Bihar Election | பிஹார் ஏன் வறுமையாக இருக்கிறது?
பிஹாரில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் வெளியேறுவது பெரும் பிரச்னையாக உள்ளது. மாநிலத்தின் சமூக பொருளாதார நிலைமைகள், நகரமயமாக்கல் குறைவானது, மற்றும் விவசாயத்தில் வருமானம் குறைவானது இதற்குக் காரணம். இதனால், பிஹாரில் உள்ள மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை தேடுகின்றனர்.
பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 121 தொகுதிகளில், 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தொகுதிகளில் உள்ள 3.75 கோடி தகுதியான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.25 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணிகளை கவனித்த நிலையில், 2 லட்சம் துணை ராணுவத்தினர் மற்றும் பிஹார் காவல் துறையினர் பாதுகாப்பை உறுதி செயதனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர், மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக தலைவர்களில் முக்கியமானவருமான சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராப்பூர், தனிக்கட்சி கண்டு களத்தில் குதித்துள்ள தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடும் மகுவா போன்றவை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் முக்கியமானவை.
இடப்பெயர்வு பிரச்னை
முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்திருந்தாலும் தொழிலாளர்கள் இடம்பெயரும் பிரச்னை பிகார் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது. ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் இதைப் பேசுகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைபார்க்கும் பிஹார் மாநில தொழிலாளர்கள் சாத் பூஜைகளுக்காக சொந்த மாநிலத்திற்கு திரும்பியிருக்கின்றனர். வாக்குப்பதிவின்போது, வாக்காளர்களாக இவர்களது காரணி முக்கியமானதாக இருக்கும் என்பதும் அவர்களின் மூலமாக மற்ற மாநிலங்களின் வளர்ச்சி குறித்தும், அங்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பான விவாதங்கள் அதிகளவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
வேலை வாய்ப்புகளுக்காக வேறு இடங்களுக்கு இடம் பெயர்வது என்பது தவறான ஒன்றல்ல. ஆனால், அதற்கான காரணிகள்தான் கவனிக்க வேண்டியது. தன் வாழ்க்கை தரத்தை மேம்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக இடம்பெயர்வது என்பதும், அன்றாட தேவைகளுக்கே அல்லல்படும் ஒரு குடும்பத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒருவர் இடம் பெயர்கிறார் என்பதும் ஒன்றான விஷயமல்ல. இதில் பிகார் இரண்டாம் ரகம். மாநிலத்தில் இருக்கும் சிக்கல்களை உரக்கச் சொல்லும் ரகம்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூகக் காரணிகள்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிஹாரில் இருந்து 74.54 லட்சம் மக்கள் வேலைவாய்ப்புகளுக்காக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சென்றிருக்கின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லிக்கு சென்றிருக்கின்றனர். பிஹாரில் இருந்து ஜார்கண்ட் பிரிந்த போது, அதன் கனிம வளங்களும், கனிமவள தொழிற்சாலைகளும் கூடவே சென்றுவிட்டன. இப்போது ஜார்கண்ட் கூட பிகாரிகள் இடம்பெயரும் முக்கியமான இடமாக இருக்கிறது. எனவே, மாநிலத்தின் குடிமக்கள் வேறுமாநிலங்களுக்கு செல்வதைக் குறைத்து, பிஹாரிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்பது அரசியல் களத்தில் எதிரொலிக்கும் விஷயம். ஆனால், இம்முறை சற்று அதிகமாக ஒலிக்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வறுமை, தனிமனித வருமானம் என அனைத்து சமூக பொருளாதார மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால் அதற்கான காரணத்தை அலச வேண்டியது முக்கியமான ஒன்று.
பிஹார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, புதிய தலைமுறை குழுவினர் அங்கு முகாமிட்டிருக்கும் நிலையில், ஆசிரியர் சமஸ் இதுதொடர்பான சில முக்கியமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். “இன்றைய இந்தியாவின் சமூக பொருளாதார அரசியல் என்பது நகர்மயத்தை மையமாகக் கொண்டு சிந்திக்கக்கூடியது. ஆனால், பிகார் என்பது இந்தியாவிலேயே நகர்புறத்தில் மிகவும் கீழாக இருக்கக்கூடிய ஒரு மாநிலம். நாம் இதை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் இந்த விஷயத்தை இன்னும் தெளிவாகச் சொல்லலாம். இந்தியாவிலேயே அதிகமான நகரமயமாக்கல் நிகழ்ந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் 50% மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். ஆனால், பிகாரில் 20%தான் நகரங்களில் வசிக்கிறார்கள். இன்னும் 80% மக்கள் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள். அதிகமான மக்கள் கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழும் சூழலில், விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் வறுமையான சூழல் நிலவுகிறது. எனவே பிகாருக்குள் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில், தொழிலாளர்கள் பிஹாரை விட்டு வெளியேறுவது என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சமூக அளவில் பிஹாரிகள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்” என்கிறார்.
