மதுரையே இலக்கு..! அடித்து ஆடப்போகும் எடப்பாடி பழனிசாமி; நடப்பது என்ன?
செய்தியாளர் மணிகண்ட பிரபு
விஜயின் தாக்குதலுக்கு பதிலடி, திமுக வலிமைக்கு சவால், தென்மாவட்ட வாக்குகளை ஒருங்கிணைக்கும் யுக்தி என்ற மூன்று நோக்கங்களை கொண்டிருக்கிறது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் மதுரை சுற்றுப்பயணம். இதுகுறித்து பெருஞ்செய்தியில் பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையில் செப்டம்பர் 1 முதல் 4 வரை நடத்த உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடத்திய வீதிவலம், தொடர்ந்து மதுரை பாரபத்தியில் விஜய் நடத்திய இரண்டாவது மாநில மாநாடு இரண்டிலுமே அதிமுக கடுமையாக தாக்கப்பட்டது.
தவெக வைத்த குறி.. கவனம் செலுத்தும் கட்சிகள்
தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு சாதகமான பிராந்தியங்களில் ஒன்று தென்பிராந்தியம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தென்பிராந்தியத்தில் பெரும் இழப்பை சந்தித்தது. குறிப்பாக தென் பிராந்தியத்தின் மையமான மதுரையின் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக வெல்ல 5 தொகுதிகளை மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. இதற்குப்பின் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது அக்கட்சிக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் மேலும் பின்னடைவை தந்தது.
திமுக எந்த சூழலையும், தனக்கேற்றபடி மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. மதுரையில் திமுக நடத்திய மாநில பொதுக்குழு கூட்டம் அதன் வியூகத்தை பிரகடனப்படுத்துவது போல இருந்தது. இத்தகு சூழலில்தான் தவெகவும் மதுரையை குறிவைத்து இயங்க ஆரம்பித்திருக்கிறது. இயல்பாகவே சினிமா மோகத்துக்கு பேர் போன மதுரையில், விஜய் நடத்திய மாநாட்டுக்கு குவிந்த கூட்டம் எல்லா கட்சிகளையுமே துணுக்குறவைத்துள்ளது. விஜய் மதுரையில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படும் சூழலில் இந்த மாநாட்டில், முதல் முறையாக அதிமுகவையும் குறி வைத்து தாக்கினார் விஜய்.
வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி
இவ்வாறு விஜய் பேசியதற்கு எதிர்வினையாகத்தான் பழனிசாமி தனது மதுரை சுற்றுப் பயணத்தை ஏனைய பிராந்தியங்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்துடன் 4நாள் பயணமாக திட்டமிட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மதுரை எப்போதுமே தென்மாவட்ட அரசியலின் திசைமுகமாக கருதப்படுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 5 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. திமுக தரப்பில், அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், மதுரை மேற்கு உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு நேரடி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தென்மாவட்ட அதிமுக முகமாக உருவாக்கப்பட்டுள்ளார். அவருடன் செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா போன்ற மூத்தோர் இணைந்து கட்சியை நடத்துகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது 4நாள் மதுரை பயணத்தில், விஜய் விமர்சனங்களுக்கு நேரடி பதிலும், திமுகவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்கு சவாலும் விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலும், 2ஆம்தேதி மேலூரிலும், 3ஆம் தேதி மதுரைமேற்கு, மத்தி, தெற்கு, 4ஆம் தேதி சோழவந்தான், உசிலம்பட்டியிலும் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அப்போது, திருப்பரங்குன்றம் மலைவிவகாரம், மதுரை மாநகராட்சி வரி ஊழல், மேயரின் கணவர் கைது, அடிப்படை வசதி குறைபாடு குறித்தெல்லாம் பேசவும், சிறுகுறுதொழில் சங்கம், செளராஷ்டிரா, முக்குலத்தோர் சமுதாய பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
விஜயகாந்த் 2005இல் திருப்பரங்குன்றத்தில் நடத்திய மாநாடு போலவே, விஜயும் அதே இடத்தில் தனது சக்தியை காட்டியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக பழனிசாமியின் மதுரை பயணமும் அதே திருப்பரங்குன்றத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் தவெக - திமுக இடையேதான் போட்டி என்று சொன்னதன் வாயிலாக அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளும் விஜயின் வியூகம் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது; இதை இனி அனுமதிக்கக் கூடாது" எனும் பொறுமல் அதிமுகவினர் இடையே உருவாகியுள்ளது. ஆக, இதுவரை விஜய் விஷயத்தில் அமைதியாக இருந்த அதிமுக இனி அடித்து ஆடும் என்பதன் வெளிப்பாடாக பழனிசாமியின் மதுரை பயணம் இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!