”களம் 8-ல் மும்பை அணியை பொளந்துகட்டிய SRH"-மோசமான கேப்டன்சி..ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு!

ஒரு காலத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கடப்பாரை அணி என சொல்லப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு படுமோசமான சாதனையை படைத்து மும்பை ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
SRH vs MI
SRH vs MIpt web

ஒரு காலத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கடப்பாரை அணி என சொல்லப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு படுமோசமான சாதனையை படைத்து மும்பை ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

முதல் போட்டியின் போது, முக்கியமான நேரத்தில் ரன்னுக்கு செல்லாத திலக்வர்மா அணியை பாதாளத்தில் தள்ளியது போல், இரண்டாவது போட்டியில், கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பெரிய தவறால் மும்பை அணியை ஒரு மோசமான சாதனைக்கு அழைத்துசென்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அணியாக மாறிய மும்பை அணியின் படுதோல்விக்கு, ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே முதல் காரணமாக அமைந்தது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத்

ஹர்திக்
ஹர்திக்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில், தங்களுடைய முதல் வெற்றியைத்தேடி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஆனால், பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பிய SRH பேட்டர்கள், எதற்காக பந்துவீச்சை தேர்ந்தெடுத்தோம் என வேதனை படுமளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை வெளுத்துவாங்க ஆரம்பித்துவிட்டனர்.

SRH vs MI
குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

மும்பையை திணறவைத்த ஹைதராபாத்

முதலில், ஒரு மோசமான சிதைவுக்கு பிள்ளையார் சுழிபோட்டது அதிரடிக்கு பேர்போன டிராவிஸ் ஹெட் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர்களை எல்லாம், “எதுக்கு டா ஐபிஎல்லுக்கு வந்தோம்” என புலம்பும் அளவுக்கு 9 பவுண்டரிகள் 3 சிச்கர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ஹெட், 18 பந்துகளில் அரைசதமடித்து சாதனை படைத்தார். இதற்குமுன் 20 பந்துகளில் அரைசதமடித்த SRH வீரராக இருந்த டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த டிராவிஸ் ஹெட், 24 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ‘செய்யவேண்டியதை தரமாக செய்துமுடித்துவிட்டு’ வெளியேறினார்.

டிராவிஸ் ஹெட் வெளியேறினாலும் அவர் பற்றவைத்த தீயை, கொளுந்துவிட்டு எறியச் செய்த அபிஷேக் சர்மா, 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என துவம்சம் செய்து 16 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். கொஞ்சநேரத்துக்கு முன்னாடி படைத்த டிராவிஸ் ஹெட்டின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை செய்வதறியாது திகைக்கவைத்துவிட்டார். 23 பந்துகளில் 63 ரன்களை அபிஷேக் சர்மா குவிக்க, 12 ஓவருக்கே 170 ரன்களை எட்டியது சன்ரைசர்ஸ் அணி.

இமாலய இலக்கு

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

ஹெட் மற்றும் அபிஷேக் இருவரும் ஒரு தரமான தொடக்கத்தை அமைத்து வெளியேற, களத்திற்கு வந்த அதிரடி வீரர் ஹென்ரிக் க்ளாசன் காட்டடி அடிக்க ஆரம்பித்தார். 4 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு மும்பை அணிக்கு மைதானத்தை சுற்றிக்காட்டிய க்ளாசன், “களம் எட்டுல மும்பை அணியை சன்ரைசர்ஸ் அணி போட்டு பொளந்துட்டு இருக்காங்க”னு சொல்ற அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியைத் துவைத்தெடுத்தார். இறுதிவரை களத்திலிருந்த க்ளாசன் 34 பந்துகளில் 80 ரன்கள் அடித்து மிரட்ட, 20 ஓவர் முடிவில் 277 ரன்கள் என்ற மாபெரும் டோட்டலை பதிவு செய்து புதிய வரலாற்றை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

SRH vs MI
அதெப்படி CSKக்கு வந்தா மட்டும் இப்படி ஜொலிக்கிறாங்க? 'Sixer’ துபே ஆக மாறிய ஷிவம் துபே-ன் IPL பயணம்!

