PT Top News Today | அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் இந்திய அணி தோல்வி வரை!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது வரை இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்ட காரணத்தால், செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பசும்பொன்னில் இணைந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், சசிகலாவையும் சந்தித்து பேசிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“நாளை விரிவாக விளக்கமளிக்கிறேன்” - செங்கோட்டையன்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், நாளை விளக்கமளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாளை 11 மணியளவில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மட்டுமின்றி அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசப்போவதாக, புதிய தலைமுறையிடம் அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் திட்டத்தை கையிலெடுத்த பாஜக கூட்டணி
பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம், ஆந்திராவுக்கு சென்று தற்போது பிஹார் தேர்தல்களத்தில் வாக்குறுதியாக மாறியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், நிதிஷ் குமார் அரசு மீண்டும் அமைந்தால் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜகூ தேர்தல் அறிக்கை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அல்ல, செயல்பாடு குறித்த அறிக்கையையே வெளியிட வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிஹார் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், பிஹாரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருபவர்கள் தங்கள் அரசின் செய்லபாடு குறித்த அறிக்கையையே வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிய வாக்குறுதிகளை வழங்குவது அர்த்தமற்றது, என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
ஃபோர்டு மீள்வரவு நல்வரவாகட்டும்: முதல்வர்
ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டிற்குமீண்டும் வருவது குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட, நம்பிக்கைக்குரிய உறவினை புதுப்பிக்கும் வகையில், இந்த ஆற்றல்மிகு வருகை அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாக சூழல் வலுவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய, இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமான சென்னையைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டில் தொழில் துறை வலிமைக்கும், உலக உற்பத்தி சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்திற்கும் மற்றொரு சான்று என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஃபோட்டின் மீள்வரவு நல்வரவாகட்டும் எனவும், தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியுள்ளார்.
"திமுகவின் அட்டூழியத்தை பிரதமர் கூறியிருக்கிறார்" - அண்ணாமலை
திமுக செய்த அட்டூழியத்தை பிரதமர் மோடி எடுத்துக் கூறியிருப்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் சொல்லாததை சொன்னதாக முதல்வர் ஸ்டாலின் பொய் கூறலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டை பாஜகவினர் அவமானப்படுத்துகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி
இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்பதற்காக இந்தி மொழி பேசுவோருக்கு தாங்கள் விரோதிகள் அல்ல என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வந்தால் புரியாத மொழியில் திருக்குறள் சொல்லி, பிரதமர் மோடி ஏமாற்றுவதாக விமர்சித்துள்ளார்.
நெல் சரக்குந்து ஒப்பந்தத்தில் ரூ.165 கோடி முறைகேடு? - அன்புமணி கேள்வி
நெல் சரக்குந்து ஒப்பந்தத்தில் 165 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை கிடங்குகள் மற்றும் அரவைக்கு சரக்குந்துகள் மூலம் கொண்டு செல்ல கடந்த நிதி ஆண்டில் 3ஆயிரத்து 200 சரக்குந்துகள் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஒவ்வொரு சரக்குந்துக்கும் வாடகையை விட 321 சதவிகிதம் கூடுதல் தொகை 3 நிறுவனங்களுக்கு தரப்பட்டதன் மூலம் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வங்கி, நிதி நிறுவனங்களுக்கு செபி புதிய கட்டுப்பாடு
இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, பேங்க் எக்ஸ் , பேங்க் நிஃப்டி , ஃபின்நிஃப்டி ஆகிய முக்கியநிதிச் சந்தை குறியீடுகளில் உள்ள ஆபத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. குறியீட்டில் உள்ள தனிப்பட்ட பங்கின் அதிகபட்ச எடை 20 சதவீதத்தைத் தாண்டக்கூடாது. முதல் மூன்று பங்குகளின் கூட்டு எடை 45 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. குறியீட்டில் குறைந்தபட்சம் 14 பங்குகள் இடம்பெற வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
பெரிய நிறுவனம் மட்டுமே ஒட்டுமொத்த குறியீட்டைத் தனியாக ஆதிக்கம் செலுத்தும் அபாயத்தைக் குறைத்து, குறியீடுகளுக்கு அதிக சமநிலை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொடுக்கும் நோக்கில் இந்த விதி கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை பேங்க் நிஃப்டி அடுத்த மார்ச்சுக்குள்ளும், மற்ற குறியீடுகள் இவ்வாண்டு டிசம்பருக்குள்ளும் செய்து முடிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை
காபூலின் பொறுமையை பலவீனமாக நினைக்காதீர்கள்; மீண்டும் சோதித்தால் கடுமையான பதில் வரும் என பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுத்தீன் ஹக்கானி எச்சரித்தார். துருக்கி, கத்தார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிடம் நீண்ட தூர ஏவுகணைகள் இல்லாமல் இருந்தாலும், உறுதியும் தைரியமும் தான் தங்களது ஆயுதம் என சிராஜுத்தீன் ஹக்கானி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தன் நிலப்பரப்பில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியானநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது அசிஃப் கூறியிருந்தார்.
அமைச்சரானார் முகமது அசாருதீன்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான முகமது அசாருதீன், ஹைதராபாத்தில் உள்ள ராஜ் பவனில் தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். இந்த நியமனம் தெலங்கானா அரசியலில் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதியாக அசாருதீன் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், 18 அமைச்சர்கள் இருக்கக்கூடிய அமைச்சரவையில் தற்போது 16 அமைச்சர்கள் உள்ளனர். அசாருதீன், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களை கவரும் காங்கிரஸின் அரசியல் நெருக்கடியாக இது பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் பிஆர்எஸ் எதிர்க்கட்சிகள், இந்த நியமனத்தை வாக்காளர்களை கவரும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளன.
ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழா
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் தமிழக அரசு சார்பில், ராஜராஜ சோழனின் ஆயிரத்து 40ஆவது சதய விழா கொண்டாடப்படுகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக, தஞ்சை அரண்மனையில் இருந்து, குதிரை பூட்டப்பட்ட தங்கரதத்துடன் ஊர்வலம் நடந்தது.
மாமன்னர் நகர்வலம் சென்ற பாதை வழியே பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அரண்மனையில் தொடங்கிய ஊர்வலம் பல்வேறு தெருக்கள் வழியே சென்று தஞ்சை பெரியகோயிலை அடைந்தது.
சதுப்பு நில சர்ச்சை: கட்டுமான பணிக்கு தடை
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில், எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டடம் கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் மனுதாரர் மற்றும் தமிழக அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், இந்தவிவரங்கள் தெரியாமல் எப்படி சிஎம்டிஏ கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியதுஎனவும் வினவினர். சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் முடிவடையும் முன், கட்டுமானங்களுக்கும் - வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி அளித்து வந்தால், ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்துவிடும் எனவும் குறிப்பிட்டனர்.
வழக்கு தொடர்பாக வரும் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணையிட்ட நீதிபதிகள், அதுவரை குறிப்பிட்ட பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கட்டுமான நிறுவனத்திற்கு ஆணையிட்டனர்
2வது டி20 - இந்தியா தோல்வி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 126 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
இறுதியில் 13.2 ஓவர்களிலேயே 126 ரன்கள் என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மீதமுள்ள 3 போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை வெல்ல முடியும். ஏற்கனவே ஒரு நாள் போட்டியை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.


