கன்னட மொழி விவகாரம்.. கருத்து தெரிவிக்க கமலுக்குத் தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
கன்னட மொழியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு, “கன்னடம் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக்கூறி கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்னடம் மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க தடை விதித்ததுடன், மனு குறித்து ஆகஸ்ட் 30க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குறிப்பாக, கன்னட மொழியை விட மொழியியல் மேன்மையைக் கோரும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். “கன்னட மொழி, இலக்கியம், நிலம் மற்றும் கலாச்சாரத்தைப் புண்படுத்தும் வகையில் அல்லது, அவதூறு செய்யும் வகையிலோ கமல்ஹாசன் எந்த விதமான அறிக்கைகளையோ, கருத்துகளையோ கமல்ஹாசன் எழுதவோ, பதிவிடவோ கூடாது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் ஆகஸ்ட் 30 வரை அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
நடந்தது என்ன?
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். அது, தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ்மொழியில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரது பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்களைக் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல் கொடுத்திருந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் விளக்கமளித்த கமல், “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” எனத் தெரிவித்திருந்தார். எனினும், “இந்த விஷயத்தில் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் ’தக் லைஃப்’ படம் வெளியாகாது” என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதேசமயத்தில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் கமலின் பேச்சுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த நீதிபதி, “ஒருவரின் கருத்தில் தவறு இருக்கிறது என்றால், அதுதொடர்பாக விவாதம் நடக்கட்டும். அவர் கூறியது தவறு என்று மக்கள் சொல்லட்டும். ஆனால், உயர்நீதிமன்றம் அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென ஏன் சொல்ல வேண்டும். அது நீதிமன்றங்களின் வேலை அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.