"கெட்டவன் என்று சொல்பவர்களிடம் பதில் சொன்னால் நேரம் கழிந்துவிடும்" - அண்ணாமலையின் பதில் யாருக்கானது?
சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோட்டரி சங்கம் சார்பில் பத்ம விபூஷன் விருது பெற்ற பரதநாட்டிய கலைஞர் பத்ம சுப்ரமணியனுக்கு, YGP கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டி.டி.வி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது குறித்தும், பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் தான் பங்கேற்காதது மற்றும் தவெக தலைவரின் அரசியல் குறித்தும் பல விஷயங்களை இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
“டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன்”
அவர் கூறுகையில், "2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மிக முக்கியமான தலைவராக இருந்தார். தமிழக அரசின் நீண்ட நெடிய பயணத்தை பார்த்தவர், நிறைய பிரச்னைகளை சந்தித்தவர். எனவே, 2026 தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு, மக்களுக்கு நல்ல, தொலைநோக்கு பார்வை இருக்கக்கூடிய, சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பது. அதனால், உங்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணன் டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். அதை அவர் பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மேலும், ஓ பன்னீர்செல்வம் அவர்களும் சாதாரண அரசியல்வாதி கிடையாது. ஒரு தேர்தலில் சின்னம் இல்லாமல் சுயேச்சை வேட்பாளராக இந்தியாவில் எத்தனை பேர் போட்டியிட்டு இருப்பார்கள், எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் கிடையாது. பிரதமர் நரேந்திர மோடியின் மீது இருக்கக்கூடிய அன்பிற்காக ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் தங்கள் முடிவுகளை நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
“சின்ன சின்ன பிரச்னைகள் களையப்படும் ”
தொடர்ந்து பேசிய அவர், “நாம் தேவையில்லாத சில விஷயங்களை குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி விரிவுபடுத்தப்பட்டபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று தெளிவாக சொன்னார். 2026-ல் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்றும் அமித்ஷா மிக உறுதியாக இருக்கிறார், சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தால் கூட அதெல்லாம் களையப்படும் என்பது என்னுடைய நம்பிக்கை.
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த தொலைநோக்கு பார்வையில் திமுக தலைமையில் இருக்கக்கூடிய இண்டி கூட்டணி தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும், மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் களையப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசினார்.
“என்னை பார்த்தால் அதிருப்தியில் இருக்கின்ற மாதிரி தெரிகிறதா”
டெல்லியில் நடந்த பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை, பாஜக தலைமை மீது நீங்கள் அதிருப்தியில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “என்னை பார்த்தால் அதிருப்தியில் இருக்கின்ற மாதிரி தெரிகிறதா? வேலை பளு காரணமாகவே என்னால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. தொண்டர்கள் அழைக்கிறார்கள் நீங்கள் தலைவராக இருக்கும்பொழுது நேரம் கொடுக்கவில்லை தற்பொழுது தொண்டராக இருக்கிறீர்கள் வாருங்கள் என்று கூறுகிறார்கள், அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நான் கலந்து கொள்ள முடியாதது பற்றி கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கு நான் முறையாக தெரிவித்திருந்தேன்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசி மூலமாக நான் பேசியிருந்தேன். இது பெரிய பிரச்சனை கிடையாது களத்திலும் தலைவர்கள் இருக்க வேண்டும். தலைவர்கள் களத்தில் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியம்”.
”தாக்கத்தை ஏற்படுத்துவது வேறு ஆட்சி அமைப்பது வேறு”
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, “2026 விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதியவர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுக்ககூடிய ஒரு இடம்.. எப்பொழுதும் பத்து சதவீத வாக்காளர்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். தாக்கத்தை ஏற்படுத்துவது வேறு ஆட்சி அமைப்பது வேறு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது என்னுடைய தொடர் நம்பிக்கை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜகவில் சில சலசலப்புகள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பான கேள்விக்கு கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “நான் அரசியலில் சில விஷயங்களை கடந்து செல்லக்கூடிய ஒரு மனிதன். மாற்றம் வேண்டும் என்று களத்தில் நிற்கிறேன்; நாம் செய்யக்கூடிய சில வேலைகள் வித்தியாசமாகத்தான் இருக்கும். இதில் சில தலைவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், அவர்களுடைய பார்வை வித்தியாசமாக இருக்கலாம் பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
அரசியலில் இருந்தால் நான்கு பேர் நல்லவன் என்று சொல்வார்கள் நான்கு பேர் கெட்டவன் என்று சொல்வார்கள். கெட்டவன் என்று சொல்பவர்களிடம் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் என்னுடைய நேரம் கழிந்து விடும். இதையெல்லாம் கடந்து செல்வோம் இதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.