ஹர்திக் பாண்டியா மீது தொடரும் விமர்சனங்கள். கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் தொடரும் தடுமாற்றம்!

ஹர்திக் பாண்டியா எதிரணியின் கேப்டன் பற்றியோ தங்கள் அணியைப் பற்றியோ பேசாமல், தோனியைப் பற்றிப் பேசியிருப்பது அவருக்கு தன் அணியில் நல்ல ஆதரவு இல்லை என்றோ, தன் அணிக்குள் நல்ல புரிதல் இல்லையோ என்றோ தான் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது
Hardik Pandya
Hardik PandyaKunal Patil

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றதில் இருந்தே ரசிகர்கள் தரப்பிலிருந்து அவர் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். இப்போது அது அடுத்தகட்டத்தை அடைந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்திருக்கிறது. போட்டியின்போது அவருடைய செயல்பாடு வழக்கம்போல் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்த, போட்டிக்குப் பின் அவர் பேசியது விமர்சகர்கள் மத்தியிலும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது.

Hardik Pandya | Virat Kohli
Hardik Pandya | Virat KohliKunal Patil

ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேட் செய்தது மும்பை இந்தியன்ஸ். 2 சீசன்களிலும் டைட்டன்ஸை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற ஹர்திக்கை தங்கள் அணியின் கேப்டனாக்கியது மும்பை இந்தியன்ஸ். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 5 ஐபிஎல் கோப்பைகள் வென்ற ரோஹித் ஷர்மா போன்ற ஒருவரை அப்படி சட்டென்று மாற்றியதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை 'boo' செய்தனர். ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும்போது தங்கள் கோவத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக்கை ரசிகர்கள் boo செய்ய, விராட் கோலி கூட அப்படிச் செய்யவேண்டாம் என்று ரசிகர்களுக்கு சைகை செய்தார். ஆனாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

ரசிகர்களின் அதிருப்திக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடும் கூட விமர்சனங்களை சந்தித்தது. அவரது பேட்டிங், பௌலிங், கேப்டன்சி அனைத்தும் மிகவும் சுமாராகவே இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் பேசியது, விமர்சகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 206 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை இன்னிங்ஸின் கடைசி 4 பந்துகளில் களமிறங்கிய தோனி, ஹர்திக்கின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி 20 ரன்கள் எடுத்தார். கடைசியில் அதுவே மும்பை தோல்விக்கான வித்தியாசமாகவும் அமைந்தது.

Hardik Pandya
வெற்றிக்குக் காரணம் எங்களின் 'இளம்' விக்கெட்கீப்பர் : CSK கேப்டன் புகழாராம்..!

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்று தான். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச் சிறப்பாகப் பந்துவீசியது. பதிரானா இரண்டு அணிகளுக்குமான வித்தியாசமாக அமைந்தார். அவர் தங்கள் திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்தினார். பெரிய பௌண்டரிகளை நன்கு பயன்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல், ஸ்டம்புக்கு பின்னால் இருக்கும் அந்த நபர் (தோனி) அவர்களுக்கு எது வேலை செய்கிறது என்பதை தெரியப்படுத்துகிறார். பதிரான வரும் வரை நாங்கள் வெற்றியை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தோம்" என்று கூறியிருந்தார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் டூல் இருவரும் ஹர்திக்கின் இந்தப் பேட்டியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். "ஹர்திக் பாண்டியா எதிரணியின் கேப்டன் பற்றியோ தங்கள் அணியைப் பற்றியோ பேசாமல், தோனியைப் பற்றிப் பேசியிருப்பது அவருக்கு தன் அணியில் நல்ல ஆதரவு இல்லை என்றோ, தன் அணிக்குள் நல்ல புரிதல் இல்லையோ என்றோ தான் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது" என்று அவர்கள் தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் அந்த ஒரு வாசகத்தைப் பற்றிப் பேசி ஹர்திக்கை கூடுதலாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு இது இன்னும் மோசமான சீசனாகவே மாறிக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com