செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிpt web

”செங்கோட்டை சொல்லியே கேட்கவில்லை... செங்கோட்டையன் சொல்லி கேட்கப்போகிறாரா?” - தலைவர்கள் சொல்வது என்ன?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசியிருக்கும் நிலையில், அவரின் பேட்டிக்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
Published on

அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுக ஒன்றிணைவது பற்றி நல்ல முடிவை எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை என்றால் நான் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் அதிமுக ஒன்றிணைப்பது குறித்த முடிவை அவர், 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் எனவும் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அது குறித்து காண்போம்..

கட்சியின் வெற்றி முக்கியம்

சசிகலா
சசிகலாweb

ஒன்றுபடுவோம், வென்றுகாட்டுவோம் என சசிகலா தெரிவித்திருக்கிறார். செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளார் என்றும், அதிமுக ஒன்றிணைய எப்படி தடைபோட்டாலும், அவற்றை தவிடுபொடியாக்கி மீண்டும் இணைவோம் என சசிகலா அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். திமுகவை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுக வழி செய்யும் என்றும் சசிகலா தெரிவித்திருக்கிறார்.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்...

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்புதிய தலைமுறை

செங்கோட்டையன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “முயற்சி செய்வது நல்ல விஷயம். அரசியலில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது; கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படும்; எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றலாம்” என்று தெரித்தார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
“அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததில்லை” - துரை கருணா!

அனைவரின் கருத்துக்களும் அதிமுக ஒன்றிணைவதையே விரும்புகின்றன...

இதுகுறித்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கூறியதாவது, “செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்திய கருத்துகள் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் வரவேற்க கூடிய கருத்தாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுகிற வகையில் 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற வகையில் அந்த கருத்து அமைந்திருக்கிறது. மேலும், அதிமுக ஒன்றிணைவது குறித்து 2024 மக்களவை தேர்தலில் இருந்து நான் பேசுகிறேன். இன்று நயினார் நாகேந்திரன் அவர்களும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்தை வரவேற்றிருக்கிறார். அமித்ஷா அவர்களும் இதே கருத்தையே வலியுறுத்திருக்கிறார்.

கே.சி பழனிசாமி, பழனிசாமி
கே.சி பழனிசாமி, பழனிசாமிpt web

எனவே அனைவரின் கருத்துக்களும் அதிமுக ஒன்றிணைவதையே விரும்புகின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் தலைமைக்கு ஆபத்து வருமோ என்ற பயம் காரணமாக யாரையும் சேர்த்துக்கொள்ள தயங்குகிறார். அவர் திமுக விடம் தோற்றாலும் பரவாயில்லை நான் அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார். 2026-ல் அதிமுக தோற்றால் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மன்னிக்க மாட்டார்கள். எனவே அதிமுக ஒன்றிணைப்பதற்கான முயற்சியை எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

புதிதாக எதுவும் பேசவில்லை

செங்கோட்டையன், புகழேந்தி
செங்கோட்டையன், புகழேந்திpt web

புதிய தலைமுறையிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, “அதிமுக தொண்டர்கள் சொல்வதையே இன்று செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார்; புதிதாக எதுவும் சொல்லவில்லை. இதை இபிஎஸ்-யிடம் நேரிலேயே பேசியிருக்கலாம். புதிதாக செங்கோட்டையன் எதாவது முடிவெடுக்கப்போகிறார் எனக் காத்திருந்தோம். எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறார் என்பதற்கு எதையும் கோடிட்டுக்காட்டவில்லை. செங்கோட்டை சொல்லியே கேட்கவில்லை. செங்கோட்டையன் சொல்லி கேட்கப்போகிறாரா? 10 நாட்கள் கழித்து செங்கோட்டையன் என்ன செய்ய போகிறார்?” எனத் தெரிவித்திருக்கிறார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆரின் தொண்டர்.. ஜெ.வின் விசுவாசி.. அன்று முதல் இன்று வரை.. யார் இந்த செங்கோட்டையன்?

