம் உருவானதுபோல தெரிந்தது. ஆனால், அந்த மௌனம்தான் இப்போது சூறாவளியாக வெடித்திருக்கிறது.
‘கவர்ச்சிகரமான ஆளுமை மிக்கதலைவர்’ என்பதே அதிமுகவின் மையசக்தி. பகுதிவாரியாக வலுவான ஆட்களையும், எல்லா சமூகத்தினரையும் அரவணைத்து களம் காண்பதே அதிமுகவின் வெற்றி உத்தி! இந்த 2 விஷயங்களிலுமே பழனிசாமி சறுக்கிவிட்டதாக கருதுகிறார் செங்கோட்டையன். இதே எண்ணத்திலேயே அதிமுகவில் பலரும் புழுங்கிக் கொண்டிருத்ததாகச் சுட்டியே தன்னுடைய பேட்டியின் விளைவாக அதிமுகவின் ஒருங்கிணைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைக்க வேண்டும் – இதுதான் செங்கோட்டையனின் ஒரே முழக்கம். இதற்காக பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன். இல்லையென்றால், தனது மனநிலையில் உள்ள ஒவ்வொருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தானே இறங்கிச் செய்வேன் என்றும் சொல்லிவிட்டார் செங்கோட்டையன்.
வெளியே பேசப்படாத அரசியல் ரகசியம்
செங்கோட்டையனுடைய பேட்டியின் மிக முக்கியமான அம்சம்: டெல்லியில் பாஜக தலைவர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் இருவரையும் சந்தித்தது அவர்களுடைய அழைப்பின் பெயரிலேயே நடந்தது என்று அவர் வெளிபடுத்திய செய்தியாகும். வெளியே பேசப்படாத அரசியல் ரகசியம் ஒன்றுடன் இந்தச் செய்தியை நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். அதாவது, ஆடிட்டர் குருமூர்த்திக்கும் செங்கோட்டையனுக்கும் நெருங்கிய நட்புண்டு என்பதும், சமீபத்தில் கூட இருவரும் பேசியிருக்கிறார்கள் என்பதும், ஒன்றிணைந்த அதிமுகவாலேயே திமுகவை வெல்லமுடியும் என்பதை திரும்ப திரும்ப பேசிவருகிறார் குருமூர்த்தி என்பதுமே அந்தச் செய்தி. எனில்,செங்கோட்டையன் விஷயத்தில் பாஜகவின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பது வெளிப்படையானது!
கட்சி தொய்வோடு இருக்கிறது; வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற யோசனையை பழனிசாமியிடம் மூத்த தலைவர்களுடன் முன்வைத்ததையும் தன் பேட்டியில் கூறியுள்ளார் செங்கோட்டையன். வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோருடன் சென்று பேசியபோதும், அதை பழனிசாமி அங்கீகரிக்கவில்லை என்பது செங்கோட்டையன் வெளிப்படுத்தியிருக்கும் இன்னொரு முக்கிய செய்தி. அதிமுகவுக்குள் என்ன மனநிலை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தகவல் வெளிப்படுத்தியிருக்கிறது.
மறப்போம் மன்னிப்போம்; வெளியே சென்றவர்களை சகோதர பாசத்தோடு அரவணைத்தால் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனும் செங்கோட்டையனுடைய குரல் அதிமுக நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் ஆழமாக இறங்கும் என்பதும், கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மட்டும் அல்லாது அதிமுக கூட்டணி சக்திகளிடமிருந்தும் இதற்கான அழுத்தம் வரும் என்பதும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டும் சேதி. இப்போது அனைவர் கவனமும் செங்கோட்டையன், பழனிசாமியின் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி குவிந்திருக்கிறது. அடுத்தது என்ன? தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது!