அசாம்| CAA-க்கு எதிர்ப்பு.. ஆய்வாளர்கள் சொல்வது என்ன.. மீண்டும் வெடித்த போராட்டம்?
மத்திய அரசு அளித்த புதிய விலக்குகள், அசாமில் மீண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள விலக்குகளுக்கு எதிர்ப்பு
வங்கதேசத்தின் சர்வதேச எல்லைகளை நம்முடைய 5 மாநிலங்கள் பகிர்ந்துகொள்ளும் நிலையில், மத்திய அரசு அளித்த புதிய விலக்குகள், அசாமில் மீண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025இன் கீழ், மத்திய அரசு சில விலக்குகளை அளித்துள்ளது. அவை, கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள், விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் தங்க வழிவகை செய்கிறது. ஆனால், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டபோதே, அது வெளிநாட்டவர்கள் அசாமில் குடியேறுவதற்கு வழிவகுக்கும் என போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது மத்திய அரசு அளித்துள்ள விலக்குகளுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள விலக்கு என்ன?
அதாவது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அல்லது அவர்களின் ஆவணங்கள் காலாவதியானாலும்கூட அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) உத்தரவு, 2025இன்கீழ், இந்தக் குழுக்களைச் சிறப்புப் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்து, உள்துறை அமைச்சகம் (MHA) செப்டம்பர் 1 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த உத்தரவின்படி, இந்தியாவிற்குள் அவர்கள் நுழையும்போது செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருப்பது அல்லது முறையான ஆவணங்களுடன் மட்டுமே தொடர்ந்து தங்குவது போன்ற தேவைகள் அடங்கும். நடைமுறையில், மற்ற வெளிநாட்டினரைப் போலல்லாமல், ஆவணங்கள் இல்லாதது அவர்களின் விஷயத்தில் குற்றமாகக் கருதப்படாது. இந்த அறிவிப்பு CAAஇன் கீழ் உள்ள அதே ஆறு சிறுபான்மை குழுக்களைக் குறிப்பிடுகிறது என்றாலும், குடியுரிமை விண்ணப்பங்களுக்கான CAAஇன் 2014 கட்-ஆஃப்பை இது நீட்டிக்கவில்லை என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
விலக்கு குறித்து ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
சில்சாரில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான தர்மானந்தா தேப், "CAA-வின் கீழ், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31, 2014 ஆகும். புதிய அறிவிப்பு அந்தக் காலக்கெடுவை மாற்றவில்லை. இது இந்தச் சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்பை மட்டுமே அளிக்கிறது. அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்ற அச்சமின்றி இந்தியாவில் தங்க அனுமதிக்கிறது. ஆனால், இந்த உத்தரவின் கீழ் அவர்கள் நேரடியாக குடியுரிமை கோர முடியாது” என்கிறார்.
அதேபோல், கரீம்கஞ்சில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் முன்னாள் நீதிபதி ஷிஷிர் டே, ”இதன்மூலம், எதிர்காலத்தில் அரசாங்கம் CAA-வைத் திருத்த திட்டமிட்டிருக்கலாம். இப்போதைக்கு, இந்த உத்தரவு குடியுரிமையை வழங்காது. ஆனால் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. ஆகஸ்ட் 2024இல் பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பல இந்துத் தலைவர்களும் சில முஸ்லிம் தலைவர்களும்கூட இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் விலக்கு உத்தரவு முஸ்லிம்களைத் தவிர்த்து ஆறு சிறுபான்மை குழுக்களை மட்டுமே உள்ளடக்கியது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ், “அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்? எவ்வளவு காலம் இந்தச் சலுகையை அவர்கள் அனுபவிப்பார்கள்? மேலும் இது இந்தியாவின் குடியுரிமை கட்டமைப்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அரசாங்கம் சட்டவிரோதமாக நுழைபவர்களை சட்டப்பூர்வமாக்குகிறதா? அப்படியானால், அசாமின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும். பாஜக அரசு 2024 வரை மக்களை தங்க அனுமதித்தால், மற்றவர்களை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்திந்திய அசாம் மாணவர் சங்கம் போராட்டம்
இந்த நிலையில்தான், அண்டை நாடுகளைச் சேர்ந்த ஆறு சிறுபான்மை சமூகங்களின் நுழைவு, தங்குதல் மற்றும் வெளியேறுதலை அனுமதிக்கிறது. இதையடுத்து சட்டவிரோத வங்கதேச குடியேற்றவாசிகளை வெளியேற்றுதல், 1985 அசாம் ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், இந்தியா-வங்கதேச எல்லையை கண்டதும் சுடும் உத்தரவுகளுடன் மூடுதல், NRC-ஐ முறையாகப் புதுப்பித்தல், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் (CAA) அசாமை விலக்குதல் மற்றும் ஒப்பந்தத்தின் 6வது பிரிவு குறித்த பிப்லாப் குமார் சர்மா குழு அறிக்கையை விரைவாக அமல்படுத்துதல் ஆகியவற்றைக் கோரியும் புதிய விலக்குகளுக்கும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, அனைத்திந்திய அசாம் மாணவர் சங்கம் போராட்டங்களை அறிவித்துள்ளது. அசாம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தியுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் உத்பல் சர்மா, அசாமை குப்பைத் தொட்டிபோல் நடத்த வேண்டாம் என மோடி மற்றும் அமித் ஷாவை எச்சரிப்பதாக கூறியுள்ளார்.
"2019ஆம் ஆண்டு CAA நிறைவேற்றப்பட்டபோது, முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான தடையை மத்திய அரசு நீட்டிக்கக்கூடும் என்று நாங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினோம். தற்போது வெளியிடப்பட்ட புதிய உத்தரவு எங்கள் அச்சத்தை யதார்த்தமாக மாற்றியுள்ளது. அசாமின் பழங்குடி மக்கள் CAA-வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை எதிர்த்து வீதிகளில் இறங்குவார்கள். இந்த உத்தரவு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) விட ஆபத்தானது" என்று AASU தலைவர் உத்பால் சர்மா தெரிவித்துள்ளார். ஆவணமற்ற இந்து வங்கதேசத்தினருக்கு குடியுரிமை வழங்கும் CAA-வை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் அசாம் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விலக்கு குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அசாம் சன்மிலிதா மோர்ச்சா (ASOM) அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ”CAA இயற்றப்பட்டதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. அசாமின் பழங்குடி மக்களின் அழிவு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது” என அது தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் தேபப்ரதா சைகியா, ”புதிய உத்தரவு அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படைக்கு எதிரானது. முன்னர், நாங்கள் CAA-வை எதிர்த்தோம், இப்போது இந்த விலக்கை எதிர்க்கிறோம். இது குடியேற்றவாசிகளை 2024 வரை தங்க அனுமதிக்கிறது. இது தொடர்ந்தால், அசாம் அதன் அடையாளத்தை இழக்கும்.ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது வகுப்புவாத அரசியலுக்காக இந்தியாவின் எதிர்காலத்தை அழித்து வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வார் சர்மா, ”இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இதன்மூலம் இந்திய குடியுரிமை பெறுவார்கள் என்று சிலர் கூறினர். ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 12 பேர் மட்டுமே விண்ணப்பித்ததைக் காண்கிறோம். எனவே இது இனி விவாதப் பொருளாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.
அசாம் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்
அசாம் ஒப்பந்தம் என்பது ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு ஒப்பந்தமாகும். இது அசாமிய கலாசாரம், பாரம்பரியம், மொழியியல் மற்றும் சமூக அடையாளத்தைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட ஒப்பந்தமாகும். முன்னதாக அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்த அனைத்து அசாம் மாணவர் சங்கம் நடத்திய ஆறு ஆண்டுகால போராட்டத்தின் முடிவில் இந்த அசாம் ஒப்பந்தம் வந்தது. அசாம் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், மாநிலத்தில் யார் வெளிநாட்டவர் என்பதைக் கண்டறிவதாகும். ஒப்பந்தத்தின் பிரிவு 5, ஜனவரி 1, 1966, வெளிநாட்டினரைக் கண்டறிவதற்கான அடிப்படை கட்-ஆஃப் தேதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது; கூடுதலாக, ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 24, 1971 வரை வந்தவர்களை முறைப்படுத்தவும், மார்ச் 25 மற்றும் அதற்குப் பிறகு வந்தவர்களை முறைப்படுத்தவும் இது வழிவகுத்தது. 1966-71 காலகட்டத்தில் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மாநிலத்திற்குள் நுழைந்த ஆவணமற்ற குடியேறிகள் கண்டறியப்பட்டால், அவர்கள் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு உரிமை மறுக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் விதித்தது. குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A இந்த நிபந்தனைகளை எளிதாக்குகிறது. அதேநேரத்தில், அசாம் ஒப்பந்தம் வெளிநாட்டினருக்கு எதிரான ஆறு ஆண்டு போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இயக்கத்தின் தலைவர்கள் ஆரம்பத்தில் வெளிநாட்டினரைக் கண்டறிவதற்கும், அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், அவர்களை மாநிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கும் 1951ஆம் ஆண்டை கட்-ஆஃப் ஆண்டாகக் கோரினர். ஆனால் இறுதியில் அவர்கள் மார்ச் 25, 1971 அன்றைய தேதிக்கு உடன்பட்டனர்.