“அதிமுக-வை சேர்ந்தவர்கள் கூடி பேசி முடிவெடுக்க வேண்டும்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்போம். இவையாவும் அதிமுக-வின் உட்கட்சி பிரச்னை என்பதால் நான் அதிகம் கருத்து கூற முடியாது” - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
இதுகுறித்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கூறியதாவது, “செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்திய கருத்துக்கள் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் வரவேற்க கூடிய கருத்தாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுகிற வகையில் 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற வகையில் அந்த கருத்து அமைந்திருக்கிறது. மேலும், அதிமுக ஒன்றிணைவது குறித்து நான் 2024 மக்களவை தேர்தலில் இருந்து நான் பேசுகிறேன். இன்று நயினார் நாகேந்திரன் அவர்களும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்தை வரவேற்றிருக்கிறார். அமித்ஷா அவர்களும் இதே கருத்தையே வலியுறுத்திருக்கிறார். எனவே அனைவரின் கருத்துக்களும் அதிமுக ஒன்றிணைவதையே விரும்புகின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் தலைமைக்கு ஆபத்து வருமோ என்ற பயம் காரணமாக யாரையும் சேர்த்துக்கொள்ள தயங்குகிறார். அவர் திமுக விடம் தோற்றாலும் பரவாயில்லை நான் அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார். 2026-ல் அதிமுக தோற்றால் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மன்னிக்க மாட்டார்கள். எனவே அதிமுக ஒன்றிணைப்பதற்கான முயற்சியை எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
புதிய தலைமுறையிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, “அதிமுக தொண்டர்கள் சொல்வதையே இன்று செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார்; புதிதாக எதுவும் சொல்லவில்லை. இதை இபிஎஸ்-யிடம் நேரிலேயே பேசியிருக்கலாம். புதிதாக செங்கோட்டையன் எதாவது முடிவெடுக்கப்போகிறார் எனக் காத்திருந்தோம். எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறார் என்பதற்கு எதையும் கோடிட்டுக்காட்டவில்லை. செங்கோட்டை சொல்லியே கேட்கவில்லை. செங்கோட்டையன் சொல்லி கேட்கப்போகிறாரா? 10 நாட்கள் கழித்து செங்கோட்டையன் என்ன செய்ய போகிறார்?” எனத் தெரிவித்திருக்கிறார்.
செங்கோட்டையன் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “செங்கோட்டையன் பேசியதை ஒவ்வொரு அதிமுக தொண்டரும் வரவேற்கிறார்கள். செங்கோட்டையன் சொன்ன கருத்தை வரவேற்கிறேன். 10 நாள் கெடு கொடுத்திருக்கிறார். கெடு முடிந்ததும் அவர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நாங்கள் எல்லாம் வெளியில் வந்துவிட்டோம். ஆனால், செங்கோட்டையன் கட்சியில் இருக்கிறார். மாவட்ட செயலாளராக, அமைப்பு செயலாளராக இருக்கிறார். அவரை அதிமுக தொண்டர்கள் அத்தனைபேரும் அறிவார்கள். அவர் எடுத்திருக்கும் முடிவு இத்தருணத்தில் சரியான முடிவு” எனத் தெரிவித்தார்.
ஒன்றுபடுவோம், வென்றுகாட்டுவோம் என சசிகலா தெரிவித்திருக்கிறார். செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளார் என்றும், அதிமுக ஒன்றிணைய எப்படி தடைபோட்டாலும், அவற்றை தவிடுபொடியாக்கி மீண்டும் இணைவோம் என சசிகலா அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். திமுகவை வீழ்த்த ஒன்றுபட்ட அமுக வழி செய்யும் என்றும் சசிகலா தெரிவித்திருக்கிறார்.
“அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்பது நல்ல விஷயம். திமுக-வை தவிர அனைவரும் ஓரணியில் வரவேண்டும்” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து#Sengottaiyan #NainarNagendran #AIADMK #TamilNaduPolitics #DMK #BJP pic.twitter.com/3j3G2KE4Hu
— PttvOnlinenews (@PttvNewsX) September 5, 2025
செங்கோட்டையன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “முயற்சி செய்வது நல்ல விஷயம். அரசியலில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது; கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படும்; எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றலாம்” என்று தெரித்தார்.
