“சம்பவம் தான.. செஞ்சுட்டா போச்சு” வரலாற்று சாதனைகளை எழுத ஆரம்பித்த கில்..
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதி வரை போராடியும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, அணியில் சில மாற்றங்களை செய்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269) உதவியால் 587 ரன்கள் சேர்த்தது. அவருக்கு உறுதுணையாக இருந்த ஜடேஜாவும் 89 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஜேமி ஸ்மித்தும் ஹேரி ப்ரூக்கும் 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்,. அவர்களது உதவியால் இங்கிலாந்து அணி 400 ரன்களை எட்டியது. சிறப்பாக பேட்டிங் செய்த ஜேமி ஸ்மித் 184* ரன்களையும், ஹேரி ப்ரூக் 158 ரன்களையும் அடித்திருந்தனர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க முனைந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட ஒருநாள் ஆட்டம் போல ஆடிக்கொண்டிருந்தனர். கே.எல்.ராகுல் 55 ரன்கள், ரிஷப் பந்த் 65 ரன்கள் என தங்களது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஷப் பந்த் தனது இன்னிங்ஸில் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். முதல் இரண்டு சிக்சர்கள் அடித்தபின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, இங்கிலாந்து மண்ணில் 23 சிக்சர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
இதன்மூலம், வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்திருந்த பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் ரிஷப். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் 21 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக 23 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
நிதானம் + அதிரடி = கில்
ரிஷப் பந்த் வெளியேறிய பின் ஜடேஜாவுடன் கைகோர்த்த கில், நிதானம் + அதிரடி என தனது பாணியில் ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 129 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை அடித்து தனது 7ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தன் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார் கில். டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு இன்னிங்ஸில் இரட்டை சதமும், மற்றொரு இன்னிங்ஸில் சதமும் அடித்த வீரர்களின் பட்டியலில் ஒன்பதாவது வீரராக இணைந்திருக்கிறார் கில். இந்திய அளவில் சுனில் கவாஸ்கருக்குப் (vs WI 1971) பின் இரண்டாவது இந்திய வீரராகவும் இந்த சாதனையில் இணைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சுனில் கவாஸ்கர், விராட் கோலிக்குப் பின் ஒரே டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த மூன்றாவது இந்திய கேப்டனாகவும் சாதனை படைத்திருக்கிறார்.
ரெக்கார்ட் ப்ரேக்கர்
ஏற்கனவே, இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியொன்றில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்திருந்த கில் தற்போது Legacy ரெக்கார்ட் ஒன்றையும் முறியடித்திருக்கிறார். இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக கில் மாறியிருக்கிறார். முன்னதாக, 1979 ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் ஒரே டெஸ்ட் போட்டியில் 221 ரன்களை எடுத்திருந்தார். இதுவே இத்தனை ஆண்டுகால சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்திருக்கிறார் கில். மேலும், ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் கில்லும் நுழைந்திருக்கிறார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடரில் கில் பேட்டிங் செய்தவிதம் அவர் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கு புதிய பக்கம் எதோ ஒரு போட்டியில் திறக்கும்.. அப்படி, புதிய பக்கம் ஒன்றைத் திறந்து அதில் தனது சாதனையை கில் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
கில் ஆட்டமிழந்ததும் களத்திற்கு வந்த நிதிஷ் ரெட்டி 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். பின் வாஷிங்டன் களத்திற்கு வந்தாலும் அடுத்த ஒரு ஓவருக்குள் இந்திய அணி டிக்ளேர் செய்தது. கிட்டத்தட்ட 608 ரன்கள் எனும் இமாலயத்தை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.