கெடு முடிந்ததும் தீவிரமாக செயல்பட வேண்டும்

புகழேந்தி
புகழேந்திpt web

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “செங்கோட்டையன் பேசியதை ஒவ்வொரு அதிமுக தொண்டரும் வரவேற்கிறார்கள். செங்கோட்டையன் சொன்ன கருத்தை வரவேற்கிறேன். 10 நாள் கெடு கொடுத்திருக்கிறார். கெடு முடிந்ததும் அவர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நாங்கள் எல்லாம் வெளியில் வந்துவிட்டோம். ஆனால், செங்கோட்டையன் கட்சியில் இருக்கிறார். மாவட்ட செயலாளராக, அமைப்பு செயலாளராக இருக்கிறார். அவரை அதிமுக தொண்டர்கள் அத்தனைபேரும் அறிவார்கள். அவர் எடுத்திருக்கும் முடிவு இத்தருணத்தில் சரியான முடிவு” எனத் தெரிவித்தார்.

நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்...

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்pt web

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து பேசுகையில், “அதிமுக-வில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுக-வை வளர்க்க உதவியவர் செங்கோட்டையன். இன்று ‘ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்' என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். அவரின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது; ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெல்ல முடியும்" என்று கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன் மீது பாஜகவின் கடைக்கண் பார்வை? என்ன நடக்கிறது அதிமுகவில்?

பிரளயமாக வெடிக்கிறதோ?

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா புதிய தலைமுறையிடம் பேசுகையில், “செங்கோட்டையன் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் அறிமுகமானவர். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோதே அக்கட்சியில் இணைந்து, ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக இருந்து அதிமுக வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் செங்கோட்டையனைத் தெரியும். கிட்டத்தட்ட லட்சக்கணக்கான நிர்வாகிகள் அவருக்கு நேரடிப் பழக்கம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வடிவமைத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் செங்கோட்டையனுக்கு முழுமையான பங்கு உண்டு.

அப்படிப்பட்ட சுற்றுப்பயணத்தின்போதுதான் செங்கோட்டையனுக்கு பிற பகுதிகளில் உள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்படி இருபெரும் தலைவர்களிடமும் நெருக்கமாக இருந்த செங்கோட்டையனை தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கிறார். கட்சியின் முக்கியத்தலைவர்களும் கட்சி ஒன்றிணைய வேண்டுமென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தினார்கள். ஆனால், பிடிவாதமாக இபிஎஸ் மறுத்ததன் விளைவாக அவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தார்கள். அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான் இன்று பிரளயமாக வெடிக்கிறதோ என்று கருதுகிறேன்.

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா
மூத்த பத்திரிகையாளர் துரை கருணாpt web

எடப்பாடி பழனிசாமியிடம் சுயநலமும் சர்வாதிகாரப்போக்கும் மேலோங்கி இருப்பதாகப் பார்க்கிறேன். தனக்கு எதிராக கட்சி தொடங்கியவர், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் என எல்லோரையும் அரவணைத்தவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் கட்சியின் மூத்த முன்னோடிகள் பிரிந்து தனக்கு எதிராக இயங்கிய நிலையில், அவர்களை அழைத்து கட்சியிலும் அமைச்சரவையிலும் பொறுப்புகளை வழங்கி, கட்சியின் எதிர்காலமும் வெற்றியுன் முக்கியம் என பயணப்பட்டார்கள். அதனால்தான் அதிமுக தொடர் வெற்றிகளைப் பெற்றது. ஆனால், இந்த தலைவர்களின் போக்குகளில் இருந்து முற்றிலும் திசைமாறி எடப்பாடி பழனிசாமி தான்தான் அதிமுக என சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொள்கிறார். இது நிச்சயமாக அதிமுகவிற்கு தொடர் தோல்விகளை ஏற்படுத்தும். இதை இபிஎஸ் உணர்ந்தும் தன் நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்கிறார். இதற்கு 2026 தேர்தல் சரியான பாடம் கற்பிக்கும்" எனத் தெரிவித்தார்,

இவ்வாறு இருக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com