ட்ரம்பின் வரி விதிப்பால், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் ஐ.நா. மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். அந்த மாநாட்டில் ட்ரம்பும் பங்கேற்கவுள்ளார். அப்போது, டிரம்பை சந்தித்து பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் இருநாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பும் தனி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் நியூயார்க் நகரத்தில் மோடி-டிரம்ப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. இந்திய பொருட்கள் மீது டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். எப்படித் தாக்குதல் நடந்தது? தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்? பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? என நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், ஆபரேசன் சிந்தூரை விளம்பர வெறிக்காக பயன்படுத்தி வரும் மத்திய அரசு, ஒரு படி கீழிறங்கி மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டுவந்து அமர்த்தியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனிடம், சிபிசிஐடி காவல் துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். சுர்ஜித், சரவணன் இருவரையும் சிபிசிஐடி அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர். அவர்களை, நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். செவ்வாயன்று கவின் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு, சுர்ஜித்தை நேற்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், கொலை எப்படி நடந்தது என்று, நடித்துக் காட்டச் செய்து, அதை வீடியோ பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கவின் கொலை வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலையுடன் சிபிசிஐடி காவல் துறையினர் கஸ்டடி விசாரணை நிறைவடைய உள்ளது. இதன் பிறகு, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர பிரசாத் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சல்மரில் உள்ள டி.ஆர்.டி.ஓ (DRDO) விருந்தினர் விடுதியில் ஒப்பந்த மேலாளராகப் பணிபுரிந்துவந்த மகேந்திர பிரசாத், விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் டி. ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த முக்கியத் தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு சமூக வலைதளங்கள் மூலமாகப் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் - 1923இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில உளவுத்துறையால் மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட இந்தியா பறிக்க அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார் . பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 1960ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. பாகிஸ்தானுக்கு வர வேண்டிய நீரைத் தடுப்பது இந்தியாவின் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான தண்ணீரை தடுக்க முயன்றால் இந்தியாவுக்கு மீண்டும் தக்க பாடம் புகட்டப்படும் என்று ஷெரீஃப் எச்சரித்துள்ளார்
வியட்நாமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விரிவாக வாசிக்க.. 990 ஹெக்டேர் விவசாய நிலத்தில் கோல்ஃப் கிளப்.. ட்ரம்ப் குடும்பத்தினரால் விவசாயிகள் பாதிப்பு!
பத்திரிகையாளர்களின் செய்திக் கட்டுரைகள் அல்லது காணொளிகளை தேசதுரோகம் என்று கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆபரஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த கட்டுரைக்காக ’தி வயர்’ இதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 152இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சட்டப் பிரிவு முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்த தேசதுரோக சட்டத்தின் மாற்று வடிவமாக கருதப்படுகிறது. தேசதுரோக சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திருந்ததாகவும். புதிய சட்டப் பிரிவும் நீக்கப்பட வேண்டும் என்றும் சித்தார்த் வரதராஜன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் எந்த ஒரு சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றபோதிலும், அந்த சட்டத்தை செல்லாது என்று கூற முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதே நேரம் ஊடகவியலாளர்கள் வெறும் கட்டுரை எழுதுவதற்கோ அல்லது செய்திகளை வெளியிடுவதற்கோ வழக்குகளிலும் கைதுகளிலும் சிக்க வைக்கப்பட வேண்டுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சித்தார்த் வரதராஜன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் விலை இறங்கி 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் 126 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். பதிலுக்கு சீனாவும் நிறுத்தி வைத்துள்ளது.
விரிவாக வாசிக்க : சீனாவுக்கான வரி.. மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைத்த அமெரிக்கா.. இதுதான் காரணமா?