“அதிமுக-வை ஒருங்கிணைத்தால்தான் வெல்ல முடியும் என்ற தனது மனதின் குரலை வெளிப்படுத்தியுள்ளார் அண்ணன் செங்கோட்டையன்; அவரது எண்ணம் நிறைவேற வேண்டும்” - முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்#OPS | #OPanneerselvam | #Sengottaiyan | #ADMK | #EPS pic.twitter.com/FCDR0vWAix
— PttvOnlinenews (@PttvNewsX) September 5, 2025
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து பேசுகையில், “அதிமுக-வில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுக-வை வளர்க்க உதவியவர் செங்கோட்டையன். இன்று ‘ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்' என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். அவரின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது; ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெல்ல முடியும்" என்று கூறினார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "1972ல் இந்த இயக்கத்தை தொடங்கியபோதே எங்கள் கிராமத்தில் கிளை கழகத்தை உருவாக்கினோம். எம்ஜிஆர் செல்வாக்குமிக்க தலைவராக, பேரறிஞர் அண்ணாவால் போற்றப்படும் தலைவராக வாழ்ந்தார். 1975ல் பொதுக்குழு கோவையில் நடந்தது.அப்போது அரங்கநாயகம் தலைவர், திருப்பூர் மணிமாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த வேண்டுமென்று எனக்கு ஆணை வழங்கப்பட்டது. அதை நாங்கள் முழுமையாக செயல்படுதியதை எங்களை நேரில் அழைத்து எம்ஜிஆர் பாராட்டினார். 1977ல் சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார்கள். சத்தியமங்கலம் எனக்கு புதிதான தொகுதி என சொன்னபோது, என் பெயரை உச்சரி வெற்றிபெற்றுவிடுவாய் என சொன்னார்.
இந்த இயக்கத்தில் இருந்து வெளியில் செல்பவர்களின் வீடுகளுக்கே சென்று, தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களின் நலன் கருதி தன்னுடன் பயணிக்க வேண்டுமென்று அழைத்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு ஆளுமை மிக்க தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்கள். மக்களுக்காகப் பணியாற்ற உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக பொதுச்செயலாளராக நியமித்தோம். பின் மீண்டும் முதலமைச்சர் யார் என்று கேள்வி வந்தபோது தற்போதைய எதிர்க்கட்சி தலைவரை முன்மொழிந்தார்.
இயக்கத்தில் தடுமாற்றங்கள் வந்தபோது ஜெயலலிதா என்னைப் பாராட்டியதும் எல்லோருக்கும் தெரியும். நெடும்பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது பல்வேறு பொறுப்புகள் கிடைக்கும். பல்வேறு சோதனைகள் வரும். ஆனால், இந்த இயக்கத்திர்காக அர்ப்பணித்துக்கொண்டு அத்தனை பணிகளையும் நான் ஆற்றியிருக்கிறேன். இரண்டு வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைத்தபோதும் இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தில்தான் என் பணிகளை மேற்கொண்டேன்.
2019 தேர்தல், 2021, 2024 தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல்வேறு தேர்தல்களை சந்தித்தபோது களத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றிபெற்றிருக்க முடியும் என இன்று சொல்கிறோம். ஆனால், இதையெல்லாம் நாங்கள் அவரிடத்தில் நினைவூட்டினோம். தேர்தல் முடிந்தபிறகு பொதுச்செயலாளரை சந்தித்தோம். கழகத்தை ஒன்றிணைக்க வேண்டும், வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், அன்பழகன் என 6 பேரும் பொதுச்செயலாளரை சந்தித்து முன்வைத்தோம். ஆனால், அந்தக் கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.
மறப்போம் மன்னிப்போம். வெளியே சென்றவர்களை நாம் அரவணித்தால் மட்டும்தான் இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தாண்டி செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லை. அவர்கள் கற்றுத்தந்த பாடம் இது. வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். இதை யார் சொல்வது எனும் நிலையில்தான் நான் சொல்கிறேன். மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் தேவை என்றால் வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.
