Baahubali The Epic-ல் என்னென்ன இருக்கிறது? | Rajamouli | Prabhas
`பாகுபலி' வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, `பாகுபலி'யின் இரு பாகங்களையும் இணைத்து `Baahubali: The Epic' படத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். `மகதீரா', `நான் ஈ' படங்கள் இந்தியா முழுமைக்கும் ராஜமௌலியை அறிமுகப்படுத்தினால், `பாகுபலி'யும், `RRR' உலக அரங்கிற்கு ராஜமௌலியை சேர்த்தது. ராஜமௌலி திரைப்பயணத்தில் `பாகுபலி' மிக முக்கியமான படம். அவருக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் முக்கியமானது. இரண்டு பாகங்களாக படம் எடுத்து கதை சொன்னாலும், மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என நிரூபித்தது. மேலும் இந்திய படங்களுக்கான உலகளாவிய சந்தையை திறந்தும் வைத்தது. ஒரு பக்கம் வணீகமாக இப்படியான நிகழ்வுகள் நடந்தன. இன்னொரு பக்கம் ஒரு படமாக இப்போதும் ரசிகர்களை கட்டிப்போடும் படமாக நிற்கிறது. பாகுபலி பேசும் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 3 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பாகுபலியை கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறார்கள் பார்வையாளர்கள். ஒரு சினிமாவாக பாகுபலியின் எழுத்தில் இருக்கும் மேஜிக் என்ன?
பாகுபலியின் முதல் பலம் அதன் பிரம்மாண்டமான காட்சிகளோ, பெரிய நடிகர் பட்டாளமோ மட்டுமில்லை. அது மிக எளிமையான கதை என்பது. ஒரு ஊர்ல ஒரு ராஜா என பாட்டி சொல்லும் கதையில் இருந்து லயன் கிங்ஸ் வரை பல முறை, பல வடிவங்களில் பார்த்த அதே கதை தான். ஆனாலும் எப்படி புதிது போல் தெரிகிறது? அதில் நடக்கு அதிரடியை லாஜிக் கேட்காமல் ஏற்றுக் கொள்ள முடிகிறது? எமோஷனல் பீட்ஸை மனதில் வைத்து அந்தக் கதையை எழுதி இருப்பது. இரண்டு பாகங்களாக பார்த்த பாகுபலியில் மைய கதையில் இருந்து விலகி நிறைய காட்சிகள் இருக்கும். அதில் பெரும்பாலானவை நீக்கப்பட்டு இந்த பாகுபலியை உருவாக்கி இருக்கிறார்கள். உதாரணமாக அவந்திகா (தமன்னா) சார்ந்த காதல் காட்சிகள், சுதீப் வரும் காட்சி மூன்று பாடல்கள் உள்ளிட்ட பலதும் நீக்கப்பட்டிருக்கிறது. அந்த பனி பிரதேச ஸ்கெட்டிங் மற்றும் பன்றி வேட்டை காட்சிகளைக் கூட தூக்கியிருக்கலாம். ஆனாலும் படம் படு எங்கேஜிங் ஆகதான் இருக்கிறது.
பாகுபலி இவ்வளவு கொண்டாடப்பட இரண்டு விஷயங்களை காரணமாக சொல்லலாம். ஒன்று முன்பே சொன்னது போல எமோஷனல் பீட்ஸ். இன்னொன்று ஒரு செயின் ரியாக்ஷன் போல ஒன்றை தொட்டு இன்னொன்று என நகரும் கதை. எமோஷனல் காட்சிக்கு பல உதாரணங்கள் சொல்லலாம் தான். ஆனால் அவை எல்லாம் திரையில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக புரிய முடியும். ஆனாலும் ஒரு காட்சியை மட்டும் சொல்லலாம். இப்படியான பிரம்மாண்ட வடிவில் கதைகள் சொல்லும் போது சின்ன சின்ன எமோஷனல் தருணங்களை வடிவமைப்பது படம் எளிமையாக பார்வையாளர்களுக்கு நெருக்கமாகும். பாகுபலி கொலை செய்யப்பட்ட பின்பு, கைக் குழந்தையை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு, குழந்தையிடம் "மகேந்திரா நீ என்னை மீட்க திரும்ப வர வேண்டும், வருவாயா?" என்பார் தேவசேனா. குவித்து வைத்திருக்கும் அவரின் கையில் சத்தியம் செய்வதைப் போல குழந்தையின் பிஞ்சு கை விழும். லாஜிக்காக இது கேள்விக்குள்ளாகும். ஆனால் எமோஷனாக இதுவே கனெக்ட் ஆகும். இந்த எமோஷனல் எழுத்து ராஜமௌலி படத்தில் எப்போதும் இருக்கும்.
