இன்னொரு பிளவை எதிர்கொள்கிறதா அதிமுக.. என்ன முடிவில் இருக்கிறார் செங்கோட்டையன்?
அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கும் செங்கோட்டையன், தற்போது கட்சிக்குள் குழப்பத்தை விதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குழப்பத்தை விதைத்த செங்கோட்டையன்
அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர் என பெயர் எடுத்தவர். இன்று இவர்தான் கட்சிக்குள், குழப்பத்தை விதைத்துள்ளார். செங்கோட்டையனிடம் மாற்றங்கள் தொடங்கியது, கடந்த பிப்ரவரி மாதம், அன்னூர் அருகே நடந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட பாராட்டு விழாவில். பொதுச்செயலர் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய இந்த விழாவை, எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று கூறி, புறக்கணித்தார் செங்கோட்டையன். ஆனால், கட்சியில் செங்கோட்டையனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று அவர் கருதுவதும், ஈரோட்டில் அவருக்கு எதிரானவர்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதுமே இந்தப் புறக்கணிப்புக்கான உண்மையான காரணம் என்று அப்போது அதிமுகவினர் மத்தியில் பேச்சு நிலவியது.
தனித்து இயங்கிய செங்கோட்டையன்
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பழனிசாமி பெயரை நேரடியாகச் சொல்லாமல் ‘என்னை சோதிக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுத்தார் செங்கோட்டையன். மார்ச் மாதம் நடந்த பேரவைக் கூட்டத்தொடரில், தனித்து இயங்கினார் செங்கோட்டையன். அதிமுக எம்எல்ஏக்கள் செல்லும் வழியைக்கூட தவிர்த்தார். பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் புறக்கணித்தார். செங்கோட்டையனின் இப்படியான ஒவ்வொரு நகர்வும் அதிமுக தலைமைக்கு எதிராகவே இருந்தது. வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி போன்ற சீனியர்கள், பேரவைக்குள்ளேயே அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை.
அதிமுக கூட்டத்தில் பங்கேற்பு
இரண்டு மாதங்களுக்குப் பின் எம்ஜிஆர் மாளிகையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றாலும், கூட்டம் முடிந்ததும் முதல் நபராக வெளியேறினார். பாஜகவுடன் கூட்டணி வைக்க பழனிசாமி தயங்கிய அக்காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னையில் சந்தித்தது, டெல்லி சென்று பாஜக மேலிடத்தைச் சந்தித்தது என இன்னொருபுறம் காய் நகர்த்தினார் செங்கோட்டையன். ”ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கான வாய்ப்பு தனக்கு வந்தபோது அதை மறுத்தவர் செங்கோட்டையன்.
அந்த அளவுக்கு கட்சியில் முக்கியத்துவத்தோடு இருந்த தன்னை ஓரங்கட்டிவிட்டு, தனக்கு பின்னால் வந்தவர்களுக்கு பழனிசாமி முக்கியத்துவம் கொடுக்கிறார் எனும் மனக்குமுறல் செங்கோட்டையனிடம் இருக்கிறது” என்கிறார்கள் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள். பழனிசாமி ஆதரவாளர்களோ, வேறொரு கதையைச் சொல்கிறார்கள். “செங்கோட்டையனின் கடந்தகால முக்கியத்துவங்கள் எல்லாமே சசிகலா வழியாக நடந்தது. அந்த விசுவாசம் இன்னும் அவரிடம் இருக்கிறது. தவிர, பழனிசாமியைவிட சீனியர் என்ற எண்ணமும் இருக்கிறது. கட்சி தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணும் பழனிசாமியை செங்கோட்டையனின் நகர்வுகள் தொந்தரவுபடுத்துகின்றன” என்கிறார்கள் பழனிசாமியின் ஆதரவாளர்கள்.
செப்டம்பர் 5ஆம் தேதி கெடு
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தமிழக அரசியல் தலைவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் தவெக 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்றும், இந்தத் தாக்கங்களில் அதிமுகவுக்கே அதிகம் பாதிப்பு இருக்கும் என்றும் வெளியாகியுள்ள தகவல்கள் எல்லா அரசியல் தலைவர்களையுமே யோசிக்க வைத்துள்ளன. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமமுக தலைவர் தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா ஆகியோர் ஏற்கெனவே பாஜக அதிமுக கூட்டணி திசையிலிருந்து பாதையை மாற்றிக்கொண்டிருக்கும் சூழலில்தான், இதுநாள் வரை பழனிசாமிக்கு எதிராக எதுவும் வெளிப்படையாக பேசாத செங்கோட்டையன், செப்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளப்போவதாக சொல்லி பரபரப்பில் தள்ளியிருக்கிறார்.
அதிமுகவின் மூத்த தூண்களில் ஒருவரான செங்கோட்டையன், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றோரோடு கை கோர்த்தால் அதிமுகவுக்குள் மீண்டும் ஒரு பிளவு வெடிக்கும்; தேர்தல் சமயத்தில் இதெல்லாம் பெரும் பின்னடைவுகளைக் கொண்டுவருமே என்று கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்! இதை உணர்ந்துகொண்டதாலோ என்னவோதான், “அதிமுக தலைமை மீது அதிருப்தி இருக்கிறதா” என்று பிரசார கூட்டத்திலேயே கேட்டிருக்கிறார் பழனிசாமி என்றும் அவர்கள் கருதுகிறார்கள். செங்கோட்டையன் என்ன பேசுவார், என்ன முடிவெடுப்பார்; இடையிலேயே சமாதானம் ஏற்படுமா; அதிமுகவில் அடுத்தது என்ன என்பதுதான் எல்லோரும் பேசும் பொருள் ஆகியிருக்கிறது!