மாறி மாறி குற்றம்சாட்டும் கட்சிகள்கள்
தொழிலாளர்களின் இடப்பெயர்வு பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிகளும் பேசிவருகின்றன. ஒவ்வொரு தரப்பும் எதிர்த்தரப்பு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மாநிலத்தில் 20 ஆண்டுகள், மத்தியில் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பிகாரை வேலைவாய்ப்பு இல்லாத, வறுமையான, குடிபெயரும் தொழிலாளர்களை கொண்ட மையமாக மாற்றியிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார். மகாகத்பந்தன் தனது பிரச்சாரத்தையே 'வேலைவாய்ப்பை உருவாக்குங்கள், இடம்பெயர்வை நிறுத்துங்கள்' என்ற முழக்கத்துடனே நடத்தி வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களுக்கு தொழிலாளர்களை வழங்கும் சப்ளையராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் பிகாரை மாற்றியிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பிரதமர் மோடியோ, லாலு அரசாங்கத்தையே இடப்பெயர்வுக்கான காரணமாகக் குறிப்பிடுகிறார். பெருமளவிலான குடிபெயர்வின் உண்மையான தொடக்கம் என்பது இரண்டு முதல் மூன்று தசாப்தங்களுக்கு முன் நடந்தது என்று தெரிவித்திருக்கிறார். கல்வி அமைப்பு முற்றிலும் சீர்குலைந்தது லட்சக்கணக்கான மக்கள் பிகாரை விட்டு வெளியேற நேரிட்டது எனத் தெரிவிக்கிறார். ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், “மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால், வேலைக்காக பிகாரை விட்டு வெளியே போக வேண்டிய நிலை இனி ஏற்படாது. பிகாரின் இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள்” என்றும் தெரிவிக்கிறார்.
கவர்ச்சிகர வாக்குறுதிகள்
வேலை வாய்ப்பு பிரச்னைகளை சரிசெய்ய அனைத்து தரப்பும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்திருக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.
மகாகத்பந்தன் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.. 20 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
ஆனால், சமூக பொருளாதார குறியீடுகளில் பிகார் இருக்கும் நிலையை அனைத்து கட்சியினரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அத்தகைய விஷயங்களை யாரும் பொதுவெளியில் பேசாத காரணத்தினால் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் கவர்ச்சிகர வாக்குறுதிகளாக மட்டுமே காட்சி அளிக்கின்றன.
உதாரணத்திற்கு சில விஷயங்களைப் பார்க்கலாம். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் இருக்கும் 88% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாக இருக்கின்றனர். 12% க்கும் குறைவான மக்களே நகரங்களில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக வேலைவாய்ப்பு என்பது விவசாயம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. எனவே, கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளில் கிட்டத்தட்ட 50%க்கும் மேல், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டே இயங்குகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பணம்தான் பிகாரின் கிராமப்புற பொருளாதாராத்தின் முதுகெலும்பு என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
இடப்பெயர்வு தேர்வு அல்ல.. கட்டாயம்!
பிஹாரில் சமீபத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, மொத்தமுள்ள 2.97 கோடி குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு, அதாவது 94 லட்சம் குடும்பங்கள் மாதம் 6 ஆயிரம் அல்லது அதற்கும் கீழான செலவிற்குள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இடப்பெயர்வு என்பது தேர்வாக அல்லாமல் கட்டாயமாக ஆகின்றது.
மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் என்பது தேசிய சராசரியை விடக் குறைவாக இருக்கிறது. தேசிய சராசரி 80.9% ஆக இருக்கும் நிலையில், பிகாரின் எழுத்தறிவு விகிதம் என்பது 74.3% ஆக இருக்கிறது. மூன்றில் ஒருவர் எழுத்தறிவில்லாமல் இருக்கிறார். இவையெல்லாம்தான் சிக்கல். ஆனால், கட்சியினரோ வேலை வாய்ப்பு உருவாக்கப்படும், Global tech park, fintech cities என கவர்ச்சிகரமான அறிவிப்புகளையே வெளியிட்டு வருகின்றன. இவை எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
கட்டடங்களால் வறுமை குறையுமா?
புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு நேர்காணல் கொடுத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் இதுதொடர்பான முக்கியமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், ஒரு தொழிற்சாலை பிஹாரில் வரவேண்டுமென்றால் அந்த தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்கள் அதற்கான அறிவுத்திறனுடன் இருக்க வேண்டும். அந்தத் திறன் இல்லையென்பதுதான் முக்கியமான விஷயம். திருப்பூருக்கு வரும் பிஹார் தொழிலாளர்களை எல்லாம் பயிற்சி கொடுத்துதான் வேலைக்கு எடுக்கிறார்கள்.
முதலில் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் சார்ந்து பயிற்சிகளை வழங்கக்கூடிய கட்டமைப்புகளை பிகாரில் கொண்டு வர வேண்டும். சரியான கல்வி, வேலைவாய்ப்புக்கான சரியான பயிற்சி போன்றவைகளைச் செய்து மாணவர்களை முதலில் தயார்படுத்த வேண்டும்.
பிகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் வளராமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் அரசியல்வாதிகள்தான். எக்ஸ்பிரஸ் வே, பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டுவதன் மூலம் வறுமை குறைந்துவிடுமா? வறுமை அப்படியேதான் இருக்கும். எனவே முதலில் வறுமையை ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். அதோடு, இளைஞர்கள் மத்தியில் திறன்களை வளர்க்காமல் ஐடி துறைகளை மாநிலத்திற்குள் கொண்டு வந்தால், வெளிமாநில இளைஞர்கள்தான் பிஹாரில் வேலை செய்வார்கள். அதனால் பிஹாருக்கு எவ்விதமான பயனும் இருக்காது என்கிறார்.
அடுத்தக்கட்டத்திற்கு நகராத பிஹார்
உலகமயமாக்கலுக்குப் பிறகு நாடு முழுவதிலும் பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கென ஒரு துறையில் ஒதுக்கிக்கொண்டு கொடி நாட்ட ஆரம்பித்தன. அது உற்பத்தித்துறையாக இருக்கலாம்., சேவைத்துறையாக இருக்கலாம். ஆனால், பிஹாரோ விவசாயத்தில் இருந்து அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. விவசாயத்தையும் நவீனம் சார்ந்து மாற்றவில்லை. பிஹார் முழுவதிலும் சாதி வேற்றுமைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன. நிலப்பிரபுத்துவம் இன்னும் இருக்கும் இடமாக பிஹார் காட்சியளிக்கிறது.
PT Nerpadapesu யூடியூப் தளத்திற்கு இதுதொடர்பாக பேட்டியளித்திருந்த பத்திரிகையாளர் ப்ரியன் முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “மூன்று வகையான தொழில் துறைகள் இருக்கின்றன.
1. கனிம வளங்களை சார்ந்த தொழில்கள்.
2. உற்பத்தி சார்ந்த துறைகள்.
3. சேவைத்துறைகள்.
ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்கள் வளர்ந்திருப்பது சேவைத்துறையால்தான். பிஹாருக்கான முக்கியமான இழப்பு என்பது அங்கு ஜார்கண்ட் இணைந்திருந்து 2000ல் பிரிந்து சென்றது. பல்வேறு தொழிற்சாலைகள் அங்கு இருந்தது. பிஹார் இளைஞர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்புகளை வழங்கிய ஜார்க்கண்ட் பிரிந்து சென்றது, பிஹாரை விவசாயத்தை சார்ந்து இருக்கக்கூடிய மாநிலமாக மாற்றியிருக்கிறது.
பிஹாரில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு கூட முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. சமீபகாலமாகத்தான் பிஹாருக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு பட்ஜெட்டில் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கு படித்த திறன்மிகு இளைஞர்களும், அடிப்படைக் கட்டுமானங்களும் இருக்க வேண்டும். இதுதான் முக்கியம். சமூக நலத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். ஆனால். அடிப்படைக் கட்டுமானங்களை அதிகரிக்க பெரும்பாலான திட்டங்களைக் கொண்டுவரவில்லை” என்றார்.
பிஹாரின் வறுமை மற்றும் இடம்பெயர்வு பிரச்னை என்பது அரசியல் வாக்குறுதிகளால் மட்டும் தீர்க்கப்படக்கூடிய விஷயமல்ல. கல்வி, திறன் மேம்பாடு, அடிப்படை கட்டுமானங்கள், சமூக சமத்துவம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் அதன் நீண்டகால தீர்வாக அமையும்.