இப்போது அந்த செயின் ரியாக்ஷன் பற்றி பார்க்கலாம். இந்தப் படத்தின் கதை ஒரு நூல் பிடித்தது போல, இதனால் அது நடந்தது, அதன் விளைவாக இது என நகரும். படம் முடியும் போது பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளுக்கு முடிவும் இருக்கும்.
தண்ணீரில் குழந்தையை ( ஷிவுடு/மகேந்திர பாகுபலி) பிடித்து வரும் சிவகாமியின் கை மகிஷ்மதியை காட்டும்படி நீர்வீழ்ச்சியை சுட்டும், இதை தெரிந்து கொண்ட பின்பு நீர் மலைக்கு மேலே என்ன இருக்கிறது என அறிந்து கொள்ள ஆவரமாக இருக்கும் ஷிவுடு மலையில் ஏற முற்படுவர். ஆனால் அவரால் முடியாது. ஷிவுடுவின் இந்த முயற்சியை பார்த்த அவரது வளர்ப்பு அம்மா சங்கா (ரோகினி) சாமியாரிடம் வழி கேட்பார். சிவ லிங்கத்திற்கு 1000 குடம் தண்ணீர் ஊற்றினால் ஷிவுடுவுக்கு நல்ல வழியை சிவன் காட்டுவார் என சொல்வார் சாமியார். அதன்படி சிரமப்பட்டு தண்ணீர் ஊற்றுவார் அம்மா. அம்மா கஷ்டப்படக் கூடாது என சிவ லிங்கத்தை நீர்வீழ்ச்சிக்கு நடுவே வைப்பார். சாமியார் சொன்ன படி, சிவுடுவுக்கான வழி அவந்திகாவின் முகமூடி வழியாக கிடைக்கும். அவந்திகாவை தேடி செல்லும் சிவுடு கடைசியாக தான் யார் என கண்டடைவார். ஒரு தண்ணீர் வழிந்து ஓடுவதை போல் மிக சீராக நகரும் படம். பார்வையாளர்களுக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாத இந்த எளிமை பாகுபலியின் பெரிய பலம்.
துவக்கம், முடிவு என்ற விதத்திலும் சில சுவாரஸ்யங்களை படத்தில் இணைத்திருப்பார் ராஜமௌலி. அமரேந்திர பாகுபலி மாறு வேடத்தில் அரண்மனைக்கு வெளியே செல்லும் போது தேவசேனாவை பார்ப்பார், அங்கிருந்து படத்தின் பிரச்சனை துவங்கும், அதுவே மகேந்திர பாகுபலி மாறுவேடத்தில் தேவசேனாவை மீட்க அரண்மனைக்குள் வருவார் அங்கிருந்து பிரச்சனை தீர்வை நோக்கி நகரும்.
அரசனாக முடி சூட்டும் முன்பு, நகர்வலம் செல்லும் பாகுபலி, நீர் நிலையில் பிணங்கள் இருப்பதை பார்ப்பார். பிடாரிகள் குழுவின் வேலையே இது. ஊர்களில் மக்களிடம் கொள்ளையடித்துவிட்டு, அவர்களை நீரில் முக்கி கொலை செய்வதுதான் அவர்களின் பாணி என்பார் கட்டப்பா. குந்தல தேசத்தில் கொள்ளையடிக்க வரும் பிடாரிகள் குழுவை, அணையில் இருந்த நீரை திறந்து விட்டு பிடாரிகள் பாணியில் நீரில் மூழ்கடித்து கொள்வார் பாகுபலி.
தேவசேனாவின் வளைகாப்பு சமயத்தில் உன்னுடைய குழந்தையை என் கைகளில் அல்ல, தலையில் தூக்கி கொண்டாடுவேன் என்பார் கட்டப்பா. அதே போல் குழந்தையாக இருக்கும் போதும், வளர்ந்த பின்னும் முதன்முறை மகேந்திர பாகுபலியினை பார்க்கும் கட்டப்பா, மகேந்திர பாகுபலியின் காலை தன் தலையில் வைப்பார்.
இவ்வளவு ஏன் இந்தக் கதை ஒரு நீர்வீழ்ச்சியில் இருந்தே துவங்கும், கதை முடிவதும் அதே நீர்வீழ்ச்சியில் தான். மகேந்திர பாகுபலி மிதந்து வந்த அதே நீரில், பல்வாள் தேவன் சிலையின் தலை விழுதோடு கதை முடியும்.
இப்படி ஒரு சிறப்பான திரை அனுபவத்தை வழங்குகிறது `பாகுபலி'. கண்டிப்பாக இதில் குறைகளும் பல உண்டு, ஆனால் படம் பொழுதுபோக்கை வழங்குகிறது என்பதையும் நாம் மறுக்க முடியாத ஒன்று. உங்களுக்கும் பாகுபலியின் திரை அனுபவம் மீண்டும் வேண்டும் என்றால், தவறவிடாமல் பாருங்கள்.


