எம்ஜிஆரின் தொண்டர்.. ஜெ.வின் விசுவாசி.. அன்று முதல் இன்று வரை.. யார் இந்த செங்கோட்டையன்?
அதிமுக எனும் ஆலமரத்தில் சூப்பர் சீனியராக இருக்கும் செங்கோட்டையன், ’மனம் திறந்து பேசப்போகிறேன்’ என்று கூறியது முதல், அதிமுக வட்டாரத்தில் புயல் வீசத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அவருக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், மனதில் அப்படி என்ன வைத்திருக்கிறார்.. என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். 10 நாட்கள் கெடு" எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில், ’அவர் யார்’ என்ற தலைப்பில், அவருடைய அரசியல் பயணத்தையும், எடப்பாடிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் ஒரு டைம் லைனாக பார்க்கலாம்.
யார் இந்த செங்கோட்டையன்?
பொதுவாக, தலைமைக்கு நேரெதிராக போர்க்கொடி தூக்காதவர்தான் செங்கோட்டையன். அவரது அரசியல் பயணம் என்று பார்த்தால், அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரின் முதல் சட்டசபையில் இருந்து துவங்குகிறது. ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தில் 1948ஆம் ஆண்டு பிறந்த செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தை திமுகவில்தான் துவங்கினார். ஆனால், 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோது, அவர் உருவாக்கிய அதிமுகவில் இணைந்தார் செங்கோட்டையன். 1975ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் எம்ஜிஆரிடம் நற்பெயரைப் பெற்று கவனம் ஈர்த்தார். அதன்பிறகான காலகட்டத்தில் எம்ஜிஆரோடு பிரசாரத்திற்கு செல்வது என்று நெருக்கமானார்.
எம்ஜிஆரிடம் நற்பெயரைப் பெற்ற செங்கோட்டையன்
முன்பே சொன்னதுபோல, செங்கோட்டையனின் முதல் தேர்தல் வெற்றி என்றால், அது 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்தான். எம்ஜிஆரின் முதல் ஆட்சிக்காலத்தில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றவர், 1980ஆம் ஆண்டு முதலே கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு 1989ஆம் ஆண்டில் அதிமுக ஜெ.அணி.. ஜா.அணி என்று இரண்டு அணிகளாக பிளவுற்றது. அந்த பிளவில் ஜெயலலிதா அணியில் இருந்தவர், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தல் தோல்வி என்று பார்த்தால், 1996 தேர்தலில் மட்டும் தோல்வியை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன். அமைச்சரவையில் அவரது பயணம் என்று பார்த்தால், 1991 - 1996 ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 2011 - 2016 ஆட்சிக் காலத்தில் விவசாயம், IT, வருவாய் துறை என்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இறுதியாக, 2016 - 2021 காலகட்டத்தில் பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்திருந்தார் செங்கோட்டையன்.
எம்ஜிஆருடன் நற்பெயரைப் பெற்றதைப் போலவே, ஜெயலலிதாவிடமும் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்த செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பயணத் திட்டங்களை வகுப்பது என்று முக்கிய முகமாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழ்ந்த செங்கோட்டையன், நிகழ்ச்சி நிரல்களை சிறப்பாக வகுப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
அதிமுகவின் சூப்பர் சீனியர் செங்கோட்டையன்
தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, துரைமுருகன் வரிசையில், அதிகமுறை சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன், அதிமுகவில் சூப்பர் சீனியராக இருக்கிறார். இப்போதைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் சீனியர்தான் செங்கோட்டையன்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல குளறுபடிகள் நடந்தபோதெல்லாம் அமைதி காத்த செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாக தனது மனக்குமுறலை வெளிப்படுத்த துவங்கினார். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலையில் எடப்பாடியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் 6 பேர், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அணிகளை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். அதில் செங்கோட்டையனும் ஒருவர். பிறகான காலகட்டத்தில், அப்படியோர் ஆலோசனையே நடக்கவில்லை என்று எடப்பாடி மறுக்க, ஆலோசனை நடந்தது உண்மைதான் என்று பொதுவெளியில் உடைத்தார் செங்கோட்டையன்.
நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த செங்கோட்டையன்
கடந்த பிப்ரவரியில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததன் மூலம், இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு பட்டவர்த்தனமாக தெரிந்தது. கூட்டத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததாலேயே புறக்கணித்ததாக கூறிய செங்கோட்டையன், ’இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள்’ என்று வெடித்துப் பேசினார்.
தொடர்ந்து, சென்னையில் நடைபெறாமல் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தவர், மார்ச் மாதத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. மார்ச் மாதத்திலேயே, பேரவை கூடும் முன் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியது, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது.. சட்டசபையில் தனியாக அமர்ந்தது என்று செங்கோட்டையன் செயல்பாடுகள் அதிமுகவில் புயலை கிளப்பியது.
கடந்த ஜூலையில், கோவையில் வைத்து இபிஎஸ் சுற்றுப் பயணத்தை தொடங்கியபோதும், ஈரோட்டில் பரப்புரை செய்தபோதும் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன், இன்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.