வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் சிக்சர்கள்.. வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்!
சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தோற்று WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.
இரண்டு அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் போராடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 சதங்களை அடித்தபோதும் தோற்றது ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களம்கண்டு போராடி வருகிறது இந்திய அணி.
சுப்மன் கில் இரட்டை சதம்.. 587 ரன்கள் குவித்த இந்தியா!
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269) உதவியால் 587 ரன்கள் சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தாலும் 6வது விக்கெட்டுக்கு 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் இங்கிலாந்தை 407 ரன்கள் சேர்க்க உதவினர். ஜேமி ஸ்மித் 184* ரன்களும், ஹாரி ப்ரூக் 158 ரன்களும் அடித்து அசத்தினர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 4வது நாளில் 212/3 என்ற வலுவான நிலையில் பேட்டிங் செய்துவருகிறது. 392 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்னும் 100 ரன்கள் அடித்து டிக்ளார் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் 51 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 48 ரன்களுடனும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
புதிய வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்..
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய நாள் ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய பண்ட் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் 23 சிக்சர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்தார் ரிஷப் பண்ட்.
வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்திருந்த பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார் ரிஷப் பண்ட். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் 21 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக 23 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்.