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியால் அடிக்கப்பட்ட 263 ரன்களே அதிகபட்ச டோட்டலாக இருந்தநிலையில், 10 வருடங்களுக்கு பிறகு அதனை உடைத்தெறிந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அறிமுக போட்டியில் பந்துவீசிய 17 வயது தென்னாப்பிரிக்கா பவுலர் மபாக்கா, 4 ஓவரில் 66 ரன்களை விட்டுக்கொடுத்து அறிமுக போட்டியில் ஒரு மோசமான சாதனையை படைத்தார். 18 சிக்சர்களை அடித்த சன்ரைசர்ஸ் அணி மிரட்டிவிட்டது.

அதிரடி காட்டியும் பலனில்லாமல் ஆனது

திலக் வர்மா
திலக் வர்மா

278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில், அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடி SRH அணிக்கு பதிலடி கொடுத்தனர். ஆனால், பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்வதில் சிறப்பாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ், மும்பை அணியை சரியான நேரத்தில் இழுத்துப்பிடித்தார். SRH அணிக்கு இணையாக 20 சிக்சர்களை அடித்த மும்பை அணி போராடினாலும், இறுதியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 246 ரன்கள் குவித்த மும்பை அணி முடிந்தவரை போராடியது. மொத்தமாக 523 ரன்கள் அடித்த இரண்டு அணிகளும், புதிய சாதனையை படைத்தனர். இரண்டு அணிகள் சேர்த்து 500 ரன்கள் அடிப்பது இதுவே முதல்முறை. அதேபோல ஒரு போட்டியில் முதல்முறையாக 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

தோல்விக்கு காரணம் என்ன?

நமன் திர்
நமன் திர்

மும்பை அணியின் தோல்வியை பொறுத்தவரையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே, SRH அணி இவ்வளவு பெரிய டோட்டலை குவிக்க காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் மட்டுமல்ல கடந்த போட்டியிலும் பும்ராவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தான் முதல் ஸ்பெல்லை வீசினார். அனுபவம் இல்லாத பவுலரான மபாகாவை முதல் ஓவரை வீசவைத்தது மட்டுமில்லாமல், 5வது ஓவரை பும்ராவிற்கு கொடுத்த ஹர்திக் பாண்டியா, SRH அணி 12 ஓவரில் 170 ரன்களை குவிக்கும்வரை பும்ராவை மீண்டும் பந்துவீச கொண்டுவரவே இல்லை. இதனை விமர்சித்திருந்த இர்ஃபான் பதான் “படுகொலை நடந்துகொண்டிருக்கும் போது பும்ராவை ஏன் வெகுதூரத்தில் வைத்திருந்தீர்கள் ஹர்திக்பாண்டியா” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

SRH vs MI
CSK | ‘விட்டது ரெண்டே ராக்கெட்.. LAND ஆனது மக்கள் மனசுல..’ - ரிஸ்வியும் ரெய்னாவும் ஓர் ஒப்பீடு!

ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா என 3 வீரர்களுக்கு இடையே விரிசல் இருப்பதே இத்தகைய மோசமான போக்கிற்கு காரணமாக அமைந்துள்ளது. ஒரு கடப்பாரை அணியாக இருந்த மும்பை அணிக்கு கேப்டனாக வந்திருக்கும் ஹர்திக் பாண்டியா, அணியை கட்டமைப்பதிலும் கோட்டைவிட்டு வருகிறார்.

பும்ரா
பும்ரா

கேப்டன்சியை கையிலெடுத்த ரோஹித் சர்மா

15 ஓவர்களுக்கு எல்லாம் 200 ரன்களை சன்ரைசர்ஸ் அணி அடித்தபோது கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு என்ன செய்யவதென்றே தெரியாமல் போனது, அதனால் கடைசி சில ஓவர்களுக்கு ரோகித் சர்மா தான் கேப்டன்சியை பார்த்துக்கொண்டார். அப்போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஃபீல்ட் செட்டிங்கில் ஆலோசனை வழங்கிய ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியாவை பவுண்டரி லைனில் நிற்க சொல்லி அனுப்பிவைத்தார். கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அனுப்பிய நிலையில், இந்த போட்டியில் அப்படியே தலைகீழாக நடந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் “இதைத்தான் கர்மானு சொல்லுவாங்க ஹர்திக்” என்று விமர்சித்து வருகின்றனர். போட்டி முடிந்த பிறகு மும்பை அணி ஸ்டாஃப்கள் மற்றும் உரிமையாளர் அனைவரும் ரோகித்திடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com