விரைந்து அதை முடிக்க வேண்டும். தேர்தல் களத்தில் எல்லோரும் தங்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். எனவே விரைந்து நல்ல முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி விரைந்து மேற்கொள்ளவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதை செயல்படுத்த பணிகளை மேற்கொள்வோம். பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதில் ஒரு முடிவு வந்தால்தான், அந்த வெற்றிப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்" எனத் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா புதிய தலைமுறையிடம் பேசுகையில், “செங்கோட்டையன் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் அறிமுகமானவர். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோதே அக்கட்சியில் இணைந்து, ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக இருந்து அதிமுக வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் செங்கோட்டையனைத் தெரியும். கிட்டத்தட்ட லட்சக்கணக்கான நிர்வாகிகள் அவருக்கு நேரடிப் பழக்கம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வடிவமைத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் செங்கோட்டையனுக்கு முழுமையான பங்கு உண்டு. அப்படிப்பட்ட சுற்றுப்பயணத்தின்போதுதான் செங்கோட்டையனுக்கு பிற பகுதிகளில் உள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்படி இருபெரும் தலைவர்களிடமும் நெருக்கமாக இருந்த செங்கோட்டையனை தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கிறார். கட்சியின் முக்கியத்தலைவர்களும் கட்சி ஒன்றிணைய வேண்டுமென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தினார்கள். ஆனால், பிடிவாதமாக இபிஎஸ் மறுத்ததன் விளைவாக அவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தார்கள். அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான் இன்று பிரளயமாக வெடிக்கிறதோ என்று கருதுகிறேன்.
எடப்பாடி பழனிசாமியிடம் சுயநலமும் சர்வாதிகாரப்போக்கும் மேலோங்கி இருப்பதாகப் பார்க்கிறேன். தனக்கு எதிராக கட்சி தொடங்கியவர், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் என எல்லோரையும் அரவணைத்தவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் கட்சியின் மூத்த முன்னோடிகள் பிரிந்து தனக்கு எதிராக இயங்கிய நிலையில், அவர்களை அழைத்து கட்சியிலும் அமைச்சரவையிலும் பொறுப்புகளை வழங்கி, கட்சியின் எதிர்காலமும் வெற்றியுன் முக்கியம் என பயணப்பட்டார்கள். அதனால்தான் அதிமுக தொடர் வெற்றிகளைப் பெற்றது. ஆனால், இந்த தலைவர்களின் போக்குகளில் இருந்து முற்றிலும் திசைமாறி எடப்பாடி பழனிசாமி தான்தான் அதிமுக என சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொள்கிறார். இது நிச்சயமாக அதிமுகவிற்கு தொடர் தோல்விகளை ஏற்படுத்தும். இதை இபிஎஸ் உணர்ந்தும் தன் நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்கிறார். இதற்கு 2026 தேர்தல் சரியான பாடம் கற்பிக்கும்" எனத் தெரிவித்தார்,
“அதிமுக-விற்கு அண்ணன் செங்கோட்டையன் ஆற்றிய பணி அளப்பரியது; அவர் கருத்து தெரிவித்தபின், நான் அதுபற்றி பேசுகிறேன்” - முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்
“அதிமுக-விற்கு அண்ணன் செங்கோட்டையன் ஆற்றிய பணி அளப்பரியது; அவர் கருத்து தெரிவித்தபின், நான் அதுபற்றி பேசுகிறேன்” - முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்#OPS | #ADMK | #Sengottaiyan | #OPanneerselvam pic.twitter.com/6pRwmuDgd5
— PttvOnlinenews (@PttvNewsX) September 5, 2025
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்ஜிஆரால் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதிமுகவிற்காக பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே அவர் மாவட்ட செயலாளர். தொடர்ந்து 23 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக இருப்பவர். மேலும், கட்சியின் பல்வேறு உயர்மட்ட பொறுப்புகளில் இருந்தவர். கட்சிக்கு அவர் ஆற்றிய பணி உண்மையிலேயே அளப்பறியது. அவர் செய்தியாளர்களிடம் என்ன பேசப்போகிறார் என்பதை அறிந்துகொண்ட பின் நான் என் கருத்தை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அண்ணாவின் பெயரில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில், செங்கோட்டையன் வடிவில் இன்னொருகலகம் வெடிக்கிறது. இன்று மனம்திறந்து பேசப் போகும் செங்கோட்டையனின் பயணம், டெல்லியின் கடைக்கண் பார்வையுடனே நடப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.
செங்கோட்டையன் மீது பாஜகவின் கடைக்கண் பார்வை? என்ன நடக்கிறது அதிமுகவில்?
தமிழக அரசியலில் இன்றைய நாளை முக்கியமான நாளாக மாற்றியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல்போக்கு நிலவும் சூழலில் செங்கோட்டையன் வெளியிடப்போகும் அறிவிப்பு என்ன? என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதுதொடர்பான விபரங்களை களத்தில் இருந்து செய்தியாளர் அளித்த தகவல்களைப் பார்க்கலாம்..