சீனாவுக்கான வரி.. மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைத்த அமெரிக்கா.. இதுதான் காரணமா?
அமெரிக்கா,சீனா இடையே நடைபெற்ற வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். இருப்பினும், அவ்வரிவிதிப்பைத் தொடங்குவதற்கு முன்பே வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்தார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்திருந்தது.
மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது. இந்த வரி விகித உயர்வால், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதனால், அவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமாய் நடைபெற்றது. இந்த நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிக்க, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவாா்த்தை இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துக்கொண்ட வரியை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வழிவகுத்தது. அத்துடன் பெரும்பாலான பொருள்கள் மீதான வரியை 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
முடிவுக்கு வந்த வர்த்தக ஒப்பந்தம்.. மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு
இதன்படி சீன பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோல அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதித்த வரி 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் முக்கியக் கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்குவதாக சீனா உறுதி அளித்தது. எனினும் இந்தத் தற்காலிக வரிக் குறைப்பு உடன்பாட்டை பின்பற்றவில்லை என்று இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான புதிய வா்த்தக ஏற்பாடு தொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி, தற்போது சீனாவுடனான அமெரிக்காவின் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்கள் மீது அமெரிக்கா 30 சதவீத வரியும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது சீனா 10 சதவீத வரியும் விதிக்கும் என இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். முன்னதாக, மே 11 அன்று, இரு தரப்பினரும் 90 நாள் வரி இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். அது, நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த நீட்டிப்பு, நவம்பர் 10 வரை வரை தொடரும் எனத் தெரிகிறது. சீனாவும், தனது கட்டண இடைநீக்கத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கூறியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் நீட்டிப்பிற்கு என்ன காரணம்?
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க, அந்நாட்டிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா, சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவைப்போல சீனாவும் கறார் காட்டி வருகிறது. காரணம், இந்தியாவும், சீனாவுமே ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளாகும். இந்த நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து சீனாவுக்கும் அபராத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சீனா மீது அதிக வரிகள் விதிப்பது குறித்து அதிபர் ட்ரம்ப் யோசித்து வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, அக்டோபர் மாத இறுதியில் ஜி ஜின்பிங்கும் ட்ரம்பும் சந்திக்கவுள்ளனர். அப்போது இருதரப்பிலும் வரிகள் குறித்துப் பேசப்படலாம் எனத் தெரிகிறது. ஆகையால், அதுவரை மேலும் 90 நாட்களுக்கான வரி இடை நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, நீண்டகால வர்த்தக கவலைகளை தீர்க்க இரு தரப்பினருக்கும் அவகாசம் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக விவரம்
மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. சலவை இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் முதல் ஆடைகள் வரை உற்பத்தி பொருட்களுக்கு சீனாவையே பெரிதும் நம்பியுள்ளது. 2022ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த அனைத்து இறக்குமதிகளிலும் இயந்திர சாதனங்கள் (முக்கியமாக குறைந்த முதல் நடுத்தர தொழில்நுட்ப தயாரிப்புகள்) 46.4 சதவீதமாக இருப்பதாக அமெரிக்க வணிகத் துறை கணக்கிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து அமெரிக்க இறக்குமதிகள் அதிகரித்தன. ஆனால் ஜூன் மாதத்தில் அவை குறைந்தன. உண்மையில், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை ஜூன் மாதத்தில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு குறைந்து $9.5 பில்லியனாக இருந்தது. இது 2004க்குப் பிறகு மிகக் குறுகிய நிலை என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சீனாவுடனான அமெரிக்க வர்த்தக இடைவெளி $22.2 பில்லியன் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 70 சதவீதம் குறைவு ஆகும். எனினும், அமெரிக்க கருவூலத் துறை தரவுகள், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், வரிகள் மூலம் அமெரிக்கா $124 பில்லியன் வருவாய் ஈட்டியதாகக் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 131 சதவீதம் அதிகம்.