Ai war jet, tanzania protest
Ai war jet, tanzania protestpt web

PT World Digest | உலகின் முதல் ஏ.ஐ. போர் விமானம் முதல் தன்சானியா வன்முறை வரை !

இன்றைய PT World Digest பகுதியில் உலகின் முதல் ஏ.ஐ.போர் விமானம் முதல் தன்சானியா வன்முறை வரை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

1. சூடானில் 3 நாட்களில் 1,500 பேரை கொன்றுகுவித்த ஆர்.எஸ்.எஃப்...

ஆர்.எஸ். எஃப். என்ற துணை ராணுவப்படை
ஆர்.எஸ். எஃப். என்ற துணை ராணுவப்படைThe Sudan Times

சூடானில், ராணுவத்தின் கடைசி கோட்டையை கைப்பற்றிய ஆர்.எஸ். எஃப். என்ற துணை ராணுவப்படை, கடந்த 3 நாட்களில் ஆயிரத்து 500 பேரைக் கொன்று குவித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சிக்கும் ஆர்.எஸ்.எஃப். எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவுகிறது. 2023ஆம் ஆண்டு முதல் நிலவும் சண்டையில், அரேபியர் அல்லாதவர்கள் அதிகம் வசிக்கும் டார்ஃபூர் மாகாணத்தில் உள்ள, ராணுவத்தின் கோட்டையான அல் ஃபஷார் நகரை, 17 மாத முற்றுகைக்குப் பிறகு, துணை ராணுவம் கைப்பற்றியது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 நாட்களில் ஆயிரத்து 500 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக, உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது. மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் மட்டும், 640 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளை கண்டித்துள்ள உலக நாடுகள், போரை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளன. ஐநா சபையும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

2. அமெரிக்காவின் வரலாறு காணாத மழை !

 ப்ரூக்ளின் (BROOKLYN)
ப்ரூக்ளின் (BROOKLYN) yahoo

அமெரிக்காவின் ப்ரூக்ளின் (BROOKLYN) பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தேங்கிய மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மக்கள் நீரில் நடந்து செல்வதும் போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. புரூக்ளினில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பெய்திருப்பதாக நியூயார்க் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் !

இந்தியா  - அமெரிக்கா
இந்தியா - அமெரிக்காமுகநூல்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய ராணுவக் கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற சந்திப்பில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸ்ஸெத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் ராணுவ ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் ராணுவ உறவில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட தயாரிப்பு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-சீனா பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

4. தன்சானியாவில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறை !

தன்சானியா வன்முறை
தன்சானியா வன்முறை

தன்சானியாவில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறை கிளம்பியது. உயிரிழப்புகளும், அதற்கிடையில் நிலவிய எரிவாயு போன்ற பிரச்சினைகள் அனைத்தும் நாட்டின் அரசியலுக்கு புதிய சவாலாக மாறியுள்ளன. வியாழக்கிழமை நடைபெற்ற அடுத்தடுத்த போராட்டங்களில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவலின்படி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். தான்சானியா அரசு உடனடி நடவடிக்கையாக, இணையதள சேவைகளை நிறுத்தி, படையினரை வீதிகளில் நிறுத்தி பாதுகாப்பு ஏற்படுத்தியது. திடீரென உண்டான இந்த பரபரப்பு, மக்கள் உயிரைப் பாதுகாக்க போராடும் நிலையை உருவாக்கியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

5. ஆப்கானிஸ்தானிடம் நீண்ட தூர ஏவுகணைகள் இல்லை. ஆனால், உறுதியும் தைரியமும் தான் எங்களது ஆயுதம் !

சிராஜுத்தீன் ஹக்கானி
சிராஜுத்தீன் ஹக்கானிinstagram

காபூலின் பொறுமையை பலவீனமாக நினைக்காதீர்கள்; மீண்டும் சோதித்தால் கடுமையான பதில் வரும் என பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுத்தீன் ஹக்கானி எச்சரித்துள்ளார். துருக்கி, கத்தார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இருநாடுகளும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானிடம் நீண்ட தூர ஏவுகணைகள் இல்லாமல் இருந்தாலும், உறுதியும், தைரியமும் தான் தங்களது ஆயுதம் என சிராஜுத்தீன் ஹக்கானி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தன் நிலப்பரப்பில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் கூறியிருக்கிறார்.

6. காசாவின் மீது மீண்டும் வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் !

இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதல்எக்ஸ் தளம்

இஸ்ரேல் மீண்டும் காசாவை குறிவைத்து விமானத் தாக்குதலை நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியான பெயித் லஹியாவில் ஆயுத களஞ்சியம் ஒன்று குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அந்த இடத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கான தயாரிப்புகள் நடந்தன எனவும், அதை தடுக்கும் நோக்கில் துல்லியமான வான் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் இஸ்ரேல் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, ராணுவம் புதிய பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், 46 குழந்தைகள், 24 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை, இரு தரப்பும் சமாதானத்தை மீண்டும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தின. ஆனால், காசாவில் விழும் ஒவ்வொரு குண்டும் அந்த வார்த்தைகளைக் கடந்து மக்கள் நம்பிக்கையை சிதைத்துக்கொண்டே செல்கிறது.

7. உலகின் முதல் ஏ.ஐ.போர் விமானம்.,

ஏ.ஐ.போர் விமானம்
ஏ.ஐ.போர் விமானம்SHIELD AI

உலகின் முதல் ஏ.ஐ.போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் SHIELD AI என்ற நிறுவனம், உலகிலேயே முதல்முறையாக ஏ.ஐ.மூலம் இயங்கும் போர் விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓடுபாதை மற்றும் விமானி தேவையில்லாத வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சமாகும். X-BAT என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், தானே முடிவெடுத்து இலக்கை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. 20 ஆண்டு முயற்சியில் எகிப்து அருங்காட்சியகம் !

எகிப்து அருங்காட்சியகம்
எகிப்து அருங்காட்சியகம்Tamer A Soliman

வரலாற்றுச்செழுமை மிக்க எகிப்து தனது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அருங்காட்சியகத்தை திறக்க உள்ளது. 20 ஆண்டு முயற்சியில் இந்த அருங்காட்சியகம் கெய்ரோ அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து கலாசாரத்தை ஒட்டுமொத்தமாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் இக்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியாகமாக மாற உள்ளது. எகிப்து அரசுக்கு சுற்றுலா பயணிகள் மூலம் பெரும் வருவாயை அள்ளிக்கொடுக்கும் எனக் கருதப்படுகிறது. சனிக்கிழமை நடக்க உள்ள திறப்பு விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com