தொழில்நுட்ப உலகின் முன்னணி ஜாம்பவான்களான எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் இடையேயான மோதல், மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆப்பிளின் App Store-ல் OpenAI-க்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மஸ்க், இதில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், மஸ்க், தனது சொந்த நலனுக்காகவும், தனது போட்டியாளர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்காகவும் X தளத்தைப் பயன்படுத்துவதாக OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் சாடியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறைந்த தொகை சமர்ப்பித்த 2 நிறுவனங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 15.6 அங்குல திரை அளவுகொண்ட மடிக்கணினியை டெல் நிறுவனம் வரிகள் இன்றி 40 ஆயிரத்து 828 ரூபாய்க்கு தருவதாக கூறியுள்ளது. இதேபோல், 14 அங்குல திரை அளவு கொண்ட மடிக்கணினியை ஏசர் நிறுவனம் வரிகள் இன்றி 23 ஆயிரத்து 385 ரூபாய்க்கு தருவதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம், கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த செயலியின் விளம்பர தூதராக இருந்த சுரேஷ் ரெய்னாவுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவர் இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி என்.சி.ஆர். பகுதியில் இருந்து அனைத்து தெரு நாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இரக்கமற்றது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் மனிதாபிமான, அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் பாதுகாப்பும், நாய்களின் நலனும் முக்கியம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கட்கிரோலி மாவட்டத்தில் உள்ள யெச்சலி கிராமம், நக்ஸல்களுக்கு முழுமையாகத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் கடிதம், ஆகஸ்ட் 7-ஆம் தேதி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு காலத்தில் நக்ஸல்களின் கோட்டையாகக் கருதப்பட்ட யெச்சலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள், இப்போது நக்ஸல்களை கிராமத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியேற்றுள்ளன. இதேபோன்று, இந்த ஆண்டு தொடக்கத்தில் பாம்பிராகர் தாலுகாவில் உள்ள பல கிராமங்களும் நக்ஸல் இயக்கத்தினரை தங்கள் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்தன.
கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை 34.5 பில்லியன் டாலருக்கு வாங்க, Perplexity நிறுவனம் முன்வந்துள்ளது. மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆன இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு 18 பில்லியன் டாலர். ஆனாலும், இந்த மாபெரும் தொகைக்கான நிதி உதவியை பல முதலீட்டு நிறுவனங்கள் வழங்க வருவதாக பெர்ப்லெக்சிட்டி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட குரோம் பிரவுசரை, ஏ.ஐ. தேடல் சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஒரு முக்கியமான கருவியாக பெர்ப்லெக்சிட்டி கருதுகிறது.
அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அயர்லாந்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பிற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது என பாராட்டிய அவர், இந்திய வம்சாவளியினர் மீதான தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் தாக்குதல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியர்கள் அச்சமின்றி வாழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் மைக்கேல் ஹிக்கின்ஸ் உறுதியளித்தார்.
கர்நாடக மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா முறைகேடு மூலம் வெற்றிபெற்றதாக பாஜக எம்.பி. லஹர் சிங் சரோயா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சித்தராமையா பாதாமியில் வெற்றிபெற 3,000 வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹிம் கூறும் காணொளியை சரோயா சுட்டிக்காட்டியுள்ளார். வாக்கு திருட்டு நடைபெறுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் குற்றம்சாட்டிவரும் நிலையில் பாஜக எம்பி காங்கிரஸ் முதல்வர் மீது அத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, எட்டு வாரங்களுக்குள் காப்பகங்களில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக நடிகர் ஜான் ஆபிரகாம் இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த உத்தரவு விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல, ஜான்வி கபூர் மற்றும் வருண் தவான் உட்பட பல பிரபலங்களும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தங்களது சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதம் என கண்டறியப்பட்டால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடைமுறை ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
விரிவாகப் படிக்க.. பீகார் | வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்.. தேர்தல் ஆணையத்தை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!
பாகிஸ்தானில் இருந்து வெடிமருந்துகளோடு பறந்துவரும் ட்ரோன்களை கண்டறிய எல்லை பாதுகாப்புப் படையினர் நாய்களை பயிற்றுவித்துள்ளனர். பெரும்பாலும் மனிதக் காதுகளுக்கு புலப்படாத ட்ரோன்கள் பறக்கும் ஒலியானது நாய்களின் காதுகளுக்கு தெளிவாகக் கேட்கும் என்பதால் பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. லேப்ராடர் வகை நாய்களே பெரும்பாலும் இப்பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 4 நாய்கள் ஏற்கெனவே பணியைத் தொடங்கி விட்டன. மேலும் 12 நாய்களுக்கு குவாலியரின், தேகான்புரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 60 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது, அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.