’தங்கத்த தகரம்ணு நினைச்சிட்டாங்க..’ ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஏன் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவர்..?
ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான வீராங்கனை. 2025 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் காட்டிய ஆட்டம், அவரது திறமையை வெளிப்படுத்தியது. அழுத்தமான நேரங்களில் பல்வேறு ஷாட்களை விளையாடும் திறன் கொண்ட ஜெமிமா, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுகிறார். அவரின் மேட்ச் வின்னிங் திறமைகள் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவை.
இந்திய மகளிர் கிரிக்கெட்டானது மிதாலி ராஜ், அஞ்சும் சோப்ரா, நீது டேவிட், ஜுலன் கோஸ்வாமி, ஸ்மிரிதி மந்தனா போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளை கொடுத்துள்ளது. தனிப்பட்ட சாதனைகளால் சிக்ரம் தொட்ட இந்திய வீராங்கனைகளால் ஒருமுறை கூட உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியவில்லை. ஒவ்வொருமுறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
1978 முதல் உலகக்கோப்பையில் பங்கேற்றுவரும் இந்திய மகளிர் அணி, இதுவரை 10 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளது. அதில் 2005 மற்றும் 2017 உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றாலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது..
அதிலும் 2017 உலகக்கோப்பை பைனலில் 66 பந்துகளில் 63 ரன்கள் அடிக்க வேண்டும், கையில் 7 விக்கெட்டுகள் உள்ளது என்ற நிலையிலிருந்து இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது.. இந்த நிலைமையில் இருந்து எப்படி ஒரு அணியால் கோப்பையை கோட்டைவிட முடியும் என்று கேட்டால், இந்திய மகளிர் அணி அழுத்தமான போட்டிகளில் அப்படியொரு மோசமான ஆட்டத்தை தான் இதுவரை வெளிப்படுத்தியுள்ளது..
இந்திய அணியில் ஃபினிசிங் வீரர்கள் இல்லாததும், டாப் ஆர்டர் வீரர்கள் இறுதிவரை பொறுப்பை எடுத்து விளையாடாததுமே இப்படியான படுமோசமான தோல்விகளுக்கு பெரிய காரணங்களாக இருந்துவருகின்றன..
ஆனால் 2025 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, இந்த குறைகளையெல்லாம் கலைந்து மேட்ச் வின்னிங் வீரராக உருவெடுத்துள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.. மற்ற வீரர்கள் போல இல்லாமல் அழுத்தமான நேரங்களில், ரிவர்ஷ் ஷாட், ஸ்வீப் ஷாட், ஸ்விட்ச் ஹிட் என அனைத்துவிதமான ஷாட்களையும் விளையாடும் திறன்கொண்ட ஜெமிமா, அழுத்தமான போட்டிகளில் எப்படி பேட்டிங் செய்யவேண்டும் என்ற கோணத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு அடி முன்னே இருக்கிறார்..
ஆனால் இப்படியான மேட்ச் வின்னிங் வீரருக்கு இந்திய அணியில் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடவில்லை..
ஒவ்வொருநாளும் அழுத ஜெமிமா..
2018-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான மும்பையை சேர்ந்த 18 வயது இளம் வீராங்கனைக்கு, இதுதான் முதல் உலகக்கோப்பை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..?? 7 வருடங்களுக்கு பிறகு ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற மேட்ச் வின்னிங் வீரருக்கு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்கிடைத்துள்ளது.. கடந்த 2022 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டது.. அதில் உடைந்து போன ஜெமிமா ஒவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு அழுததாகவும், தான் நன்றாகவே இருக்கிறேன் என சொந்த வீட்டில் பெற்ற தாய்-தந்தையிடம் கூட நடித்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்..
ஆனால் அங்கேயே முடங்கிப்போகாத ஜெமிமா, அதுவரை டாப் 3 இடங்களில் மட்டுமே விளையாடியதை மாற்றி, எந்த இடத்தில் அணியில் இடம்கிடைக்கிறதோ அங்கு சிறப்பாக விளையாடும் திறனை வளர்த்துக்கொண்டார். 2024-க்கு முன்புவரை டாப் 3 இடங்களில் மட்டுமே விளையாடிய அவர், 2024-க்கு பிறகு 5, 6 மற்றும் 7வது வீரராக கூட விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்..
