MI-ல் தொடரும் ஹர்திக் மீதான விமர்சனங்கள்... எப்போதான் பாஸ் முடிவு வரும்!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவர் அந்த அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றதில் இருந்தே ரசிகர்கள் தரப்பிலிருந்து அவர் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாpt web

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேட் செய்தது மும்பை இந்தியன்ஸ். 2 சீசன்களிலும் டைட்டன்ஸை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற ஹர்திக்கை தங்கள் அணியின் கேப்டனாக்கியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

காரணம், 5 ஐபிஎல் கோப்பைகள் வென்ற ரோஹித் ஷர்மா போன்ற ஒருவரை அப்படி சட்டென்று மாற்றியதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை 'boo' செய்தனர். ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும்போதும் தங்கள் கோவத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர்.

ஹர்திக் பாண்டியா
”களம் 8-ல் மும்பை அணியை பொளந்துகட்டிய SRH"-மோசமான கேப்டன்சி..ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு!

ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக்கை ரசிகர்கள் boo செய்ய, விராட் கோலி கூட அப்படிச் செய்யவேண்டாம் என்று ரசிகர்களுக்கு சைகை செய்தார். ஆனாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

ரசிகர்களின் அதிருப்திக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடும் கூட விமர்சனங்களை சந்தித்தது. அவரது பேட்டிங், பௌலிங், கேப்டன்சி அனைத்தும் மிகவும் சுமாராகவே இருக்கிறது. சென்னை உடனான போட்டியின் போது தோனிக்கு எதிராக அவர் வீசிய பந்துகள் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஹர்திக் வீசிய இறுதி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களே சென்னையின் வெற்றிக்கு துணை நின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா மீது தொடரும் விமர்சனங்கள். கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் தொடரும் தடுமாற்றம்!

ஹர்திக்கின் சுமாரான ஆட்டத்திற்கு காரணம் மும்பை ரசிகர்களால் அவர் நடத்தப்படும் விதம் தான் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ராஜஸ்தான் உடனான போட்டியில் டாஸ் போடும்போது, மஞ்ச்ரேக்கர், ஹர்திக்கின் பெயரை சொன்னதும் ரசிகர்கள் ‘Boooo’ என சத்தமிட ஆரம்பித்தனர்.

அப்போது பேசிய மஞ்ச்ரேக்கர் “மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்” என்று ரசிகர்களை எச்சரிக்கை செய்தார்.

ஹர்திக் பாண்டியா
“மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்..”! ஹர்திக் பாண்டியாவை Booed செய்த ரசிகர்களை எச்சரித்த மஞ்ச்ரேக்கர்!

இதேபோல் சென்னை உடனான போட்டி முடிந்த பிறகு, பேசிய கெவின் பீட்டர்சன், “ஹர்திக் பாண்டியா அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதுப்போல் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. ரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிடுவது அவரை பாதித்துள்ளது. இது அவரது ஆட்டத்தையும், கேப்டன்சியையும் பாதித்துள்ளது” என தெரிவித்திருந்தனர்.

ரசிகர்கள் ஹர்திக்கை இவ்வாறு நடத்துவது அவரது ஆட்டத்தின் மீதும் மும்பையின் வெற்றியின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இது ஆட்டத்தின் இறுதி பந்து வரை நீள்கிறது.

சில போட்டிகளின் இறுதிக்கட்டத்தில் ரோகித் சர்மா பீல்டிங் செட் செய்வது போன்ற வீடியோவும் வெளியானது. ஆட்டம் கைமீறிப் போகும்போது ஹர்திக், ரோகித்தின் ஆலோசனையை ஏற்கவும் மறுப்பதில்லை.

ஆனால், மும்பை அணி ரோகித், ஹர்திக் என இருபிரிவாக செயல்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு மும்பை மற்றும் பஞ்சாப் இடையே நடந்த 33 ஆவது லீக் போட்டியை உதாரணமாக கூற முடியும். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மேத்வால் ரோகித் சர்மாவிடம் ஆலோசனை பெற்று, ஹர்திக்கை சட்டை செய்யாமல் சென்ற காணொளி வைரலானது.

பும்ராவும் ரோகித்திடமே ஆலோசனைகளைப் பெற்றார். அது மட்டுமின்றி ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மும்பை இந்தியன்ஸின் பீல்டிங்கை ரோகித் சர்மாவே செட் செய்தார்.

ரோகித் சர்மா பீல்டை செட் செய்ததால்தான் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும், “ஹர்திக்தான் மும்பையின் கேப்டன். ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வழிநடத்தவில்லை. ரோகித்தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தார். ரோகித் முன்னுக்கு வருவது மிக நல்ல விஷயம். பும்ராவும் சிறப்பாக பந்துவீசினார். இந்த மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிக மூத்த வீரர்கள், இறுதியில் அவர்கள் குழுவாக செயல்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

பும்ராவும், ஆட்டத்தில் முன்கூட்டியே பந்துவீசி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்” என ஹர்திக்கிற்கு நேரடியாக மெசேஜ் அனுப்பி இருந்தார்.

எது எப்படி இருந்தாலும் பிரச்னைகள் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவிற்கும் மும்பை இந்தியன்ஸ்க்கும் நல்லது. டி20 உலகக்கோப்பை நெருங்குகிறது என்பதால், ஹர்திக் எனும் ஆல் ரவுண்டரின் தேவை என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜடேஜாவைத் தவிர இளம் ஆல் ரவுண்டர்களாக அறியப்படும் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்றோர் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் பந்துவீசாமல் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்குவதால் ஹர்திக்கின் தேவை மகத்தானது. எனவே வரும் காலங்களில் அனைத்தும் சரியாகும் என நம்புவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com