ஜெமிமா எந்தளவு தன்னை தயார்படுத்தி கொண்டார் என்றால், 2024 வரை 40 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காத அவர், 2024-க்கு பிறகு 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடித்து 500 ரன்களை கடந்துள்ளார்.. மிடில் ஓவரில் ஸ்மிரிதி மந்தனாவின் ஸ்டிரைக்ரேட்டை விட, ஜெமிமாவின் ஸ்டிரைக் ரேட் அபாரமாக உள்ளது.. அதற்கு காரணம் அவரின் டாட் பந்துகள் விளையாடும் சதவீதம் மிகவும் குறைவாக இருந்துவருகிறது.. விராட் கோலியை போல விக்கெட்டுகளில் ரன்கள் எடுப்பதில் சுறுசுறுப்பாக இருந்துவரும் ஜெமிமா ஒரு மேட்ச் வின்னிங் வீரராக தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளார்..
ஜெமிமாவை டிராப் செய்த இந்தியஅணி..
எல்லாம் சரியாக நடந்துவிட்டது, இனி இந்தியாவிற்காக விளையாடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த ஜெமிமாவிற்கு, 2025 உலகக்கோப்பை தொடர் அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை.. 4 லீக் போட்டிகளில் விளையாடி 2 முறை டக் அடித்த ஜெமிமா, மொத்தமாக 65 ரன்களை மட்டுமே அடித்தார்.. இதற்கு அவர் நம்பர் 3 இடத்தில் விளையாடாமல் நம்பர் 5 இடத்தில் விளையாடியது தான் காரணம் என்றும், அவரை போன்ற ஒரு வீரர் இந்திய அணியின் நம்பர் 3 இடத்தில்தான் விளையாடவேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்..
ஆனால் அணியின் பவுலிங் ஆப்சனை அதிகரிக்க நினைத்த இந்திய அணி மற்றும் கேப்டன், இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஜெமிமாவை பெஞ்சில் அமரவைத்து ஹர்லீன் தியோல் மீது நம்பிக்கை வைத்தனர்.. அது ஜெமிமாவிற்கு மீண்டும் பேரிடியாக விழுந்தது..
பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இடம்பிடித்த ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு கடைசிவரை நம்பர் 3 இடத்தில் விளையாட போகிறார் என்ற தகவல் சொல்லப்படவில்லை.. நவி மும்பையில் மண்ணின் மகளை பயன்படுத்த நினைத்த இந்திய அணி, நம்பர் 3 இடத்தில் ஜெமிமாவை இறக்கும் சரியான முடிவை சரியான நேரத்தில் கையில் எடுத்தது.. அரையிறுதிப்போட்டியில் களத்தில் இறங்கியிதிலிருந்தே ரிவர்ஷ் ஷாட், ஸ்வீப் ஷாட், ஸ்விட்ச் ஹிட் என பம்பரமாக சுழன்றடித்த ஜெமிமா, சொந்த மண்ணில் தான் எப்படியான வீரர் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டினார்..
7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய ஜெமிமா, இறுதிவரை தன்னுடைய அழுத்தத்தை வெளிக்காட்டாமல் போராடி இந்திய அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ்செய்த இந்திய அணியின் சாதனை புத்தகத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்..
ஏன் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவர்..??
அவர் உங்களுக்கு களத்தில் பறவையை போல பறந்து கேட்ச்களை எடுக்கிறார்.. நம்பர் 3-ல் தொடங்கி நம்பர் 7வரை எங்கு பேட்டிங் செய்ய சொன்னாலும் செய்துமுடிக்கிறார்.. அழுத்தமான நேரங்களில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடி, இந்திய அணியை வெற்றியின் உச்சத்தில் கொண்டுசென்று அமரவைக்கிறார்.. உங்களுக்கு தேவையென்றால் பந்துவீசுவதென்றாலும் அவரால் அதைச்செய்ய முடியும்.. ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்திய அணிக்காக அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறார்.. அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய அணியின் கைகளில் உள்ளது..
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இதே புத்துணர்ச்சியுடன் தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வென்று முதல் உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..


